கற்பழித்தால் கல்யாணம்
காதலிக்க மறுத்த பெண்ணை தூக்கிச்சென்று கற்பழித்தவருக்கு, நீதிமன்றத்தில் திருமணம் செய்விக்கப்பட்டு, நீதி நிலை நாட்டப்பட்டது. கற்பழித்து மணந்தும் கொண்டவரை பாராட்டி 'வீர்புணர்ஸ்காரா' விருதுக்கு சிபாரிசு - நன்றி 'தினமலம்'
'வேதகால நீதிபதி' பதிவில் வன்புணர்ச்சி குற்றஞ்சாட்டப்பட்டு, நிரூபிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணையே திருமணம் செய்துகொள்வதாக குற்றவாளி கூற, அதை ஏற்ற நீதிபதி, இதுகுறித்து அப்பெண்ணின் கருத்தை கேட்டு தீர்ப்பை ஒத்திவைத்தது குறித்து என் சந்தேகங்களை எழுப்பியிருந்தேன்.
நீதிபதியின் இச்செயலை ஏற்புடன் சிலவும், கண்டித்து சிலவுமாக நண்பர்களின் பின்னூட்டங்கள் இருந்தது.
பத்ரி இதனிடையே, மும்பையில் நடந்த, இதே வகையிலான வேறு வழக்கை குறிப்பிட்டு ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார்.
அந்த மும்பை வழக்கில் குற்றம் சாட்டியப்பெண் (இது இவருக்கு நேர்ந்த இரண்டாவது வன்புணர்ச்சி என இந்து செய்தி சொல்கிறது), குற்றம் சாட்டப்பட்ட ஆண் மணம் செய்துகொள்ள முன்வந்ததை ஏற்றுக்கொண்டதால், (குற்றம் நிரூபிக்கபடாத நிலையில்?) வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் அந்த ஆண்.
முந்தய டெல்லி வழக்கின் நீதிபதி, தண்டனையிலிருந்து தப்பிக்கவே, குற்றவாளி மணம் செய்துகொள்ள முன்வந்தார் என தீர்ப்பில் குறிப்பிட்டு, ஆயுள் தண்டனை விதித்துள்ளார்.
குற்றவாளி தப்பிக்க முயல்வதை புரிந்துகொண்ட நீதிபதி, அப்பெண்ணின் கருத்தை அறிய வேண்டி வழக்கை ஒத்தி வைத்ததன் காரணம் என்னவாக இருக்கக்கூடும்? மேலும், இந்த இரு வழக்குகளின் மூலம், இந்திய குற்றவியல் சட்டம் குறித்து நான் புரிந்து கொண்டது:
வன்புணர்ச்சி என்பது இரு நபர்களுக்கு இடையேயான தனிப்பட்ட விதயம்/குற்றம்.
பாதிக்கப்பட்டவர்/அவர் சார்பாக மற்றவர், அவர்களாக குற்றஞ்சாட்டினால் மட்டுமே வழக்கு பதியப்படும்.
குற்றவியல் சட்டத்தின் கீழ் இக்குற்றம் வரும் என்பதால், குற்றம் சுமத்தப்பட்டவர் மீது/அவருக்கு எதிராக, அரசு வழக்கறிஞர் வாதிடுவார். ஆக இங்கே அரசு தரப்பு வழக்கை நடத்துகின்றது.
வழக்கு நடக்கும் போது, வன்புணர்ந்தவர், பாதிக்கப்பட்ட பெண்ணை மணந்து கொள்வதாக தெரிவித்தால், அதை அப்பெண்ணும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அதை நீதிமன்றம் அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து விடும்.
கோரிக்கை குறித்து, பாதிக்கப்பட்டவரின் கருத்தை கேட்பது, குற்றம் சுமத்தப்பட்டவரின் உரிமையாகும் - குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையிலும் கூட.
இவ்வாறான கோரிக்கையை நிராகரிக்க நீதிபதிக்கு அதிகாரமில்லை. (அவ்வதிகாரம் இருந்திருப்பின், டெல்லி நீதிபதி அனுமதித்திருக்க மாட்டார் என்ற புரிதலுடன்)
மணந்துகொள்வதற்கு பாதிக்கப்பட்ட பெண் சம்மதித்து விட்டால், குற்றஞ்சுமத்தப்பட்ட/நிரூபிக்கப்பட்டவருக்கு தண்டனை தர சட்டத்தில் இடமில்லை.
இந்நிலையில் நீதிமன்ற நேரத்தை வீணடித்தார் என்பதற்காக குற்றம் சாட்டியவருக்கே (பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு), அபராதம் அல்லது குறுகிய கால சிறை போன்ற சிறு தண்டனை ஏதேனும் வழங்கப்படலாம்.
