Get Nandalaalaa atom feed here!

Wednesday, May 04, 2005

நாட்டு நடப்பு - 001

கோவிந்தா ராக்கெட்டு?


நாளை ஏவப்பட உள்ள கார்டோசாட்-1, ஹாம்சாட் செயற்கை கோள்களின் மாதிரியை திருப்பதி பெருமாளின் பாதங்களில் வைத்து வழிபாடு நடத்தியுள்ளார் 'இஸ்ரோ' தலைவர் மாதவன் நாயர். இது அவர் எந்த குறிப்பிட்ட மத கடவுளின் பக்தராக இருப்பதற்கோ, இதற்கு மேலும் வேறு எந்த கூத்தையும் அடிப்பதற்கோ யாரும் ஆட்சேபிக்க முடியாதுதான். ஆனால், இந்தியா மதச்சார்பற்ற நாடு எனும் போர்வையின் கீழ், அதுவும் மிக முன்னேறிய தொழில் நுட்ப மையத்தின் தலைவர் இதை செய்தது ஆட்சேபனைக்குறிய ஒன்று.

ராணுவமே ஆயுத பூஜை கொண்டாடும் அவலம் கொண்ட நாட்டில் இது சாதாரண ஒன்றாகவே பலராலும் பார்க்கப்படும் என நினைக்கிறேன்.

பழைய எம்.ஜி.ஆர் படம் ஏதோ ஒன்றில் வரும் கதாகாலச்சேபம் போலமைந்த பாடல் காட்சியில், இந்தியா நிலவுக்கு ஏவுகனை அனுப்பும் கதையை பாடுவார். அந்த காட்சி தான் நினைவுக்கு வருகிறது.

ஏவுகனை மீது கோ மூத்திரம் தெளிக்கிறார்களா என்பதையும் விசாரிக்க வேண்டும்.

கோர்ட்டில் கீரிப்பட்டி


தேர்தல் வழிமுறையை கேலிக்கூத்தாக்கி, சாதி ஆதிக்க வெறியை வெளிப்படுத்திய கீரிப்பட்டி பிரச்சினை, இப்போது மற்றொரு ஜனநாயக தூணாக வர்ணிக்கப்படும்/நம்பப்படும் நீதிமன்றத்தை எட்டியுள்ளது. கடந்த தேர்தலில் பிறமலைக் கள்ளர்களால் நிறுத்தப்பட்டு, வென்ற அழகுமலை தனது பதவியை ராஜினாமா செய்தது செல்லாது என அறிவிக்க வேண்டி, விடுதலை சிறுத்தைகள் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த, பூங்கொடி வழக்கு தொடுத்துள்ளார்.

வழக்கு விசாரனைக்கு ஏற்கப்பட்டுள்ளது. அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்யும்போது அரசு/அதிகார வர்க்கத்தின் உள்நோக்கம் வெளிப்படும்.

இன்னொன்று, அனேகமாக சுதந்திர இந்தியாவில் தேர்தலில் தோற்றவர், வென்றவரை பதவியில் (இருந்து நீக்க வேண்டியல்லாமல்) நீடிக்க வேண்டி வழக்கு தொடுத்திருப்பது இதுவே முதல் முறையாக இருக்க கூடும்.

இதுவரை இரண்டு (தி.மு.க, அ.தி.மு.க) அரசுமே இப்பிரச்சினையை சரியான முறையில் கையாளவில்லை. ஒவ்வொரு முறையும் தேர்தல் முடிந்த பின் தனி அதிகாரியை நியமித்து பஞ்சாயத்து பணிகள் தேக்கமற நடக்க உதவியுள்ளது.

நீதிதுறை தலையிட்டு அரசுக்கு அழுத்தம் தந்தால், கீரிப்பட்டியிலும், மற்ற மூன்று கிராமங்களிலும் தொடரும் அவலத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி விழக்கூடும். பார்க்கலாம்.

சிதம்பர ரகசியம்?


