Get Nandalaalaa atom feed here!

Monday, May 02, 2005

ஒரு விபத்து.

நண்பர்களுக்கு வணக்கம்.

கடந்த வியாழன் அன்று மதியம் அலுவலக பணி நிமித்தம் உடன் பணிபுரியும் இருவர், அருகாமையில் உள்ள நகரமொன்றுக்கு செல்ல வேண்டியிருந்தது. எனக்கு செல்ல வேண்டிய அலுவல் பணி எதுவும் இருக்கவில்லையாயினும், செல்லுமிடத்தில் வசிக்கும் நண்பரொருவரை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்க வேண்டி, அவருக்கும் தகவல் தெரிவித்துவிட்டு, பயணத்தில் நானும் இறுதி நேரத்தில் இணைந்து கொண்டேன்.

பயணம் தொடங்கியது. வழியில் சிற்றுண்டிக்காக, நெடுஞ்சாலையிலிருந்து விலகி, ஒரு உணவகத்தில் நிறுத்தினோம். அது வரை நான் தான் வாகனமோட்டி வந்தேன். ஆனால் நாங்கள் செல்லவேண்டிய அந்த நகரம் எனக்கு அவ்வளவு பரிச்சயம் கிடையாது. உடன் வந்தவரோ மாதமிருமுறை அங்கு சென்று வருபவர். ஆகவே பயணத்தை மீண்டும் தொடங்கிய போது அவரை வாகனத்தை செலுத்த சொல்லிவிட்டு, நான் அருகில் அமர்ந்து கொண்டேன்.
பின்னிருக்கையில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த தொழிலாளி ஒருவர். இவர் எங்கள் நிறுவனத்தில் இணைந்து ஒரு மாதமே ஆகியுள்ளது.

ஐந்து நிமிட பயணத்தில் நெடுஞ்சாலையை மீண்டும் தொட்டோம். அந்த சாலையில் சாதாரணமாக வார இறுதியில் அதிகமாக இருக்கும் போக்குவரத்து, அன்று வார நாள் ஆனதால் அவ்வளவாக இல்லை.

எங்கள் வாகனம் முன், பின், பக்கவாட்டில் எந்த வாகனமும் இல்லாது தனியே செல்வதால், நண்பர் 110 மைல் வேகத்தில் வாகனத்தை செலுத்தி சென்றுகொண்டிருக்கிறார். அந்த பகுதியில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகம் 90 மைல் தான்.

இன்னும் 1 மைல் தூரத்தில் நகரினுள் செல்லும் மேம்பாலத்தினுள் புக வேண்டியிருந்ததால். நண்பர் வேகத்தை குறைத்து ஓடை மாற்றி வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தார். அப்போது அது நிகழ்ந்தது.

நேரே சென்று கொண்டிருந்த வாகனம் ஏதோ ஒரு விசையால் தள்ளப்பட்டது போல் பக்கவாட்டில் சாய ஆரம்பித்தது. சாய்ந்த நிலையிலேயே சில வினாடி சென்ற பின் கவிழ்ந்தது. நடப்பதை அவதானிக்கவோ, என்ன செய்வதென்பது குறித்து முடிவெடுக்கவோ முடியவில்லை. செயலற்று நாங்கள் வாகனத்தினுள் இருக்க, வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுபட்டு தன் விருப்பம்போல் சாய்ந்த நிலையிலேயே சிறிது தூரம் சென்றுவிட்டு பின் தலைகீழாய் கவிழ்ந்தது.

வாழ்வின் இறுதி நிமிடங்களை உணர்ந்தேன்.

பக்கவாட்டில் சாய்ந்தபோதே கதவில் இருந்த காற்றுப்பை வெளியே வந்து விட்டது. அது என்னை முழுதாக தாங்கி சற்று முன் புறமாகவும் வாகனத்தின் நடுப்புறம் நோக்கி தள்ளியது. இருக்கை பட்டை பின் புறமாய இழுத்து மிகுந்த அழுத்தத்தை கொடுத்தது.

வாகனம் தலை கீழ் ஆன நேரத்தில் முன் பக்க காற்றுப்பையும் விரிய நான் இருக்கையுடன் சேர்த்து அழுத்தப்பட்டேன். பலத்த சப்தத்துடன் முன் புற கண்ணாடி உடைந்து மேலே சிதறுவதை உணர முடிந்தது.

