Get Nandalaalaa atom feed here!

Tuesday, April 26, 2005

நேபாளத்திற்கு ஆயுதம்?

மாவோயிச கிளர்ச்சியை ஒடுக்க, நேபாளத்திற்கு ஆயுதம் வழங்க இந்தியா ஒப்புதல்?
நேபாள மன்னர் கியானேந்திரா, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இடையே 45 நிமிட நேர சந்திப்பு ஒன்று ஜகர்தாவில், சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. நேபாளத்தின் ஆயுத தேவையே இச்சந்திப்பில் முக்கியமாக இடம் பெற்றிருக்கும் என்பது தெளிவு.

கியானேந்திரா கடந்த பிப்ரவரி 1ல், நேபாள பாரளுமன்றத்தை கலைத்து, அவசர நிலையை பிரகடணப்படுத்தி, அரசின் முழு அதிகாரத்தையும் தன் வயப்படுத்தினார். செர் பகதூர் துயுபா பிரதமராக இருந்த நான்கு கட்சி கூட்டணி ஆட்சி, மாவோயிச கிளர்ச்சிக்காரர்களை அடக்க தவறியதாகவும், ஊழலில் ஈடுபட்டதாகவும் மன்னரால் குற்றஞ்சாட்டப்பட்டது. அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு வீட்டுச்சிறையும், பத்திரிக்கைகளுக்கு செய்தித்தணிக்கையும் விதிக்கப்பட்டது.

இது உலக நாடுகளின் கண்டனத்திற்கு உள்ளானது. நேபாளத்தின் மீது பொருளாதார, ஆயுத தடையும் விதிக்கப்பட்டது. இந்நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் அடங்கும்.

இதை தொடர்ந்து பிப்ரவரி 6ல், நேபாள தலைநகர் காத்மாண்டு வில், நடக்கவிருந்த தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவிருந்த மாநாடு(SAARC), இந்தியா பங்கேற்க மறுத்து விட்டதன் பின்னணியில், ரத்து செய்யப்பட்டது.

இப்போதைய சந்திப்பு, பிப்-1 ஆட்சிக்கலைப்புக்கு பின், இந்தியா நேபாளம் இடையேயான, முதல் உச்ச நிலை சந்திப்பு என்ற முக்கியத்துவத்தை பெறுகிறது.

இச்சந்திப்புக்கு பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மன்மோகன், நேபாளத்தில் பாராளுமன்ற ஜனநாயகத்தை மறு நிர்மானம் செய்ய மன்னரிடம் வலியுறுத்தியதாக கூறினார். மன்னர் ஆயுத உதவி கோரியது பற்றிய கேள்விக்கு, அக்கோரிககையை தகுந்த முறையில் பரிசீலிக்க தான் உறுதி அளித்திருப்பதாக மட்டும் சொன்னார். மேல் விவரங்களை அளிக்கவில்லை.

ஆனால் கியானேந்திரா, இந்தியா ஆயுதம் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது என்பது போல் கூறியுள்ளார். இதை ஒப்புக்கொண்டோ மறுத்தோ இந்திய தரப்பு இதுவரை எதுவும் சொல்லவில்லை.

இந்து நாளிதழ், பிப்-1 க்கு பிறகு நிறுத்தப்பட்ட ஆயுத வழங்கள் தொடர்ச்சியிலிருந்து ஒரு தவணை விரைவில் அனுப்பப்படும் என்று, இராணுவ உயரதிகாரி ஒருவர் - அவர் பெயரை குறிப்பிடவில்லை - கூறியதாக ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

தெளிவில்லாத இந்நிலையில், இந்தியாவின் இடது சாரி கட்சிகள், நேபாளத்திற்கு இந்தியா ஆயுதம் வழங்க கூடது என எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மன்மோகன் இடது சாரிகளின் ஆதரவுடன் ஆட்சி நடத்திவரும் நிலையில் அவர்களின் எதிர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

எதிர்கட்சி தரப்பில் பா.ஜ.க விடமிருந்து எந்த கருத்தும் இதுவரை வெளிவரவில்லை. எனினும், உலகின் ஒரே இந்து நாடு என்ற வகையில், அந்நாட்டு அரசுடனும், அரச குடும்பத்துடனும் மிகுந்த ஈடுபாடுடைய சங்க பரிவாரங்கள், இந்தியா ஆயுதம் வழங்குவதை ஆதரிக்கலாம். அல்லது தொடர்ந்து மவுனம் காக்கலாம். இடது சாரி சிந்தனையை அடியோடு வெறுக்கும் அவர்களின் இயல்பின் அடிப்படையிலும் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
[விஷ்வ ஹிந்து பரிஷத் கியானேந்திராவின் செயலுக்கு ஆதரவே தெரிவித்து வருகிறது. ப.ஜ.க வருத்தம் தெரிவித்ததே அல்லாமல் மற்ற கட்சிகளை போல் கண்டனம் எதையும் வெளிப்படுத்தவில்லை.]