ஐடிசி நிறுவனத்திடமிருந்து 803 கோடி ரூபாய் அளவுக்கு கலால் வரியை வசூலிக்க நிதியமைச்சகம் பிரப்பித்த ஆணையை, திரும்ப பெரும் படி தேஜக கூட்டணி தலைவர்கள் 'இருவர்' கடிதம் எழுதியதாக திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார் நிதி அமைச்சர் சிதம்பரம். யார் அந்த இருவர் என்ற விவரத்தை அவர் இன்னும் வெளியிடவில்லை.

அந்த பெயர்களை வெளியிட கோரி நேற்று ஆளும் தரப்பு எம்.பி க்களே நாடாளுமன்றத்தில் கேட்டுள்ளனர்.

சிதம்பரத்தின் நேர்மை இதற்கு முன்னும் பல முறை அடிபட்டுள்ளது. பத்திரிக்கைகளின் தயவால் திருவாளர் தூயவர் பிம்பத்தை இன்னும் காத்து வருகிறார்.

ஒரு வேளை சிதம்பரம் ஐ.டி.சி யுடனான பேரம் படிந்து, அந்த பெயர்களை வெளியிடவில்லை யென்றால், பொது நல வழ்க்கின் மூலம் அதை வெளிக்கொணரலாம்.

அப்படி முயல்பவர்களையும் ஐடிசி வளைக்க தயங்காது. பணநாயக நாட்டில் இதெல்லாம் சகஜமப்பா வென நாமும் இதை மறந்துவிட்டு அடுத்த கதையை பார்க்க வேண்டியது தான், வழக்கம் போல.

சதிராடும் சாதி?


மஹாரஷ்டிர மாநில அரசின், மது அருந்தும் விடுதிகளில் நடனமாடுவதை தடை செய்யும் ஆணை 75,000 பெண்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகியிருக்கிறது.

இந்த தடையை சரியானது என கொண்டாடும் கலாச்சார காவலர்கள், இந்த பெண்களின் வருமானத்திற்கான அடுத்த வாய்ப்பு பாலியல் தொழில்தான் என்பதை எல்லாம் கருத்தில் எடுக்கவில்லை. தேவரடியார் வழ்க்கமிருந்த ஒரு சமூகத்திற்கு இது தவறாக கூட தெரியாதிருக்கலாம்.

என் கவலையெல்லாம் எய்ட்ஸ் நோயில் இந்தியா முதல் நிலையை அடைய இன்னும் சில ஆயிரம் பேர்களே தேவையென்ற நிலையில், ஏற்கன்வே இந்திய ராணுவமும் தன் பங்குக்கு எய்ட்ஸ் பரப்பலில் ஈடுபட்டுள்ள நிலையில், இப்போது இவர்களையும் அதற்கான் சூழலுள் அனுப்புவது குறித்தே. மேலும் பாலியல் தொழிலாளரை விட நடன மங்கையை குறைவாக அவமதிக்கும் சமுதாய அமைப்பு நம்முடையது.

இப்பெண்களுக்கான அமைப்பின் தலைவர் வர்சா கலே, மராட்டிய துனை முதல்வர் பாட்டில் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். உயர் சாதியாரை திருப்திபடுத்தவே, அதே உயர்சாதியை சேர்ந்த பாட்டில், பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட பெண்கள் ஈடுபட்டுள்ள இத்தொழிலை, ஒழிக்க விரும்புவதாக.

உண்மையில் இந்த பெண்கள் மீது பரிதாபப்பட்டு அரசு இம்முடிவை கைக்கொண்டிருப்பின், அவர்களின் வருமானத்திற்கு மாற்று வழியை ஏற்படுத்தி தந்திருக்க வேண்டும். ஆனால் அது பற்றின பேச்சே இதுவரை இல்லை.

இது மாதிரி அடி நிலை தொழில் மட்டும் தான் இட ஒதுக்கீடு இல்லாமலே கீழ் சாதியினருக்கு கிடைத்து வருகிறது. அதிலும் சாதி சதிராடினால் என்ன தான் செய்வது.

11 Comments:

At Wed May 04, 07:02:00 AM 2005, Blogger Badri Seshadri said...

சிதம்பரம், ஐடிசி விஷயம் பற்றி மட்டும்.

அந்த இரண்டு எதிர்க்கட்சி எம்.பிக்கள் செய்தது தவறேயில்லை.