பின்னிருக்கை நபரின் ஓலமும் இப்போது கேட்டது. அவர் இருக்கை பட்டையை அணிந்திருக்கவில்லை என நினைக்கிறேன்.

அதற்கு பின்னர் சற்றேறக்குறைய ஐந்து-பத்து வினாடி நேர அளவிற்குள் வாகனம் இரு முறை நிமிர்ந்து மறுபடியும் கவிழ்ந்தது. இதை வாகன அசைவை கொண்டே அவதானிக்க முடிந்தது. பார்வையை முற்றாக காற்றுப்பை மறைத்து விட்டிருந்தது.

இப்போதும் வாகனம் முன்னோக்கி இழுத்து செல்லப்படுவது நிற்கவில்லை. மூன்றாம் முறையாக கவிழ்ந்து மீண்டும் நிமிரும் போது வாகனம் எதனுடனோ மோதுவதும், அதனால் முன்னோகி செல்வது எதிர் உந்துதலுடன் நிறுத்தப்படுவதும், என் உடல் முழுவதுமாக காற்றுப்பைக்கு எதிராய் அழுத்துவதும், இருக்கை பட்டை கடினமாக பின்னிழுப்பதும் உணரமுடிந்தது.

பக்கவாட்டில் சாய்ந்த நிலையில் வாகனம், அதன் மேல் புறமாக எனது இருக்கையும். அதன் அருகிலிருக்கும் கதவும். இருக்கை பட்டையுடன் ஒரு மாதிரியான தொங்கிய நிலையில் நான். பக்கவாட்டு காற்றுப்பை எப்போது காற்றிழந்து, சுருங்கியது என்று தெரியவில்லை.

முன் புற காற்றுப்பை வெளிப்புறமாக- கதவை நோக்கி என்னை தள்ளிய நிலையில் வைத்திருக்க வாகனத்தின் உட்புறம் என்னால் பார்க்க இயலவில்லை. கதவின் கண்ணாடியும் உடைந்துவிட்டிருந்தது. மேலிருந்து சூரிய ஒளி முகத்தில் சுட்டு இன்னும் நான் இறக்கவில்லை என்பதை உணர்த்தியது.

எப்படி மீள்வது, என்ன செய்யவேண்டும் என்பது குறித்து ஒன்றும் தோன்றவில்லை. உடனிருந்த இருவர் நிலையும் என்னவென்று தெரியவில்லை. இரண்டு பேரின் பெயர்களையும் உரத்து அழைத்தேன். பதிலில்லை. என் குரலிலும் அதிக சப்தம் வராததை உணர்ந்தேன்.

உடனடியாக வெளியேற வேண்டும். பின் இருவரின் நிலை அறிய வேண்டும். அவர்களுகு ஏதேனும் உதவ முடியுமா என பார்க்க வேண்டும்.

ஒரு மாதிரி தொங்கிய நிலையிலேயே, முன்னும் பின்னும் உடலை அசைத்து காலை எதன் மீதோ ஊன்றி, மிகுந்த முயற்சிக்கு பின் இருக்கை பட்டையை விடுவித்து, உடலை கதவின் சன்னல் வழியே வெளியே செலுத்தி, ஒரு வழியாய் எழுந்து நிற்பது போன்ற நிலையை அடைந்தேன். பிறகு கையை வாகனத்தின் வெளிப்புறம் ஊன்றி, அப்படியே உந்தி முழுவதுமாக வெளிக்கிட்டு விட்டேன்.

எங்கள் வாகனம் சாலையிலிருந்து விலகி விளிம்பிலிருக்கும் அறிவிப்பு பலகை கம்பத்தில் மோதி நிற்பதை அறிய முடிந்தது. பின்புற கதவின் சன்னல் வழியே நோக்கிய போது, அங்கே மடங்கிய நிலையில், ஒரு கால் மேலே உயர்ந்தும், மற்றொரு கால் இருக்கைக்கு அடியிலுமாக, உடல் அடியிலுமாக பின்னியது போல் கிடந்தார் தாய்லாந்து நபர்.

