Get Nandalaalaa atom feed here!

Thursday, July 07, 2005

லண்டன் நகரின் தொடர் குண்டுவெடிப்பு!.

லண்டன் நகரின் பல இடங்களில் இன்று தொடர் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

பேருந்து மற்றும் இரயில்களில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் 40 பேர் வரை கொல்லப்பட்டும், நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

மனித நேயமற்ற இந்த செயல் மிகக்கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இக்குண்டு வெடிப்பு நிகழ்ந்த நேரம், உலக பணக்கார முதலாளித்துவ நாடுகளின் கூட்டமொன்று இங்கிலாந்தின் ஸ்காட்லாந்தில் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. இந்த முறை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையை ஏற்கவிருக்கும் இங்கிலாந்தின் தலை நகரில் இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளதும் முக்கியத்துவத்தை கூட்டுகிறது.

இக்குண்டுவெடிப்பை தொடர்ந்து, தீவிரவாதத்திற்கு எதிரான போர் பலம் பெரும் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார். இங்கிலாந்து பிரதமர் டோனி பிளய்ர் உள்ளிட்ட ஏனைய நாட்டு தலைவர்களும் இச்சம்பவத்தை கண்டித்துள்ளனர்.

இந்த கொடுஞ்செயலுக்கு, அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய, லண்டனில் இயங்கிவரும் ஒரு அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தெரிய வருகிறது. அமெரிக்க, இங்கிலாந்து நாடுகளின், ஆப்கானிய மற்றும் இராக்கிய ஆக்கிரமிப்புக்கு எதிராக இக்குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக கூறியுள்ளதாகவும் தெரிகிறது.

மேற்கத்திய ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிராக இவர்கள் கொண்றுள்ளது யாரை?

காலை நேரத்தில் தங்கள் இல்லங்களிலிருந்து பணியிடங்களுக்கு சென்று கொண்டிருந்த உழைக்கும் வர்க்க பொதுமக்களை. இவர்களில் யாரும் அதிகார மையத்தை சார்ந்தவர்களோ, ஆப்கான், ஈராக் குறித்த மேற்குலகின் கொள்கையை தீர்மானிப்பவர்களோ கிடையாது. இன்னும் கூறப்பபோனால், இவர்களில் பலர் இத்தகைய ஆக்ரமிப்புகளை கண்டிப்பவர்களாக கூட இருந்திருக்கலாம். ஈராக்கின் மீதான படையெடுப்பை கண்டித்து லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்றவர்களாக கூட இருக்கலாம்.

எப்படி இருப்பினும், இராணுவமோ அல்லது வேறு இயக்கமோ, அப்பாவி பொதுமக்களை கொல்வதை நியாயப்படுத்தும் காரணம் என்று எதுவும் இருக்க முடியாது.

குறிப்பாக, இவர்களால் நடத்தப்பட்ட முந்தய தாக்குதல்கள் - அமெரிக்க இரட்டை கோபுரத்தாக்குதல், இந்தோனேசிய பாலித்தீவு, ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் ஆகிய அனைத்துமே அப்பாவி பொதுமக்களை பலி கொண்ட நியாயப்படுத்த முடியாத செயல் என்பதை அனைவருமே ஒப்புக்கொள்வார்கள்.

ஈராக்கிலோ, ஆப்கானிலோ கொல்லப்படும் அப்பாவி மக்களின் உயிருக்கு ஈடாக என இச்செயலை முன்னிறுத்த முயல்வார்களே ஆயின், அத்தகைய வாதம் எவ்வித நியாயத்திற்கும் உட்படாத வறட்டு வாதமாக மட்டுமே அமையும். இதை நியாயம் எனக்கொண்டால், ஈராக், ஆப்கான் மீதான அமெரிக்க, பிரித்தானிய அரசுகள் நிகழ்த்தும் படுகொலைகளை கண்டிக்க வழியில்லை.