இதன் அடிப்படை, இது இரண்டு தனி நபர் பிரச்சனை, அவர்களுக்குள்ளே சமாதானம் ஏற்பட்ட பின் அங்கே நீதிமன்றத்துக்கு, நீதியை நிலைநாட்டும் வேலையில்லை.
இதையே, //ஆனால் தனியார் கொண்டுவரும் வழக்கை எந்நேரத்திலும் திரும்பப் பெற்றுக்கொள்ளமுடியும்!// என சட்ட முறையை விளக்கி, பத்ரி அவரின் பின்னூட்டத்திலும் எழுதியிருந்தார்.
இந்திய குற்றவியல் சட்டப்படி இந்த நீதிபதிகள் செய்தது சரியே என்பது *இப்போது* புரிகிறது.
சென்ற பதிவு பற்றி:
டெல்லி வழக்கின் நீதிபதியின் மேல் நான் சந்தேகப்பட்டது தவறு. மற்ற பலவற்றை போலவே, எனது சட்ட அறிவிலும் உள்ள குறைபாட்டினால் - தவறாக எழுதியதற்காக, எனது எந்த பதிவையும் படிக்கும் வாய்ப்பே இல்லாத அந்த டெல்லி நீதிபதி ஜே.எம்.மலிக் -கிடம் இப்பதிவில் நான் மன்னிப்பு கோருகிறேன்.
இதை வாசிக்கும் ஆன்றோர், சான்றோர்களிடமும் மன்னிப்பு கோருகிறேன். அவர்களிடமே இதை ஏற்றுக்கொள்ள வேணுமாய் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அந்த பதிவிற்கான தலைப்பு 'வேதகால சட்டம்' அல்லது 'காட்டுமிராண்டிகளின் குற்றவியல் சட்டம்' என்பதாக இருந்திருக்க வேண்டும். (பின்னொரு நேரத்தில் இந்த தலைப்புகளை நானே பயன்படுத்தும் வாய்ப்பிருப்பதால் இப்போதே அவற்றுக்கான காப்புரிமையை கோரிவிடுகிறேன்.;-)
பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து:
இதில் இரண்டு பெண்கள் செய்ததில் எது சரி, எது தவறு என அலசுவது சரியல்ல.
டெல்லி பெண் செய்ததை சரியானதாக காணும் எனக்கு, மும்பை பெண்ணுக்கு உள்ள [சமூக / குடும்ப / பொருளாதார இவற்றில் ஏதோ ஒன்று / சில / எல்லாம்] நிர்ப்பந்தம் குறித்த துயரமே ஏற்படுகிறது.
மும்பை பெண்ணை காதலிப்பதாக கூறி, மணம் செய்வதாக உறுதியளித்து உடலுறவில் ஈடுபட்டு, பின்னர் மணக்க மறுத்தவர், வழக்கு என வந்த பின், தண்டனைக்கு பயந்து மணந்து கொள்ள சம்மதிக்க, இவர்களின் மண வாழ்க்கை என்ன மாதிரி இருக்கும் என்பதை, என்னால் ஓரளவு யூகிக்க முடிகிறது. அப்பெண்ணை நினைத்து அனுதாபப்படுவதே என்னால் செய்ய முடிவது.
சட்டத்தின் நிலை குறித்த எனது நிலை:
வன்புணர்ச்சி என்பது சமூகம் சார்ந்ததல்ல, தனிநபர்களின் பிரச்சனை என்பதாக என்னால் பார்க்க முடியவில்லை. அதன் காரணமாகவே எனது முந்தய பதிவு. இப்படி ஒரு கருத்தையே விசிதாவும் தனது பின்னுட்டத்தில் எழுதியிருந்தார்.
எப்படி கொலை குற்றம், நிறுபிக்க பட்டால், கண்டிப்பாக தண்டனைக்கு உள்ளாகிறதோ அது போல வன்புணர்ச்சி குற்றமும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
திருட்டு, ஏமாற்று போல், தனிநபர் குற்றச்சாட்டை திரும்ப பெற அனுமதிப்பதை, வன்புணர்ச்சி குற்றத்திலும் கையாள்வது சரியாக படவில்லை.