ஓட்டி வந்த நண்பரின் ஒரு கை மட்டும் காற்றுப்பைக்கும் இருக்கைக்கும் இடையில் பிதுங்கிய நிலையில் தெரிந்தது. தகுந்த உதவியின்றி இவர்களை மீடபது இயலாது என்பதும் புரிந்தது. அவர்களை பெயரை கூறி விளித்தும் எந்த பதிலும் அவர்களிடமிருந்து வரவில்லை. அவர்களுக்கு சுய நினைவு இல்லை என்பது புரிந்தது. எனக்கு கவலை அதிகரிக்க தொடங்கியது. வாகனத்தில் மேலே இருந்த படியே செயலற்று பார்த்து கொண்டிருந்தேன்.

இப்போது மூன்று வாகனங்கள் ஓரங்கட்டப்பட்டு, அதிலிருந்தவர்கள் எங்களை நோக்கி வரத்துவங்கினர். அதிலொருவர் செல்பேசியில் விபத்து குறித்து தகவல் தெரிவித்து கொண்டிருந்தார். மற்ற இருவர் வாகனத்தில் இருந்து கீழே இறங்க எனக்கு உதவினார்கள்.

இறங்கிய பின் வாகனத்தின் முன் புறம் செல்ல எத்தனித்தேன். இடது காலை நகர்த்துவதற்கு மிகுந்த சிரமமாய் இருந்தது. காலை பெரிய பாரமாக உணர்ந்தேன். பின்னந்தலையும் கழுத்தும் எதனுடனோ வேகமாக முட்டியது போல் ஒருவித அதிர்வுடனேயே இருந்தது.

சிரமத்துடனே வாகனத்தின் முன் புறமாக சென்று, கண்ணாடி இருந்த இடத்தின் வழியே பார்த்தேன். வாகனத்தை ஓட்டிவந்த நபர் இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே தரையை ஒட்டி சலனமற்ற நிலையில் சாய்ந்து கிடப்பது தெரிந்தது. முகத்தில், தலையில் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. தலை காற்றுப்பைக்கு வெளியே இருந்ததால் சுவாசிக்க சிரமிருக்காது என புரிந்தது.

அவரை நெருங்கி அமர முயற்சிக்க, இடது காலை மடக்க முடியவில்லை. வலி உச்சத்தை தொட்டது. அவரை வெளியே எடுக்க உதவும்படி அருகிலிருந்தவரிடம் சொன்னேன். அவர் அது தவறானது, மீட்பு குழுவினர் வந்து தான் செய்யவேண்டும் என கூறினார். அது தான் சரியான முறை என தெரிந்த போதும் எனக்கு ஆதங்கமாகவே இருந்தது. கண் முன்னே அடிபட்டு கிடக்கும் மனிதனுக்கு உதவ முடியாத கையறு நிலை.

நான் இறங்க உதவி செய்தவர் தண்ணீர் புட்டியை கொடுத்தார். அப்போது தண்ணீர் அருந்துவது தேவையாக இருந்தது. ஆனால் மன நிலை இல்லை. இருவரையும் மீட்பது ஒன்றே குறியாக இருந்தது. மற்றொருவர் என்னருகில் வந்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்து விட்டதாகவும், வெகு விரைவில் அவர்கள் வந்து விடுவார்கள் என்றும் கூறினார். வேறு யாருக்காவது தகவல் தர வேண்டுமா என வினவினார்.

அவரிடம் எங்கள் அலுவலக எண்ணை கூறி முடிந்தால் தகவல் தெரிவிக்குமாறு வேண்டினேன். அவர் நான் கூறிய எண்ணை ஒற்றி என்னிடமே பேசியை தந்துவிட்டார். முன் அலுவலக பணியாளப்பெண்ணிடம் பேசி சுருக்கமாக தகவல் தெரிவித்து சற்று நேரம் கழித்து என் கைபேசியில் அழைக்கும் படி கூறி முடித்தேன்.

அந்த ஊரில் நான் சந்திக்கவிருந்த நபரின் தொலைபேசி எண் நினைவில் இல்லை. கைபேசியில் அவர் எண் உள்ளது, ஆனால் கைபேசி கையில் இல்லை, வாகனத்தின் உள்ளே மாட்டிக்கொண்டது.