இத்தகைய கொடூரமான செயல்கள் மூலம், பாதிக்கப்பட்டுள்ள ஆப்கான், ஈராக் மக்கள் அடையக்கூடிய பலன் என்பதும் எதிர்மறையாகவே இருக்கும் என்பதிலும் ஐயமில்லை. இந்த இயக்கங்களின் செயல்பாடுகள் இவர்களை, சிறு சுயநலக்குழுக்களாகவே அடயாளம் காட்டுகிறது. இவர்கள் தங்கள் மக்களின் நலனை முன்னிருத்தும் போராட்ட இயக்கமாக இல்லாதிருப்பதுடன், சிலரின் ஏவலுக்காட்பட்ட கூலிப்படைகளை ஒத்த செயல்களை கொண்டிருப்பதும் கவணிக்கத்தக்கது.

தற்போதய நிலையில், இக்குண்டு வெடிப்பு, அமெரிக்க, பிரித்தானிய அரசுகளுக்கு, தங்களின் ஈராக்கின் மீதான ஆக்ரமிப்பை தொடரவும், இரான் மீதான வன்மத்தை தொடர்ந்து, அந்நாட்டை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்துவதிலும் பின்னர், ஆக்ரமிப்பதிலும் ஏற்படக்கூடிய உள்நாட்டு, சர்வதேச எதிர்ப்பை அடக்க பேருதவி புரிந்துள்ளது.

ஏற்கனவே, அமெரிக்க இரட்டை கோபுரத்தாக்குதல், அமெரிக்கா மற்றும் பிரித்தன் படைகள் ஆப்கான், பாகிஸ்தான், ஈராக் முதலிய நாடுகளில் ஊடுருவியதற்கு காரணமாக அமைந்தது என்பதையும் இங்கே கருத்தில் கொள்ளவேண்டும்.

அமெரிக்க, பிரித்தானிய அரசுகளின், எதேச்சதிகார அடக்குமுறைக்கு புதிய நியாயத்தை காட்டியுள்ளதுடன், அவர்களை எதிர்க்கும் நடுநிலை நியாயக்குரல்களின் பலத்தையும், இக்குண்டு வெடிப்பு சப்தங்கள் குலைத்துள்ளன என்றால் அது மிகையல்ல.

7 Comments:

At Fri Jul 08, 12:54:00 AM 2005, Blogger ~Nandalala~ said...

சோதனை -

 
At Fri Jul 08, 12:57:00 AM 2005, Blogger ~Nandalala~ said...

மீண்டும் சோதனை

 
At Fri Jul 08, 01:39:00 AM 2005, Anonymous Anonymous said...

இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் ஐக்கிய ராச்சியத்தின் இருநாடுகள்

 
At Fri Jul 08, 01:42:00 AM 2005, Anonymous Anonymous said...

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையை ஏற்கவிருக்கும் இங்கிலாந்தின்

>> 01/07 ல் தலைமையை ஏற்றுவிட்டது ஐக்கிய ராட்ச்சியம்

 
At Fri Jul 08, 01:49:00 AM 2005, Anonymous Anonymous said...

எந்த தாக்குதல்களையுமே நியாயப்படுத்த முடியாது
பதில் தாக்குதல்களைக் கூட - அது எங்கு நடந்தாலும் (இலங்கை உட்பட)

 
At Fri Jul 08, 02:34:00 AM 2005, Blogger NONO said...

நிச்சயமாக இப்படிப்பட், அப்பாவி பொது மக்கள்களை மட்டுமே கொளை செய்வதை குறிக்கோளக கொண்டு தாக்குதல் நடத்துவது கண்டிக்க வேண்டியது!!!!

 
At Fri Jul 08, 08:17:00 AM 2005, Blogger Voice on Wings said...

நல்ல பதிவு. அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்களை எவ்விதமாகவும் நியாயப்படுத்த முடியாது.

 

Post a Comment

<< Home