முதலில் விஷயம் என்ன என்பதைப் பற்றிய சிறு குறிப்பு.

ஒவ்வோர் உற்பத்தி நிறுவனமும் தான் உற்பத்தி செய்யும் பொருள்களின் விற்பனை விலையை (MRP) தெரிவித்து அதன்மீது ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை கலால் வரியாகக் கட்டவேண்டும். நிறுவனங்கள் விளம்பரக் காரணங்களால் அந்தப் பொருளை MRPக்குக் குறைவாக பொதுமக்களிடம் விற்க நேர்ந்தால், அதைக் காட்டி அரசிடம் அதிகமாகக் கட்டிய கலால் தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

அப்படித்தான் ஐடிசி சில பொருள்களைச் சந்தையில் MRPக்குக் குறைவாக விற்றதை ஆதாரங்களுடன் காட்டி, தான் கட்டியிருக்க வேண்டிய கலால் தொகை குறைவுதான் என்றும் சொன்னது. இதுவும் பொதுவாக நடக்கும் ஒரு விஷயம்தான்.

ஆனால் ஐடிசி விஷயத்தில் மத்திய அரசின் கலால் துறை இதை ஏற்றுக்கொள்ள மறுத்து, ஐடிசி முழுப்பணத்தையும் கொடுக்க வேண்டும் என்று சொன்னது. இந்த பிரச்னை பாஜக அரசு இருந்தபோதே ஆரம்பித்து விட்டது.

அரசை எதிர்த்து ஐடிசி வழக்காடு மன்றங்கள் சென்றது. அதற்கு முன், ஒரு குறிப்பிட்ட தொகையை (300+ கோடி) கட்டிவிட்டு, வழக்கு முடிந்ததும் தீர்ப்பினைப் பொறுத்து மிச்சத்தைப் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தது.

உச்ச நீதிமன்றம், தன் தீர்ப்பில் ஐடிசி அதிகமாகக் கட்ட வேண்டியதில்லை என்ற்து. அரசு பணத்தைத் திருப்பித் தந்துவிட வேண்டும் என்றது.

ஓர் அரசு என்ன செய்திருக்க வேண்டும்? ஒழுங்காகப் பணத்தைத் திருப்பித் தந்திருக்க வேண்டும். அதுதான் நியாயம். இப்பொழுதுள்ள சட்டங்களைத் துருவி அதன் பின்னணியில் கொடுக்கப்பட்டதுதான் இந்தத் தீர்ப்பு. ஆனால் இதற்குள் வந்திருந்த புது அரசு (சிதம்பரம் நிதி அமைச்சர்), ஓர் அவசரச்சட்டத்தை இயற்றி, தான் செய்த செயலை சரியாக்கியது.

மத்திய அரசு இம்மாதிரி செய்ய அதற்கு அதிகாரம் உள்ளது. ஆனால் தொழில் நிறுவனங்கள் இதுபோல அரசு நடந்துகொள்வதை சிறிதும் விரும்பாது. குறிப்பிட்ட சட்டங்களை, தான் வழக்கில் தோற்கும் போது தனக்கு சாதகமாக மாற்றி இயற்றும் அரசு இருந்தால், நீங்கள் அந்த நாட்டில் வசிப்பீர்களா?

இத்தனைக்கும், இந்த சட்டம் ஐடிசியை மட்டும் மனதில் வைத்து இயற்றப்பட்டது.

ஆறு மாதங்கள் ஆனதும் இந்த அவசரச் சட்டம் காலாவதியானது. இதை முழுதான சட்டமாக (from ordinance to act) பாராளுமன்றத்தில் இயற்ற யாருக்கும் மனம் வரவில்லை. இந்தப் புது ஆர்டினன்ஸ் பிரகாரம் ஐடிசி மொத்தமாகக் கட்டவேண்டிய அதிகப்படித் தொகை 800+ கோடிகள். அதில் 300+ கோடிகளை ஐடிசி ஏற்கெனவே அரசிடம் கொடுத்திருந்தது.