அப்போது ஒருவர், விபத்துக்குள்ளான வாகனத்தின் அருகில் நிற்க வேண்டாம், தீப்பற்றிக்கொள்ளும் என்று கூறி பீதியை கிளப்பினார். அதை கேட்ட ஓரிருவர் விலகி செல்ல ஆரம்பித்தனர். என்னையும் விலகி வந்து விடும்படி கூறினார் அருகிலிருந்தவர். நான் அங்கே நின்று செய்யக்கூடியது எதுவுமில்லை. இனி மீட்பு குழுவினர் வந்து சேர்ந்து தான் எதுவும் செய்யமுடியும் என்ற உண்மை புரிந்தாலும் என்னால் அங்கிருந்து அகலமுடியவில்லை.

எப்படி விபத்து நடந்தது என்று வினவினார் ஒருவர். மற்றொருவர், வாகன ஓட்டி குடித்திருந்தாரா என் கேட்டார். வேறொருவர் உடன் வந்தது எத்தனை பேர், உறவினரா நண்பர்களா பெண்கள் குழந்தைகள் உண்டா என்றெல்லாம் கேட்க துவங்கினர். அவர்களுக்கு பதில் பேசும் மன நிலை எனக்கில்லை. உடனடியாக உதவி வந்து சேரவேண்டும் என்ற தவிப்பு மாத்திரமே எனக்குள் இருந்தது.

சற்று தொலைவில் நெருக்கடி நேர ஒலிப்பான், உதவி வாகனங்களின் வருகையை கூறியது. சற்று நம்பிக்கை கூடியது. ஆனால் சோதனையாக வாகனங்கள் நகரினுள்ளிருந்து வருவதால் எதிர் திசையில் சாலையின் மறுபுறத்து ஓடையில் சென்றது. விபத்து நடந்த இடத்திலிருந்து 3 மைல் தொலைவில் தான் இவ்வாகனங்கள் திரும்பி இவ்வோடைக்குள் நுழைய முடியும் என்றார் அருகிலிருந்தவர். அப்படியென்றால் இன்னும் 3 மைல் சென்று பின்னர் திரும்பவும் 3 மைல் வர வேண்டும். எப்படியும் 6 நிமிடத்திற்கு மேலாகும் என்பதை உணர்ந்த போது அயர்ச்சி அதிகமானது.

நேரம் செல்ல செல்ல என் இடது காலில் எடை அதிகரிப்பது போல் உணர்ந்தேன். வலியும் மெல்ல கூடிக்கொண்டிருந்தது. மேலும் இப்போது இடது காலை தரையில் ஊன்ற முடியவில்லை. உயர்த்தியே வைத்திருந்தேன். இப்போது பின்னதலையிலிருந்து கழுத்து, முதுகும் வலது கையும் வலிக்க ஆரம்பித்திருப்பது தெரிந்தது.

மேலும் சில மீட்பு வாகனங்கள் எதிர் ஒடையில் செல்ல தொடங்கியது. அவற்றில் இரண்டு நாங்கள் இருந்த இடத்திற்கு எதிர்புறம் நிறுத்தப்பட்டு, அதிலிருந்து சிலர் சாலையை குறுக்காக கடந்து எங்களை நோக்கி வந்தனர். அவர்கள் சுமப்பு படுக்கை, சிறு பெட்டிகள் ஆகையவைகளை தாங்கி வந்தனர். உதவி நெருங்கி விட்டது என்ற நினைப்பே நம்பிக்கை தந்தது.

மருத்துவ குழுவினர் வாகனத்தை நெருங்கி சோதிக்க தொடங்கினர்.

அவர்களில் காவல் துறை ஆள் ஒருவர் அங்கிருந்தவர்களிடம் விபத்தை பார்த்தவர்கள் யார் என கேட்க, அவர்கள் வாகனத்தில் பயணித்தவர் என என்னை சுட்டினர்.

இதை கேட்ட மருத்துவ குழுவினர் இருவர் என்னை நெருங்கி, எனக்கேற்பட்ட காயங்கள் குறித்து விசாரிக்க துவங்கினர். நான் எனக்கு ஒன்றும் ஆகவில்லை என கூறி மற்ற இருவரையும் மீட்க சொன்னேன். அதை மற்றவர்கள் செய்கிறார்கள் எனவும் எனக்கு என்ன என்று கேட்பதிலேயே குறியாகவும் இருந்தார். இது எனக்கு எரிச்சலை மூட்டியது. நமக்கு உதவுபவர்களிடமே எரிச்சல் கொள்ளவைக்கும் விந்தையான நிலை.

