Get Nandalaalaa atom feed here!

Friday, April 22, 2005

ஜப்பானிய எதிர்ப்பு - சீன தெருக்களில்.

சீன தெருக்களில் மக்கள் ஆர்ப்பாட்டம். வார கடைசி நாட்களில், சீன நகர தெருக்களில் மக்கள் கூடுகிறார்கள். அது சில நூறுகளிலிருந்து 20,000 மக்கள் வரை கொண்ட கூட்டமாக உள்ளது. ஜப்பானிய வர்த்தக நிறுவனங்கள் மீது கல்லெறிகிறார்கள். ஜப்பானிய பொருட்களை வாங்காதிருக்கும் படி கோஷமிடுகிறார்கள். பேரணியாக சென்று தூதரக கட்டிடத்தின் முன் ஜப்பான் அரசை எதிர்த்து கோப கோஷமிடுகிறார்கள். ஜப்பானுக்கு ஐநா பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பினர் கோரிக்கையை எதிர்த்தும் கோஷமிடுகிறார்கள். உச்சகட்டமாக தக்காளி, முட்டை, கல் ஆகியவை எறியப்படுகின்றது.


இதில் ஆச்சரியப்படவைப்பது, இவை அனைத்தும் சீனாவில் நடப்பது தான். டியனன்மென் சதுக்கம்-நசுக்கப்பட்ட எதிர்ப்புக்குரல்சீனாவில் தெருவில் இறங்கி கோஷமிடுவதோ, பேரணி நடத்துவதோ சாதாரண விடயமில்லை. இதற்கான அரசு அனுமதி மறுக்கப்படுவதுடன், அனுமதி கேட்டவர்களை சிறையிலடைப்பதும் அங்கே சாதாரண நிகழ்வு. மீறி ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களை சீன அரசு கையாளும் விதத்திற்கு ஜூன் 6 1989ம் ஆண்டில் டியனன்மென் சதுக்கத்தில் கூடிய மாணவர்களை சீன அரசு கையாண்ட விதமே சாட்சி. ஆனால் இப்போது அரசு அனுமதியுடனும், (பெரும் அசம்பாவாதங்களை தவிர்க்க வேண்டி) அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு துறையினரின் கட்டுப்பாட்டிலும் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. இதன் காரணமாகவே இது சீன அரசே ஏற்பாடு செய்த நிகழ்வுகள் என ஜப்பானிய ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.

இந்த குற்றச்சாட்டில் முழு உண்மை இல்லை. மக்களை தெருவில் இறங்க அனுமதித்ததின் மூலம் ஜப்பானிய அரசுக்கு தன் எதிர்ப்பை சீன அரசு வெளிப்படுத்தியுள்ளது என்றே கொள்ளவேண்டும்.

சீனாவின் இந்த கோபத்திற்கு காரணம், சமீபத்தில் ஜப்பானிய அரசாங்கம் ஹிடோகி டொஜோ படத்துடன் சீன ஆர்ப்பாட்டக்காரர்கள்அனுமதித்த நடுநிலை பள்ளி பாட புத்தகம் ஒன்று. இதில் ஜப்பானிய ராணுவம் சீனாவை ஆக்கிரமித்தபோது விரும்பத்தகாத 'சில சம்பவங்கள்' நடைபெற்றதாக எழுதப்பட்டுள்ளது. இப்படி 'சில சம்பவங்கள்' என குறிப்பது ஜப்பான் செய்த போர்க்கால அக்கிரமங்களை மறைக்கும் ஒரு முயற்சி என சீன தரப்பு சொல்கிறது. இது சீனாவை மட்டுமின்றி இரண்டாம் உலக போர் முடிவதற்கு முன் ஜப்பானால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மற்ற ஆசிய நாடுகளையும் அதிருப்திக்குள்ளாக்கி உள்ளது.

ஜப்பான் எதை மறைப்பதாக சீனா குற்றம் சாட்டுகிறது? ஜப்பானிய ராணுவம் 1930ல் மஞ்சுரியாவை கைப்பற்றியபின் 1937ம் ஆண்டு சீனாவின் நாஞ்சிங் பகுதிக்குள் நுழைந்தது. அங்கே ஜப்பானிய ராணுவம் மூன்றே வாரங்களில் கொன்று குவித்த சீனர்களின் எண்ணிக்கை 3 லட்சம் (1.5 லட்சம் என்பது ஜப்பானிய தரப்பு). (இது 'நாஞ்சிங் படுகொலை' என்று வரலாற்றில் குறிக்கப்படுகிறது.) பல்லாயிரக்கணக்கில் பெண்கள் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியது ஜப்பானிய ராணுவம். மேலும் ஆயிரக்கணக்கில் பெண்களை சிறைபிடித்து ஜப்பானிய ராணுவத்தினருக்கு பாலியல் கொத்தடிமைகளாக ஆக்கியது. இப்படிப்பட்ட கோர தாண்டவத்தை 'சில சம்பவங்கள்' என மறைப்பதாக சீனா நினைக்கிறது.

