Get Nandalaalaa atom feed here!

Thursday, April 21, 2005

இந்தியா, பாகிஸ்தான்: நிகழ்வு - இரண்டு!

நான்காண்டுகளுக்கு முன்பும் முஷாரப் இந்தியா வந்திருந்தார். அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாய், முஷாரப் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால், முஷாரப்பின் அப்போதைய இந்திய பயணம், தாஜ்மஹால், அவர் பிறந்த வீடு, இவைகளை பார்த்ததுடன் வேறு பலனின்றி தோல்வியில் முடிவடைந்தது. பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால், வழக்கமான கூட்டறிக்கையும் வெளியிடப்படவில்லை.

அதனுடன் ஒப்பிடும் போது இப்போதைய பேச்சு வார்த்தை வெற்றிகரமானது என்றே கொள்ளலாம். ஆனால் இது இரு நாடுகளுக்கு இடையேயான நீண்ட கால பிரச்சினைகளுக்கு இறுதி தீர்வாக கொள்ளமுடியாது. மாறாக இது ஒரு நல்ல துவக்கம் மட்டுமே.

கடந்த காலங்களில் இருந்த பாக்கிஸ்தானின் தலைவர்களுடன் ஒப்பிடும் போது, முஷாரப் அதிக பலம் வாய்ந்தவராகவே தென்படுகின்றார். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்களுக்கு உள்ள பல பலவீனங்கள் இவருக்கு இல்லை. குறிப்பாக பாக்கிஸ்தானில் உள்ள மத அடிப்படைவாத வலதுசாரிகளின் குரலுக்கு செவிமடுக்க வேண்டிய கட்டாயம் இவருக்கு மிகக்குறைவே.

இதன் காரணமாகவே முஷாரப்பினால் துணிந்து இந்தியாவுடனான உறவை மேம்படுத்த முயற்சி மேற்கொள்ள முடிகின்றது. இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்வது இந்திய அரசின் கைகளில் உள்ளது.

அவ்வகையில் மன்மோகன் தலைமையிலான அரசும் சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவே கொள்ளலாம்.

இரு நாடுகளுமே கஷ்மீர் பிரச்சினையை தற்போதைக்கு பின் தள்ளி, ஏனையவற்றில் கவனத்தை செலுத்துவது வரவேற்புக்குறியது. இதன் மூலமே கூட கஷ்மீர் பிரச்சினையின் தீவிரம் குறையவும் வாய்ப்புண்டாகலாம்.

ஆனாலும் கஷ்மீர் முற்றாக புறந்தள்ளக்கூடிய ஓர் விஷயமல்ல. அது என்றைக்குமே புகைந்துகொண்டிருக்கும் எரிமலை. வெடிக்கும் ஆபத்து எந்நேரமும் காத்திருக்கிறது. விரைவில் கஷ்மீர் பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக எடுத்துகொள்ளப்பட வேண்டும். அப்படி கஷ்மீர் பிரச்சினையை கையாலும் நேரத்தில் இரு நாடுகளின் உறவு இப்போதைய நிலையிலிருந்து மிகவும் பண்பட்டிருக்க வேண்டும். அந்நிலையை அடைவதற்கு இப்போதிலிருந்து இரு நாட்டு செயல்பாடுகளும் வழி செய்ய வேண்டும்.

இப்போதைக்கு கட்டுப்பாட்டு எல்லை ஊடாக பயணிகள் பேருந்து, சரக்கு லாரிகள் இயக்க ஒப்புக்கொண்டிருப்பது, இரண்டு பகுதி மக்களும் சந்தித்துகொள்ள எல்லையில் வசதி செய்து தருதல், இரு நாட்டு சிறைகளிலும் உள்ள கைதிகளை விடுதலை செய்தல் எல்லாம் இரு நாட்டு மக்களுக்கிடையே ஒரு புரிந்துணர்வு ஏற்படுத்த உதவும்.