எனக்கு சிறு கீறலும் இல்லை, மற்றவர்கள் தான் நினைவற்று வாகனத்தினுள் சிக்கியுள்ளனர். ஆகவே முதலில் அவர்களுக்கு உதவுங்கள் என்று சற்று கடுமை கலந்து கூறினேன். ஆனலும் அவர் மற்றவர்கள் அதை தான் செய்வதாகவும், எனக்கு முதலுதவி அளிப்பது தன் கடமையென்றும், அதற்கு நான் உதவ வேண்டுமென்றும் பணிவுடனே கூறினார். நான் மீண்டும் மீண்டும் எனக்கு ஒன்றும் இல்லை என்றே கூறிக் கொண்டிருந்தேன். அச்சமயத்தில் எனக்கு எந்த பாதிப்பும் இருப்பதாகவும் தெரியவுமில்லை. வலிகளெல்லாம் சாதாரணமானதாகவே தோன்றின.

இப்போது எதிர் ஓடையில் சென்ற வாகனங்கள் அனைத்தும் வந்து சேர துவங்கின. தீயணைப்பு, மருத்துவ உதவி, காவல் வாகனம் உள்ளிட சுமார் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து சேர்ந்தது. அதிலிருந்து 30 முதல் 40 வரையிலானவர்கள் இறங்கி சாய்ந்து கிடந்த வாகனத்தை சூழ்ந்து கொண்டனர்.

மீட்பு குழுவின் அதிகாரி ஒருவர், சூழலை பார்வையிட்டு மீட்பு பணி குறித்து கட்டளைகள் பிறப்பிக்க துவங்கினார்.

அவ்விடத்தில் பரபரப்புடன், முன்னெழுதப்பட்ட கதியில் பலர் இயங்க தொடங்கினார்கள். இரண்டு பேரும் காப்பாற்றப்பட்டு விடுவார்கள் என நான் சற்றே ஆசுவாசமடைந்தேன்.

முன்னர் என்னை சூழ்ந்த மருத்துவ பணியர் இன்னும் என்னருகிலேயே நின்று கொண்டிருந்தார்கள். இப்போது அதில் ஒருவர் என் இடது காலின் காலணி எங்கே எனக்கேட்டார். அப்போது தான் பார்த்தேன் என் இடது காலில் காலுறை மட்டுமே இருந்தது. காலணியைக் காணவில்லை. வாகனத்தினுள்ளே விழுந்திருக்க கூடும். அல்லது வாகனத்தின் மேலிருந்து இறங்கும் போது பிரிந்ததா எனவும் தெரியவில்லை.

காலை இப்போது தரையில் நன்றாக ஊன்றியிருந்தேன். வலியும் இல்லை என்பதை உணர்ந்தேன். ஆனால் காலை நகர்த்த முயன்றபோது முடியவில்லை. இடது கால் உணர்வற்ற நிலையை அடைந்துவிட்டிருந்தது.

இதை சொன்னதுமே, சுமக்கும் படுக்கையில் என்னை படுக்கவைத்து மேலும் இருவரை துணைக்கழைத்தனர். என் கழுத்தில் ஒரு பட்டை கட்டப்பட்டது. பின்னர் என் கால் சட்டையை கத்தரிக்கோல் கொண்டு வெட்ட முற்சித்தார் ஒருவர். அந்நிலையிலும் புதிதாக வாங்கி, அன்று தான் முதலாய் அணிந்த கால் சட்டையை காக்க வேண்டி, நானே கழட்டிவிடுவதாக கூறினேன். ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் என்னை படுத்த நிலையிலைருந்து எழவிடாமல் செய்து, கால் சட்டையை வெட்டி விட்டனர். மற்றொருவர் என் இடது கையில் ரத்தநாளத்தை ஊசியால் தேடி வலிக்கச்செய்தார். இதற்குள் எங்கெங்கே வலிக்கிறது என ஒருவர் கேட்க துவங்கினார்.

இன்னும் என் சக பணியாளர்கள் குறித்த கவலையே எனக்குள் இருந்த படியால் நான் அவர்கள் நிலை பற்றியே விசாரித்தேன்.

