தமிழக இடைத் தேர்தல்: ஒரு பார்வை.
2006 ல் நடைபெறவுள்ள சட்டசபை பொது தேர்தலுக்காண முன்னோட்டமாகவே இந்த இடைத் தேர்தலை அரசியல் கட்சிகள் அணுகியுள்ளன.
ஆளுங்கட்சியான அ.தி.மு.க தனது 24 அமைச்சர்களை, தொகுதிக்கு 12 பேர் என, 2 தொகுதிக்கும் பொறுப்பாக நியமித்துள்ளது.
எதிர்கட்சியான தி.மு.க இத்தேர்தல் முடிவுகள் கூட்டணியின் பலத்தை நிரூபிப்பதுடன், கூட்டணி கட்சிகளிடையேயான ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பு என்றும் கூறியுள்ளார். "ஆட்சி மன்றமெனும் பூங்காவிற்கு செல்லும் ஒற்றையடி பாதை" என கூறியுள்ள கருணாநிதி, தி.மு.க வின் 5 மத்திய அமைச்சர்களை இத்தொகுதிகளில் தேர்தல் பணிகளுக்கு நியமித்திருக்கிறார்.
வேட்பாளர் தேர்வு:
சென்ற நாடாளுமன்ற தேர்தலில், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் புது முகங்களை அறிமுகம் செய்து, கட்சிக்காரர்களுக்கு அதிர்ச்சியும், ஏனையோருக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தினார் ஜெயலலிதா. ஆனால் இம்முறை, இடைத்தேர்தலில் இறந்தவர் வாரிசை நிறுத்துவது என்ற அரசியல் மரபை அப்பட்டமாக கடைபிடித்துள்ளார்.
இது அனுதாப வாக்கை பெற்று தருவதுடன், உட்கட்சி அதிருப்தியையும் தவிர்க்கும். இது ஜெயலலிதா இந்த முறை எவ்வித சோதனை முயற்சியிலும் இறங்காமல், தனது வழக்கமான குறுட்டு தன்னம்பிக்கையையும் தவிர்த்து வெற்றி ஒன்றையே குறி வைத்து தேர்தலை எதிர் கொள்வது தெளிவாகிறது.
தி.மு.க தரப்பில் வெளியில் அதிகம் தெரியாத ஆனால் உள்ளூரில் கட்சியினருக்கு அறிமுகமான, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகனான பி.எம்.குமார் என்பவரை காஞ்சிபுரத்தில் வெட்பாளராக நிறுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டியில் நிறுத்தப்பட்டுள்ள பி.வெங்கடாசலபதி என்ற வழ்க்கறிஞர் தேர்வு பற்றி தி.மு.க வினுள் அதிருப்தி நிலவுகிறது. இது ஏற்கனவே இரண்டு அணியாக இருந்த மாவட்ட தி.மு.க வில், இப்போது மூன்றாவதாக முன்னாள் அமைச்சர் க. சுந்தரம் அணியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனாலும், சில லகரங்களின் கை மாற்றலுக்கு பின் மற்ற அணியினர் சமாதானமானதாக தெரிகிறது.
சென்ற ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 100% வெற்றி பெற்ற ஆறு கட்சிகளின் கூட்டணி இப்போதும் தொடர்வதும், கட்சியினரின் உற்சாகமும், தி.மு.க அணியின் பலமெனலாம். ஆனால் சென்ற தேர்தலில் இருந்த அ.தி.மு.க விற்கு எதிரான, தி.மு.க கூட்டணிக்கு சாதகமான பல விடயங்கள் இத்தேர்தலில் இல்லை. உதாரணமாக அரசு ஊழியர்களின் அதிருப்தி கணிசமாக குறைந்திருப்பதாகவே தெரிகிறது.
மதமாற்ற தடை சட்டம், வழிபாட்டிடங்களில் உயிர் பலி தடை போன்றவைகளை ஜெயலலிதா அரசு திரும்ப பெற்றதன் மூலம், சென்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியின் எதிர் பிரச்சாரத்திற்கு இருந்த வாய்ப்புகளில் இரண்டு இப்போது குறைந்துள்ளது.