அவசரச் சட்டம் காலாவதியானதும் சிதம்பரம் ஐடிசியுடன் பேரம் பேசி, நீ கொடுத்த பணத்தைக் கேட்காதே, நான் மேற்கொண்டு 500+ கோடியைக் கேட்க மாட்டேன் என்றார். ஐடிசி ஒப்புக்கொண்டது.

நடந்தது இவ்வளவுதான்.

இப்பொழுது சிதம்பரம் பெருமையாக இந்த அவசரச்சட்டம் இயற்றப்பட்டிருக்கக் கூடாது, நியாயமானதல்ல என்று எழுதி அரசுக்கு 300+ கோடி ரூபாயை நஷ்டமாக்கப் பார்த்தார்கள் சிலர் என்றும் அவர்களைத் தான் தோலுரிக்கப் போவதில்லை என்றும் பாராளுமன்றத்தில் பேசுகிறார்.

அந்த உறுப்பினர்களே தைரியமாகத் தங்கள் பெயர்களைச் சொல்ல வேண்டும். ஏனெனில் அவர்கள் சிதம்பரத்துக்கு எழுதிய கடிதம் நியாயமானது, சரியானது. அவர்கள் ஐடிசியிடம் லஞ்சம் வாங்கித்தான் அப்படிச் செய்தது போல யாரும் சந்தேகப்படக் கூடாது. இந்த இரண்டு உறுப்பினர்களாவது இப்படிப்பட்ட கடிதத்தை எழுதியுள்ளார்களே என்று நான் சந்தோஷப்படுகிறேன்.

இந்தியாவின் அனைத்து முன்னணி உற்பத்தி் நிறுவனங்களும் உள்ளுக்குள் இந்த அவசரச் சட்டத்தை எதிர்த்தனர். சிலர் வெளிப்படையாகவும் எதிர்த்தனர்.

அந்த ஆர்டினன்ஸை வெளியிட்டு அரசு தன் கைகளை அழுக்காக்கியது. அதை ஆக்ட் ஆக மாற்றமால் பிராயச்சித்தம் தேடிக்கொண்டது.

 
At Wed May 04, 02:07:00 PM 2005, Blogger Thangamani said...

நன்றிகள் நந்தலாலா, பத்ரி.

 
At Wed May 04, 02:32:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

நன்றி பத்ரி.
பின்னணி பற்றி தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.

சென்ற பா.ஜ.க ஆட்சி இவ்விடயத்தில் ஐ.டி.சி நிறுவனத்தினடமிருந்து பெரும் ஆதாயமடைந்ததாக நினைப்பதற்கான காரணம் நிறையவே உள்ளது. இதை ஒரு குற்றச்சாட்டாகவே காங். தரப்பும் முன் வைத்தது. ஆனால் தொடர்ந்து நடந்து வருபவை, அரசியல் அதிகார வர்க்கத்திற்கும், முதலாளிகள் சாம்ராஜ்யத்திற்கும் இடையேயான பற்று வரவை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

அறிக்கை, நாடாளுமன்றத்தில் கோரிக்கை போன்றவை மூலம் வெளிப்படையாக அனுகாமல், மறைவாக கடிதம் எழுத வேண்டிய அவசியம் என்ன?

//அந்த உறுப்பினர்களே தைரியமாகத் தங்கள் பெயர்களைச் சொல்ல வேண்டும்//

கடித விவகாரத்தை சிதம்பரம் கிளப்பிய பின்னும் இவர்கள் மவுனம் சாதிப்பதிலிருந்தே உங்களுக்கு தெரியவில்லையா, எதனால் என்று.

//ஓர் அரசு என்ன செய்திருக்க வேண்டும்?//

நீங்கள் நேர்மையானவர்களால் ஆளப்படும் அரசிடம் இதை கேட்கலாம். ஆனால் இந்தியாவில் இதை எல்லாம் எதிர்பார்த்தீர்களானால் ஏமாற்றமே மிஞ்சும்.