இப்போது ஒரு படுக்கையை இருவர் சுமந்து செல்வது, எனக்கு வலப்புறமாக தலைக்கு மேல், தெரிந்தது. அது வாகனம் ஓட்டி வந்தவர் என்பதை கேட்டு தெரிந்து கொண்டேன். அவருக்கு சுவாசம் இருப்பதாகவும் ஆனால் சுய நினைவற்று இருப்பதாகவும் தெரியவந்தது. தலையை திருப்ப முடியாத நிலையில் படுக்க வைக்கப்பட்டிருந்ததால் என்னால் அங்கு நடக்கும் மற்ற எதையும் பார்க்க முடியவில்லை.

அவரை ஏற்றிக்கொண்ட வாகனம் புறப்பட்டு செல்லும் சப்தம் கேட்டது.

பின் இருக்கையில் அமர்ந்து வந்தவர் சற்று கடினமான முறையில் சிக்கிக்கொண்டிருப்பதாகவும், மீட்க சிறிது நேரமாகலாம் என்றும் சொன்னார்கள். அவருக்கும் சுவாசம் இருப்பதாக அறிந்ததும் சற்று நிம்மதி அளித்தது.

இதற்கிடையே ஒரு காவலர் என் தலைக்கு அருகே அமர்ந்த நிலையில், நான் நலமாக இருப்பதாகவும், மற்ற இருவருக்கும் பெரிய ஆபத்து எதுவுமில்லை என்றும் கூறினார். அவர் புன்சிரிப்புடனும் கனிவுடனும் பேசி எனது பெயர், சக பணியாளர் பெயர்கள் விபத்து பற்றிய விவரங்களை என்னிடம் கேட்க துவங்கினார்.

நான் பதில் சொல்ல தொடங்க அனைத்தையும் குறித்துகொள்ள தொடங்கினார். நான் பேசுவதை சிறு ஒலிவாங்கி மூலம் பதிவு செய்து கொண்டனர்.

இப்போது கையில் ஊசி சரியாக குத்தப்பட்டு அதில் திரவம் நிரம்பிய உரை பொருத்தப்பட்டிருந்தது. எனது படுக்கை இருபுறமும் சமமாக ஒரே நேரத்தில் உயர்த்தப்படுவதை உணர்ந்தேன். முன்னும் பின்னுமாக இருவர், பக்கவாடில் மருந்து உறையை உயர்த்தி பிடித்த படி ஒருவர், மறுபுறம் ஒருவர் என நான்கு பேருடனான என் முதல் பயணம் சுய நினைவுடனே துவங்கியது.

பிறகு ஒரு வாகனத்தினுள் அதிக அதிர்வின்றி செலுத்தப்பட்டேன். நால்வரும் எனக்கு இருபுறமும் அமர்ந்து கொள்ள, கதவு சாத்தப்பட்டது. வாகனத்தினுள்ளே குளிர்ச்சியை இதமாக உணர்ந்தேன். வாகனம் மெல்ல ஊரத்தொடங்கியது.

சற்று நேரத்தில் உடம்பில் வலி அனைத்தும் குறைந்ததுவிட்டிருந்தது. ஆனால் மூச்சு விடுவதற்கு சற்று சிரமமாக உணர்ந்தேன். பின் கழுத்தில் வலி வெடிப்பதைப்போல் தொடங்கி முதுகுத்தண்டில் பாய்ந்து பின் இரண்டு கைகளுக்கும் பரவுவதை உணர முடிந்தது. அதை சொல்ல முயற்சிக்கும் போது கண்கள் இருண்டது. பிறகு நினைவிழந்தேன்.

மூக்கில் சொருகப்பட்ட குழாயுடன், வெள்ளை விரிப்பு வயிறு வரை போர்த்தியிருக்க, வயிறு, மார்பிலிருந்து இணைப்புகள் கொடுக்கப்பட்டு பக்கத்தில் ஒரு சிறிய திரை மினுக்கிக்கொண்டிருந்தது.

கண்விழித்தபோது இருந்த குழப்பம் தீர்ந்து, மருத்துவமனை சூழல் புரிபட சற்று நேரமானது.

இடுப்புக்கு மேல் 30 டிகிரி சாய்வாக படுக்கவைக்கப்பட்டிருந்த எனக்கு நேர் எதிரே ஒரு கண்ணாடி திரையும், அதற்கப்பால் ஒரு கணியும், அதன் முன்னால் அமர்ந்து தொலைபேசியபடி ஒரு பெண்ணும் தெரிந்தனர்.