போரின் மூலமாக அடையக்கூடிய பலன் எதுவும் இல்லை என்பதை இரு நாட்டு மக்களும் உணரச்செய்வதாக இக்காலக்கட்டத்தில் செயலாற்றவேண்டியது, இரு நாட்டு அரசுகளுக்கும் முக்கியமானது. ஆனால் இவ்விரு நாடுகளிலுமே, கஷ்மீர் பிரச்சினையை ஊதி பெரிதாக்கும் சக்திகள் உள்ளன. அச்சக்திகளுக்கு கஷ்மீர் என்றென்றைக்கும் புகைந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் அவர்களின் அரசியல் எதிர்பார்ப்புகள் கைகூடும்.

இப்போது கூட பாக்கிஸ்தானிய எதிர்கட்சிகள் கஷ்மீர் விடுத்து மற்றவைகளை பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தியாவிலும் ஹுரியத் (இது இந்திய உளவு அமைப்பால் உருவாக்கப்பட்ட ஒன்று) அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆயுதமேந்திய குழுக்களும் எதிர்விணையாற்றலாம். மேலும் கஷ்மீருக்கு வெளியேயுள்ள வேறு சில அடிப்படைவாத அமைப்புகளும் கஷ்மீர் பிரச்சனையை எழுப்பலாம். இதற்கு இந்திய அரசு தரப்பு பணிந்துவிடக்கூடாது.

இப்போதய நிலயில் இரு நாடுகளுக்கிடையேயான இறுக்கம் தளர்ந்தால், இவைகளின் ராணுவத்திற்கான செலவு குறைந்து, மக்கள் நலன் சார்ந்த கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு திட்டங்களை அதிகரிக்கலாம். இது இரு நாடுகளையுமே பொருளாதார மேம்பாட்டிற்கு இட்டுச்செல்லும்.

ஏற்கனவே பொருளாதார சுழலில் சிக்கியுள்ள பாக்கிஸ்தான், ஐ.நா பாதுகாப்பு சபை ஆசையில் உள்ள இந்தியா ஆகிய இரு நாடுகளுமே இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.

3 Comments:

At Thu Apr 21, 02:22:00 PM 2005, Anonymous Anonymous said...

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாக் முதலில் நிறுத்த வேன்டும். காஷ்மீரிலிருந்து பாக் முழுவதுமாக வெளியேறி வேண்டும். ஆக்ரமிக்கப்பட்ட பாரத மண்ணைவிட்டு பாக் தானாக வெளியேறாவிட்டால், நாம் ராணுவ பலத்தை பயன்படுத்தி பாக்கிற்கும், இஸ்லாமிய தீவிரவாதைகளுக்கும் புத்தி புகட்டவேண்டும்.

முஸ்லிம் தீவிரவாதிகளின் தலைவன் முஷாரபை பாரதம் நம்பக்கூடாது.
-ஓ

 
At Thu Apr 21, 07:00:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

அனானிமஸ்,
கஷ்மீர் பிரச்சினையின் தீர்வு பாகிஸ்தானிடமோ, இந்தியாவிடமோ மாத்திரமில்லை. அது கஷ்மீரிகளின் கைகளில் உள்ளது. கஷ்மீரிகளின் உணர்வுகள் மிதிக்கப்ப்டும் வரை எவ்வகையிலும் தீர்வை எட்ட முடியாது.
அதை இரு நாடுகளும் உணரும் போது தீர்வு தானே கிடைக்கும்.

போரில் ஈடுபடும் நிலையில் இரு நாடுகளுமே இல்லை என்பதே மகிழ்ச்சிக்குறிய உண்மை.

மற்றபடி உங்களைப்போல் உணர்ச்சி வயப்பட்டு அலச வேண்டிய விடயமல்ல இது.

 
At Thu Apr 21, 10:04:00 PM 2005, Anonymous Loyal Patriotic said...

எல்லை தாண்டிய பயங்கரவாதிகள விட நாட்டினுள்ளே உள்ள தீவிரவாதிகளே ஆபத்தானவர்கள்.
காஷ்மீர் இஸ்லாமியர்கள் பாரத மண்ணில், பாரத மக்களின் வரிப்பணத்தில் வாழ்து பாகிஸ்தான் ஆதரவாளராய் உள்ள்து வ்ருத்தமானது.
நம் மண்ணை காக்கும் ராணுவத்தை அதன் பலத்தை குறைத்து மதிப்பிட் வேண்டாம்.
ஜெய் ஹிந்த்.
-ஓ

 

Post a Comment

<< Home