//தான் வழக்கில் தோற்கும் போது தனக்கு சாதகமாக மாற்றி இயற்றும் அரசு//

இதைப்பற்றி தனி பதிவே எழுத வேண்டும்.
இங்கே சட்டங்கள் வெளிப்படையனவையோ,மக்கள் நலனை கருத்தில் கொண்டவையோ, மக்கள் கருத்தை எதிரொலிப்பவையோ கிடையாது. பெறு நிறுவனங்களிடமிருந்து பெறுத்த ஆதாயம் பெற்றுக்கொண்டு/பெறவேண்டி புதிய சட்டங்கள் அறையப்படுவதை நீங்கள் அறிவீர்கள் தானே?

இதுவரை ஆளும் கட்சியினர் நலனே ஆட்சியின் குறியாககொண்ட கட்சியினரே இந்த நாட்டை ஆண்டு வந்திருக்கினறனர்.

இந்த வைக்கோற்போரில் நியாய ஊசியை தேடி எடுக்க முடியுமா என்ன?

சமீபத்தில் இந்த அரசு ரிலையன்ஸ், டாடா ஆகிய இரு நிறுவனங்களை கடும் நெருக்கடிக்குள்ளாக்கி, ஆதாயமடைந்ததாக சில அனுமானங்களும் உண்டு. அந்த பட்டியலில் இப்போது ஐடிசி.

//தான் வழக்கில் தோற்கும் போது தனக்கு சாதகமாக மாற்றி இயற்றும் அரசு இருந்தால், நீங்கள் அந்த நாட்டில் வசிப்பீர்களா?//

அரசின் 'தனக்கு சாதகமாக' என்பதை 'தங்களுக்கு சாதகமானதாக' மாற்றும் சக்தி படைத்த பெறு முதலாளிகளுக்கு இந்த நாட்டில் வசிப்பதில் என்ன குறை?

மற்றபடி 110 கோடியில் எத்தனை பேரிடம் பாஸ்போர்ட் உள்ளது?;p

 
At Wed May 04, 02:50:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

நன்றி ntmani.

 
At Wed May 04, 04:16:00 PM 2005, Blogger பத்மா அர்விந்த் said...

அவசரத்தில் இந்தியா AIDSல் முன்னனி அடைய சில ஆயிரமே உள்ளது என்றும், இந்திய ராணுவமே பரப்பி கொண்டிருக்கிறது என்று எழுதாதீர்கள்.We know all atrocities of Army soldier. But AIDs spread is mainly due to people who visit prstitutes, foriegners etc.

 
At Wed May 04, 05:23:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

தேன் துளி,
நான் இந்திய ராணுவமும் தன் பங்குக்கு எய்ட்ஸ் பரப்பலில் ஈடுபட்டுள்ள நிலையில் என்றே தெளிவாக, இராணுவத்திற்கும் ஒரு பங்கிருப்பதாக மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.

வெளி நாட்டு பயணிகள், பாலியல் தொளிலாளர்களை குறிப்பிடாமல், ராணுவத்தை மட்டும் குறிப்பிட்ட காரணம் உண்டு.

கட்டுப்பாடு மிகுந்த இராணுவம், அதன் வீரர்களை நாட்டை காப்பதற்கான பணியில் ஈடுபடுத்தப்படுத்தியுள்ளதாக நாமெல்லாம் நம்பும் போது, அவர்களின் இத்தகைய செயலை சுட்டிக்காட்டுவது தவறா?

இதுவரை அஸ்ஸாம் ரைபிளில் மட்டும் 38 இராணுவத்தினர் எய்ட்ஸ்க்கு பலியாகியுள்ளனர். மேலும் 180 பேர் இந்நோயுடன் போராடி வருகின்றனர்.
மற்றபடி இந்தியாவில் எய்ட்ஸின் அதிகப்படியான பரவலுக்கு காரணி வேறு என்பதை நானும் அறிவேன்.

ஒரு வேளை இந்த பதிவில் இரண்டு இடங்களில், இந்திய இராணுவம் பற்றி குறிப்பிட்டிருப்பது உங்களுக்கு கோபமா?

//அவசரத்தில் இந்தியா AIDSல் முன்னனி அடைய சில ஆயிரமே உள்ளது என்றும்//

இதை பார்த்ததும் ஒருவேளை இந்தியா முதல் இடத்தை பிடித்தாகி விட்டது, நாம் தான் தவறாக எழுதிவிட்டோம் என நினைத்தேன்.