இத்தகைய சட்டமுறை எம்மாதிரியான பாதிப்பை சமூகத்தில் ஏற்படுத்தும் என்பது குறித்த எனது ஐயப்பாடு:
ஆசை கொண்ட பெண் காதலிக்க/இணங்க மறுத்தால், அவரை கடத்திச்சென்று வன்புணர்ந்து, பின்னர் திருமணம் செய்து கொள்வது (இப்படி ஒரு பழைய படம் பார்த்த ஞாபகம் பிரபு-ராதா?) நடக்கும் அபாயம் உள்ளது. அந்த ஆணின் (மணம் செய்யும்) செயல், மனிதாபிமானம் கொண்ட ஒன்றாகக்கூட, சமூகத்தில் பார்க்கப்படும் அபாயமும் உள்ளது.
காதலை/ஆசையை தெரிவிப்பதற்கும், ஈவ் டீஸிங்கிற்கும் வித்தியாசம் தெரியாமல், சினிமாவால் ஆக்கப்பட்ட சமுதாயத்தில், அல்லது சமூகத்தால் அப்படி ஆக்கப்பட்ட சினிமாவை கொண்ட ஒரு சமூகத்தில், இது நடக்காது என்று கூற எந்த முகாந்திரமும் இல்லை.
காவல் நிலையத்தில் காதல் ஜோடி திருமணம் என்பது போன்ற செய்திகளோடு, இனி நீதிமன்றத்தில் கற்பழிப்பு ஜோடி திருமணம் என்ற செய்திகள் தாங்கியும் பத்திரிக்கைகள் வரலாம். அப்படி ஒரு கற்பனை பயங்கரமே இப்பதிவின் முதல் பத்தி.
3 Comments:
This comment has been removed by a blog administrator.
//இந்நிலையில் நீதிமன்ற நேரத்தை வீணடித்தார் என்பதற்காக குற்றம் சாட்டியவருக்கே (பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு), அபராதம் அல்லது குறுகிய கால சிறை போன்ற சிறு தண்டனை ஏதேனும் வழங்கப்படலாம்.//
இதை தவிர்த்து பெண் என்பதால் கருணை காட்டி அந்தப்பெண் மணவாழ்வில் கொடுமைப்படுத்தப்பட்டால் அவளுக்கு நீதிமன்றத்தை அணுகும் உரிமை, விவாகரத்து கேட்கும் உரிமை இவற்றை இரத்து செய்து குடும்பம் எனும் கோவில் தழைக்க இந்திய நீதிமன்றம் ஆவணசெய்யலாம்.
கற்பு-கற்பற்ற நிலை,இவையெல்லாம் பெண்ணையொடுக்கும் கருத்தியல் மேலாதிக்கம்.இது ஆணாதிக்க உளவியலின் ஊக்கவுறவு நிறைந்த ஒடுக்குமுறை.சமூகஞ்சார்ந்து இவை பண்ணும் கொடுமை நமது சமுதாயத்தை உருப்படவிடுவதில்லை.இதை பாரதியார் மிகவும் காட்டமாகச் சாடியுள்ளார்.கற்பழிப்பென்பதை பாலியற்பலத்தகாரம்-வல்லுறவு என்று பின் மொழியியலாளர்கள் உரையாடுகிறார்கள்.இது நியாயமானது.ஏனெனில் கற்பு என்பதைக் காட்டியே ஒரு பெண்ணை உளத்தாலும்-உடலாலும் கேவலப் படுத்துவதை பின்மனிதநேயவாதிகள் எதிர்க்கிறார்கள்.கூடவே பெண்ணிலைவாதிகளும்.அடுத்து மனதுக்கு விரும்பாத ஒரு வன்கொடுமையாளனால் பெண்ணொருத்தி வல்லுறவுக்குள்ளாகும்போது,அவனையே திருமணஞ் செய்துகொள்ளத் தீர்ப்பளிப்பதுகூட நமது பாரம்பரிய பெண்ணொடுக்குமுறையைக் காப்பாற்றிக்கொள்ளவெடுக்கும் முயற்சியே.இங்கு நீதிபதியின் தூய்மைவாத மனது, ஆணாத்திக்கத்தின் மறுவார்ப்பாகும்.எனவே இந்தத் தீர்ப்பும் எதிர்க்கப்பட்டு,வல்லுறவுக்குரிய தண்டனையை பாதிக்கப் பட்ட பெண்ணின் விருப்பின்படி தீர்ப்பிடவேண்டும்.கூடவே பாதிக்கப் பட்ட பெண்ணை சமூகத்தில் கௌரவமாகச் செயற்படவும் கூடவே அவள் மீளவும் தனது வாழ்வைத் தனது விருப்பின்படி தேர்வுசெய்து வாழக்கூடிய அமைப்பு முறைமைகளே இனிமேற் காலத்துக்குத் தேவை.
Post a Comment
<< Home