இந்தியா நேபாளத்தின் மீது விதித்துள்ள தடை அந்நாட்டை மேலும் சீரழிவை நோக்கியே இட்டுச்செல்லும். இந்தியாவை அதிகம் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் பூலோக ரீதியில் நேபாளத்திற்கு இருக்கிறது. இந்தியாவிற்கும், நேபாளம் வேறு நாட்டுடன், குறிப்பாக சீனாவுடன் ஆயுத ஒப்பந்தத்தில் ஈடுபடுவதை தடுக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.

நேபாளத்தில் மன்னர் ஆட்சியை நீக்க போராடும் மாவோயிச கிளர்ச்சிக்காரர்களுக்கு இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கி வரும் கிளர்ச்சிக்காரர்களுடன் தொடர்புள்ளது. எனவே, நேபாளத்தில் மாவோயிச இயக்கம் பலம் பெறுவது, இந்தியாவுக்குள்ளும் தாக்கம் ஏற்படுத்தும். இந்த கவலையின் அடிப்படையில், நேபாள இராணுவத்திற்கு ஆயுதம் வழங்க இந்தியா நிர்பந்திக்கப்பட்டுள்ளது.

ஆனால், நேபாள மாவோயிச கிளர்ச்சியை இராணுவ பலம் கொண்டு அடக்க முடியாது என்பதும், அப்படி முயல்வது மக்களுக்கும் நேபாள அரசுக்குமான இடைவெளியை மேலும் அதிகரிக்கும் என்பதே எதார்த்தமான உண்மை.

கிளர்ச்சியாளர்களுடன் பேச்சு வார்த்தை தொடங்க, கியானேந்திராவுக்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் தருவதே, ஆயுதம் வழங்குவதை விட முக்கியமானது.

நேபாள பிரச்சினைக்கு, இராணுவ தீர்வு சாத்தியமில்லாத ஒன்று. இந்த உண்மையை நேபாள அரசு உணர வேண்டும்.

4 Comments:

At Wed Apr 27, 01:46:00 AM 2005, Blogger ~Nandalala~ said...

இதை நீங்கள் "மாவோயிச கிளர்ச்சியை ஒடுக்க, நேபாளத்திற்கு ஆயுதம் வழங்க இந்தியா ஒப்புதல்?" என்ற தலைப்பில்
ஏற்கனவே வாசித்திருப்பின் மன்னிக்கவும். அந்த பதிவு மறைந்துவிட்டதால் கணினியின் கோப்பிலிருந்து, தலைப்பை தணிக்கை செய்து பதிந்தேன். தமிழ்மணம் மீண்டும் திரட்டிவிட்டது.
கடைசி புதிய பதிவான "கடவுள் நிராகரித்த பாப்பரசர் பிரார்த்தனை" வாசிக்க இங்கே சொடுக்கவும். சிரமத்திற்கு மீண்டும் மன்னிக்கவும்.

 
At Wed Apr 27, 01:49:00 AM 2005, Blogger ~Nandalala~ said...

blogger-ல் பெரிய தலைப்பை கொண்ட பதிவுகள் மறைந்து போவது எதனால்?
அதிக பட்சமாக எத்துனை எழுக்களை தலைப்பில் வைக்கலாம்?
அறிந்த நண்பர்கள் தகவல் தந்தால் பேருதவியாக இருக்கும்!
தரப்போகும் தகவலுக்காய் நன்றி.
நந்தலாலா

 
At Wed Apr 27, 11:56:00 AM 2005, Blogger ROSAVASANTH said...

எத்தனை எழுத்துக்கள் என்று தெரியாது. ஆனால் நான்கு ஐந்து வார்த்தைகளுக்கு தொலைவதில்லை. ஒரு பெரிய வாக்கியத்தையே தலைப்பாய் வைத்தால் தொலைகிறது. மேலே சின்னதாய் தலைப்பு வைத்துவிட்டு உள்ளே விரும்பும் பெரிய தலைப்பு வைப்பதையே நான் செய்கிறேன்.

 
At Wed Apr 27, 12:49:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

நன்றி ரோசாவசந்த்.

//மேலே சின்னதாய் தலைப்பு வைத்துவிட்டு உள்ளே விரும்பும் பெரிய தலைப்பு வைப்பதையே நான் செய்கிறேன்//

இனி இதையே நானும் முயல்கிறேன்.

நந்தலாலா

 

Post a Comment

<< Home