நல்ல வேளையாக இந்தியாவுக்கு இன்னும் இரண்டாவது இடம் தான். இன்னும் இந்த விடயத்தில் முதல் இடத்தை இந்தியா பிடிக்காததில் எனக்கு மகிழ்ச்சியே!
அப்ப உங்களுக்கு?
நன்றி,
-நந்தலாலா.

 
At Wed May 04, 05:35:00 PM 2005, Blogger பத்மா அர்விந்த் said...

நந்தலலா
இந்தியாவில் AIDS அதிகம் என்றாலும் அதை தடுக்க எடுக்கும் முயற்சிகளும் அதிகம். இன்னும் ஆப்பிரிக்காவில் உள்ள முசாம்பிக், கென்யா மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களில் இன்னமும் பர்விக் கொண்டிருக்கிறது. எண்ணிக்கை அதிகம் என்றிடினும் இந்தியாவின் முயற்சியை பாராட்டும் பலர்(ஐ நா அங்கத்தினர், மனித உரிமை கழக உறுப்பினர்), அந்த முயற்சிகளை ஆப்பிரிக்காவிலும் பரப்ப வேண்டும் என்று சொல்வதையும் கேட்டிருக்கிறேன். குறை கூறுவதில் தவறில்லை, ஆனால் முயற்சியையும் பாராட்ட வேண்டும். மேலும் உல்லாச பயணிகள் மூலமே இந்தியாவில் AIDS அதிகமாக பரவுகிறது. ராMஉவத்தில் இந்த் கொடுமை இல்லை என்று சொல்லவில்லை ஆனால் முன்னனி காரணம் அதுவல்ல. india has many problems, but still put lots of effort to prevent AIDS epidemic.

 
At Wed May 04, 11:11:00 PM 2005, Anonymous Anonymous said...

`

 
At Thu May 05, 05:11:00 AM 2005, Blogger Muthu said...

This comment has been removed by a blog administrator.

 
At Thu May 05, 05:18:00 AM 2005, Blogger Muthu said...

நந்தலாலா,
தேன்துளி சொல்வதையே மறுமொழிகிறேன். 100 கோடிக்கும் அதிகமான மக்கள் கொண்ட ஒரு நாட்டில் வெறும் எண்ணிக்கை என்று எடுத்தீர்களானால் எல்லாம் அதிகமாகத்தான் இருக்கும். அமெரிக்காவின் எயிட்ஸ் சதவீதத்துக்கும், இந்தியாவின் எயிட்ஸ் சதவீதத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் எயிட்ஸ் நோயைக் குறைக்க இந்தியா பெரும் முயற்சி எடுத்துவருகிறது, பல ஆப்பிரிக்க நாடுகளில் எத்தனை பேர் எயிட்ஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றே இன்னும் சரியாகக் கணக்கிடப்படவில்லை. கணக்கிடப்பட்டால்தான் தெரியும் எத்தனை பேர் என.

எயிட்ஸ்நோய் பரவும்வேகம் என்று பார்த்தால் இந்தியா மிகவும் பின்னால் இருக்கிறது. காரணம் இந்தியா எடுக்கும் தடுப்பு நடவடிக்கைகள்தாம்.

குறை கூறலாம், அதே நேரத்தில் நிறையைக் கூற மறக்கக்கூடாது.

 
At Thu May 05, 12:44:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

முத்து,
//இன்னும் சரியாகக் கணக்கிடப்படவில்லை. கணக்கிடப்பட்டால்தான் தெரியும் எத்தனை பேர் என//

ஆப்ரிக்க நாடுகளுக்கு சொன்ன அதே கருத்து, இந்தியாவுக்கும் பொருந்தும். மற்றபடி இந்த பதிவில் நான் 'இந்தியாவில் எய்ட்ஸ்' என்பது பற்றி எழுதவில்லை. நடன மங்கையர் பற்றி எழுதும் போது எய்ட்ஸை தொட்டுப்போனேன். பின்னர் இந்தியாவில் எய்ட்ஸ் குறித்து விளக்கமாக எழுத உள்ளேன்.
நன்றி.
நந்தலாலா

 

Post a Comment

<< Home