மோசமாகும் அண்டை நாட்டு உறவுகள் - ஜப்பான்.
இரண்டாம் உலக போருக்கு பின், இரு நாடுகளுக்குமிடையே முதன்முதலாக 1972ல் தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டன. அதற்கு பின் இன்று வரை 17 முறை ஜப்பான் தன் தவறுகளுக்காக மன்னிப்பு கேட்டுள்ளது.
கடைசியாக 2001ல் சீனா சென்ற கொய்ஜுமியும் ஜப்பானின் கடந்த கால தறுகளுக்காக சீன மக்களிடம் மன்னிப்பு கேட்டார். 2001க்கு பிறகு, ஜப்பானிய பிரதமர் சீனாவுக்கு வருகை தருவதற்கு ஒப்புதல் சீன அரசு அளிக்கவில்லை. (1998ல் சீன அதிபர் ஜியங் ஜமின் சென்றது தான் ஒரு உயர்மட்ட சீன தலவரின் கடைசி ஜப்பான் பயணம்) இதற்கு காரணம் கொய்ஜுமியின் யஸுகுனி ஆலய பிரவேசம் தான்.
யஸுகுனி ஆலயம், போரில் இறந்த ஜப்பானிய போர் வீரர்களின் ஆன்மா உறையும் இடமாக ஜப்பானியர்களால் வணங்கப்பட்டு வருகிறது. போரில் மரணம் அடைந்தவர்களின் பெயர்கள் (சுமார் 2.5 மில்லியன்) அங்குள்ள ஆன்மாக்களின் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது. போரிட்டு இறந்தவர்களுடன், இரண்டாம் உலக போரில் ஜப்பான் தோல்வி அடைந்ததை அவமானமாக கருதி தற்கொலை செய்துகொண்டவர்களின் பெயர்களும் இதில் அடக்கம்.
ஆனால் இதில் சர்ச்சைக்குறியது, முன்னாள் ஜப்பான் பிரதமர் ஹிடோகி டொஜொ உள்ளிட்ட 14 பெயர்கள் அங்குள்ள ஆன்மாவின் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதுதான். இந்த 14 பேரும் நேச நாடுகளால் டோக்யோ போர்க்குற்ற விசாரணை முடிவில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டவர்கள். இதில் ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஹிடோகி டொஜொ மரண தண்டனை விதிக்கப்பட்டவர். இவர் பெயரை 1978ம் ஆண்டு ஆன்மாவின் புத்தகத்தில் சேர்த்தது இதை நிர்வகித்து வரும் அமைப்பு. (இந்த ஆலயம் ஜப்பானிய அரசின் நேரடி நிர்வாகத்தில் இல்லை) இது ஜப்பானின் போர்க்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட நாடுகளின் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. (இந்த பெயர்களை நீக்குவதற்கு ஜப்பானிய பாரளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டும், தீவிர ஜப்பானிய தேசிய வாதிகளால் எதிர்க்கப்பட்டு, முயற்சி தோல்வியடைந்தது)
இத்தகைய பின்னணி கொண்ட யஸுகுனி ஆலயத்திற்கு ஜப்பான் பிரதமர் கொய்ஜுமி நான்கு முறை (2001ல் கொய்ஜுமி பதவியேற்றதிலிருந்து ஒவ்வொரு வருடமும், இதுவரை 4 வருடங்களில் 4 முறை) சென்றது, (உலக அமைதிக்காக பிரார்த்திக்கவே அங்கு சென்றதாக கொய்ஜுமி விளக்கம் கூறினாலும்) சீனா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளின் எதிர்ப்பை பெற்றது.
(இதற்கிடையே, கடந்த பிப்ரவரி 20ல் ஜப்பான் அமெரிக்காவுடன் சேர்ந்து, தய்வன் ஒரு பொது பாதுகாப்பு பிரச்சினை என்றும், அதை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கவேண்டும் எனவும் கூறியது. இது சீனாவுக்கு உச்சகட்ட கோபத்தை ஏற்படுத்தியதில் ஆச்சர்யமில்லை. 1949ல் சீனாவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சி ஏற்பட்டதும், தய்வன் (தீவு) தன்னை பெரு நில சீனாவிலிருந்து துண்டித்துக்கொண்டு, தான் ஒரு சுதந்திர நாடு என பிரகனடப்படுத்தியது. ஆனால் தய்வனின் சுதந்திர பிரகடனத்தை ஏற்க சீனா மறுத்துவிட்டது. மறுபடி சீனாவுடன் இணைத்துக்கொள்வது என்றும் முடிவெடுத்தது. தற்போதைய நிலையில் தய்வன் சுயாட்சியுடன் கூடிய சீனாவின் ஒரு பகுதி. ஆனாலும் அமெரிக்கா ஆதரவுடன் தய்வான் அவ்வப்போது சீனாவை சீண்டுவதும் வழமைதான். இம்முறை ஜப்பானும் சேர்ந்துகொள்ள, சீனா கடும் எதிர்வினையாற்றியது. அது தயவன் தன்னை தனி நாடு என அறிவித்துக்கொள்ளுமானால் அதன் மீது ஆயுதப் பிரயோகம் -போர்- செய்ய வகை செய்யும் ஒரு சட்டத்தை சீன பாராளுமன்றம் பிப்ரவரி 2005ல் இயற்றியது.)