வீரப்பன் கொல்லப்பட்டது அ.தி.மு.க விற்கு, வன்னியர்கள் அதிகம் வாழும் தொகுதியில் கைகொடுக்குமா என்றும் தெரியவில்லை. அதை ஒரு எதிர் பிரச்சாரமாக தி.மு.க கூட்டணி மேற்கொள்ளவே வாய்ப்புள்ளது.
தமிழக அரசின் சுனாமி நிவாரண செயல்பாடு குறித்த அதிருப்தி, தமிழக கடலோர தொகுதிகளில் பலமாக இருக்கிறது. ஆனால் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் கஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் இல்லை என்பது அ.தி.மு.க வுக்கு சாதகமான விடயம்.
அ.தி.மு.க சட்டசபையை நடத்தும் விதம் குறித்து எதிர்கட்சிகள் அதிக அளவில் பேசுகின்ற போதும் அது வாக்காளர்களை கவனத்தை பெருமா என்பதை பார்க்க வேண்டும்.
காவல் துறையின் அராஜகம், காவல் துறையின் மூலம் ஆட்சி நடத்துகிறார் ஜெயலலிதா என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
கும்மிடிப்பூண்டி யின் அ.தி.மு.க சட்டசபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சுதர்சனம், கொலை செய்யப்பட்டே இறந்து, இடைத்தேர்தலுக்கு வழி வகுத்தது, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என பிரச்சாரம் செய்ய எதிர் கட்சியினர் ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தக்கூடும்.
காஞ்சிபுரத்திலும், சங்கராமன் கொல்லப்பட்டதும், பின்னர் உத்தராஞ்சல் மட நிர்வாகி சிரீநிவாஸ் கொல்லப்பட்டதும் எதிர்க்கட்சியினரின் "ஜெயலலிதா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது"
என்ற வாதத்துக்கு வலு சேர்ப்பவை.
சென்ற நாடாளுமன்ற தேர்தலில், தன் ஆட்சியின் சாதனைகளாக தான் நினைத்ததையே மக்களின் முன் வைத்த ஜெயலலிதாவுக்கு, "12 அமைச்சர்கள் மத்தியிலிருந்தும் தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை" என்ற புதிய குற்றச்சாட்டை வைப்பதற்கு வாய்ப்பேற்பட்டுள்ளது. கூடுதலாக மக்களின் குறைகள் அனைத்திற்கும் மத்திய அரசுதான் காரணம் என்று, தி.மு.க கூட்டணி மேல் பழி சுமத்தவும் ஒரு வாய்ப்புள்ளது.
ஆக, சென்ற நாடாளுமற தேர்தலில் ஈட்டிய வெற்றியை தக்க வைத்து, வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திக்க தி.மு.க அணியும், முந்தய தோல்வியை பழங்கதையாக்கி, இந்த இடைதேர்தலில் வெற்றி பெற்று, புது உத்வேகத்துடன் சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க வும் முழு உத்வேகத்துடன் இடைத் தேர்தலை எதிர் கொள்கின்றன.
இந்த இடைத் தேர்தல், கடந்த நாடளுமன்ற தேர்தல் போல் ஒரு தரப்பிற்கு மட்டும் சாதகமாக இல்லாமல், இரண்டு தரப்பிற்குமே சமமான நிலை உள்ளதாகவே தெரிகிறது.
2 Comments:
நல்லா சொன்னே நைனா! காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க. தோற்றால் ஜெயேந்திரர் கைதின் பிரதிபலிப்பு என்ற குற்றச்சாட்டும் சேர்ந்து கொள்ளும்.
வந்து வாசித்து கருத்து தெரிவித்ததற்கு நன்றி 'நல்லடியார்'.
நந்தலாலா
Post a Comment
<< Home