எதிர்வினையாக ஜப்பானில், சீன அரசை எதிர்த்தும் ஆர்ப்பட்டமும், சீன தூதருக்கு பார்சலில் பிளேடு, சிவப்பு சாயமும் அனுப்புவதும் நடந்துள்ளது. சீன வர்த்தக நிறுவனங்களின் மேல் தாக்குதலும் நடைபெற்றுள்ளன. ஆனால் இதற்கு ஜப்பானிய அரசு வருத்தம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானிய அரசு, சீனாவில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு சீன அரசின் தூண்டுதலே காரணம் என்றும், ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர அங்கத்தினராகும் ஜப்பானின் கோரிக்கையை தடுக்கவே சீன அரசு இவ்வாறு செய்வதாகவும் குற்றம் சாட்டுகிறது. (ஜப்பான் ஐநா பா.சபையில் நிரந்தர உறுப்பினராவதற்கு சீன அரசு வெளிப்படையாகவே தன் எதிர்ப்பை தெரிவித்து வந்துள்ளது.) மேலும் சீன அரசு சீனாவில் வாழும் ஜப்பானியர்களையும், வர்த்தக நிறுவனங்களையும் காக்க வேண்டும், அத்துடன் ஜப்பானிய தூதரகம், தூதர் இல்லம், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றின் மேல் நடைபெற்ற வன்முறைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரியது.

இந்த கோரிக்கைகளுடன் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் நொபுடக மச்சிமுரா கடந்த 17ம் தேதி சீனா விரைந்தார். சீன வெளியுறவு அமைச்சர் லீ ஜவோக்சிங்-ஐ சந்தித்து ஜப்பானிய அரசின் கோரிக்கையை வைத்தார். ஆனால் சீன அரசு அதை முற்றாக நிராகரித்ததுடன், ஜப்பானின் போர் கால அக்கிரம வரலாற்றை ஜப்பான் நேராக எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறிவிட்டது. (இக்கருத்தை இந்தியா வந்திருந்த சீன பிரதமர் வென் ஜியாபவ் புது டெல்லியில், பத்திரிக்கையாளர்களுடன் பேசும் போது தெரிவித்துள்ளார்) இரு நாட்டு உறவுகளும் சீரடைய ஜப்பான் இதை செய்தே ஆகவேண்டுமென சீனா வலியுறுத்துகிறது. 19ம் தேதி, தோல்வியுடன் சீன பயணத்தை முடித்தார் மச்சிமுரா.

ஐநா பொது செயலாளர் கோஃபி அனன் இரு நாடுகளும் தங்களுக்கிடையேயான கடுமையை குறைத்து, பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையே (ஏப் 15) ஜப்பானிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கைவிடும்படி சீனர்களை சீன அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆனாலும், 16,17 தேதிகளில் சீனாவில் பல நகரங்களில் ஆர்பாட்டங்கள் நடந்தது. இது வரை நடந்தவற்றில் மிகப்பெரியதாக, 20,000 பேர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் ஒன்று ஷாங்ஹை நகரில் நடைபெற்றது. இத்துடன் தொடர்ந்து மூன்றாவது வாரமாக (வார கடைசி நாட்களில் மட்டும்) ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது.

இப்பொதைக்கு ஜப்பானிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் சீனாவில் உடனடியாக முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. ஒருவேலை ஆர்ப்பாட்டங்கள் முடிவுற்றாலும், ஜப்பான் மேலான வெறுப்புணர்வு சீன மக்களின் மனதில் தொடருவதற்கான காரணங்கள் அழிக்கப்படாமல் அப்படியே உள்ளன என்பதே வருத்தத்திற்குறியது.

தற்போதய சூழலில் இரு நாட்டு உறவுகளும் மேலும் மோசமடையும் சாத்தியக்கூறுகளே தென் படுகின்றன.
(தொடரும்)
தொடர்ச்சி: மோசமாகும் அண்டை நாட்டு உறவுகள் - ஜப்பான்.

2 Comments:

At Fri Apr 22, 07:50:00 PM 2005, Anonymous Anonymous said...

//இந்தியா ஐ.நா உறுப்பினர் ஆவதற்கு சீனாவின் பிரதமர் ஆதரவு தெரிவித்துள்ளார். //

:@?

 
At Sat Apr 23, 12:32:00 AM 2005, Blogger ~Nandalala~ said...

புதியவன்,
வந்து வாசித்தமைக்கு நன்றி!

ஜப்பான் தன்னுடன் ஜெர்மன், பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளையும் சேர்த்து கொண்டு ஆதரவு வேட்டை நடத்துகின்றது.

ஆகவே இதில் ஜப்பானுக்கு எதிராக இந்தியா என்பதாகாது.

சீனாவின் ஆதரவை விட எதிர்ப்பே அதிக சக்தி வாய்ந்தது. இது ஜப்பானுக்கும் தெரியும்.

தொடர்ந்து படியுங்கள். அடுத்தடுத்த பதிவில் இது பற்றி விளக்குகின்றேன்.

நன்றி,
நந்தலாலா

 

Post a Comment

<< Home