1948, ஆகஸ்ட் 6 மற்றும் ஆகஸ்ட் 9. இந்த இரு நாட்களில் தான் ஹிரோஸிமாவிலும், நகஸகியிலும் அமெரிக்காவின் வான் படை, உலகின் முதல் மற்றும் கடைசி (இன்று வரை) அணு ஆயுத தாக்குதலை நடத்தியது. அது ஹிரோஸிமாவில் 140,000 பேர்களையும், நகஸகியில் 70,000 பேர்களையும் பலி கொண்ட, உலகின் மிக கொடூரமான பேரழிவினுள் ஒன்றாக ஆனது. அதுவே உலகப்போரை முடிவுக்கு கொண்டுவந்தது. அணு ஆயுதத்தின் பயங்கரத்தையும் உலகுக்கும், போரின் கொடுமையை ஜப்பானியர்களுக்கும் உணர்த்தியது. அத்துடன் ஜப்பானியர்களின் ஆதிக்க வெறிக்கும், போரின் பெயரால் அவர்கள் நடத்தி வந்த மனித இனப்பண்பிற்கு ஒவ்வாத அட்டூழியங்களுக்கும் ஒரு முடிவு கட்டியது.
அன்று முதல் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தன்னை ஓர் போரை வெறுக்கும் ஒரு தேசமாக, அமைதி நேசனாக வெளிக்காட்டி வந்துள்ளது ஜப்பான். (இந்தியாவும், அதனை தொடர்ந்து பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக அறிவித்தபின், இரு நாடுகளுக்கும் எதிர் நடவடிக்கையில் இறங்கியதில் முதன்மையானது ஜப்பான். அந்த அளவிற்கு மற்ற நாடுகளின் ஆயுத குறைப்பை அந்நாடு வலியுறுத்தி வருகிறது) இதனடிப்படையிலேயே, உலக வங்கி, ஐநா வின் வளர்ச்சி பணிகள் பலவற்றுக்கும் பல பில்லியன் டாலர்களை வாரி வழங்கி வருகிறது ஜப்பான். ஐநாவின் மொத்த வரும்படியில் 20% ஜப்பானின் பங்களிப்பாகும் (இது அமெரிக்காவிற்கு அடுத்த நிலை). உலகமெங்கும் பல வளரும் நாடுகளுக்கும் பண உதவி செய்து வருவதும், கொடையளிப்பதுமாக தன்னை உலக வளர்ச்சியை விரும்பும் ஒரு தேசமாக மற்ற நாடுகளுக்கு உணர்த்த முயல்கிறது. (பயணாளர்கள் பட்டியலில் இந்தியாவும், இலங்கையும் உண்டு)
ஆனால், இத்தகைய செயல்களுக்கு முரண்பாடாக, ஜப்பானிய பிரதமர்கள் யஸுகுனி ஆலயம் செல்வது பார்க்கப்படுகிறது. இவை ஜப்பானியர்கள் போர் குற்றங்களையும் அத்துமீறல்களயும் ஓர் வீரச்செயலாகவும், போர்க்குற்றவாளிகளை புனிதர்களாகவும் போற்றுவதாகவே ஜப்பானியர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிகிறது. அவர்களின் மேல் சந்தேகம் கொள்ளவைக்கும் இச்செயல்கள் அண்டை நாடுகளுடனான உறவை மேலும் சீர்குலைக்கவே செய்கிறது. இது ஜப்பானியர்களின் நம்பகத்தன்மையை சந்தேகிக்க ஏதுவாகிறது.
இப்படி தன் அண்டை நாடுகளுடனான உறவை, தொடர்ந்து மோசமாக்குவதன் மூலம் ஜப்பான் சாதிக்க விரும்புவது என்ன?
(தொடரும்)
ஜப்பானின் மன்னிப்பு கோரல் - முரண்பாடு.
2 Comments:
நல்ல விரிவான பதிவு. ஜப்பானின் இப்போதய சில நடவடிக்கைகள் விமர்சிக்க படவேண்டியதாயினும், நீங்கள் குறிப்பிட்டது போல் ஜப்பான் தன் தவறுகளுக்காக பலமுறை மன்னிப்பு கேட்டு வருவது ஒரு உதாரணச் செயல்பாடாய் தெரிகிறது. தொடர்ந்து ஜப்பான் கொரிய மக்களிடம் மன்னிப்பு கேட்பதும் ஆரோக்கியமான விஷயங்கள்.
நன்றி ரோசாவசந்த்.
நீங்கள் சொன்னது போல் மன்னிப்பு கேட்பது (குறைந்தபட்சமாய் செய்த தவற்றை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம்) பாராட்டுக்குரிய ஒன்றே. இவ்விஷயத்தில் ஊடாக பரவி நிற்கும் இனவாத சர்வதேச அரசியலே நான் சுட்டிக்காட்ட விரும்புவது.
நன்றி,
நந்தலாலா
Post a Comment
<< Home