இப்போது பின் கழுத்தில் வலி அதிகமாக இருந்தது. உடலை அசைக்க முடியாதபடி படுக்கை உடன் நான் பிணைக்கப்பட்டிருந்ததை உணர்ந்தேன். இடது கையினுள் ஏதோ உறுத்தியது. சற்று நேரத்தில் அது ஒரு அழைப்பு மணிக்கான சொடுக்கி என்பதை உணர்ந்தேன். அதை அழுத்தினால் எதிரே தொலைபேசிக்கொண்டிருக்கும் பெண் எழுந்து வரக்கூடும். அதை அழுத்த எத்தனிப்பதற்குள் அந்த பெண் தொலைபேசியை விட்டுவிட்டு, அறைக்கதவை திறந்து உள்ளே பிரவேசித்தார்.

முகத்தில் சிரிப்புடன் என்னருகில் வந்து என் பெயரை குறிப்பிட்டு எப்படி உணர்கிறேன் என வினவினார். என் பதிலை எதிர்பார்க்காமல் என் படுக்கை அருகிலிருந்த தொலை பேசியில் மருத்துவரை அழைப்பதை கவனித்தேன். அருகிலிருந்த திரையை கவனித்தபடி என் இடது கையை மெல்ல பற்றி எல்லாம் சரியாகி விட்டது என்று புன்னகையுடன் கூறினார். பின்னர் அவர் குனிந்து கட்டிலுக்கு அடியில் எதையே பார்த்து விட்டு, மீண்டும் என்னை பார்த்து புன்னகைத்தார்.

சற்று நேரத்தில் மேலும் இரண்டு பெண்கள், அதில் ஒருவர் மருத்துவர், அறைக்குள் வந்தனர். அதில் மருத்துவர் முதல் பெண் செய்தது பொலவே என் பெயரை விளித்து எப்படி உணர்கிறேன் என்ற அதே கேள்வியை கேட்டார். கண்ணை திறந்து மூடி சைகையாய் சொல்ல, அவரோ வாயை திறந்து பதில் சொல்லும்படி சொன்னார். சரி என்ற ஒற்றை வார்த்தையை உச்சரித்தேன். வாய் முழுவதுமாக உலர்ந்து இருந்தது. எங்காவது வலியிருக்கிறதா என அவர் கேட்க, கழுத்தில், பின்புறம் என ஒற்றை வார்த்தைகளாய் உச்சரித்தேன். பின்னர் அவர் மற்ற பெண்ணிடம் ஏதோ சொல்ல அவர் மூக்கிலிருந்த குழாயை அப்புறப்படுத்த தொடங்கினார். அதே நேரம் மருத்துவர் போர்வையை விலக்கி இடுப்பின் கீழ் ஏதோ ஒரு மருந்தை ஊசி மூலம் செலுத்தினார். மூக்கிலிருந்த குழாய் அகற்றப்படும் போது மிகுந்த வலியும், குமட்டலும் ஏற்பட்டது. பிறகு சிறிய கோப்பையில் ஏதோ ஒரு திரவம், பழச்சாறும் இல்லாமல் மருந்தும் இல்லாமல், ஒன்றை பருக கொடுத்தனர். மிகுந்த தாகமாக இருந்தும் கூட முழுவதும் அருந்த முடியவில்லை.

இப்போது சற்றே தூக்கம் கலைந்து தெளிவானது போல் உணர்ந்தேன்.

தலை கழுத்து இரண்டு தோள்கள் வரை இணைத்து ஒரு மாதிரியான கழுத்து பட்டை ஒன்று பொருத்தப்பட்டு, தலையை திருப்ப முடியவில்லை.

சக பணியர் இருவர் பற்றியும் அவர்களிடம் வினவினேன். அவர்கள் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும், விசாரித்து தகவல் தருவதாகவும் சொன்னார்.

எனக்கு மயக்கம் வந்தது மற்றும் என் நிலை குறித்து விளக்கம் கேட்டேன். கழுத்தில் பின்புறம் அடி பட்டிருப்பதாகவும், அது இருக்கையுடன் ஏற்பட்ட அழுத்தத்தினால் இருக்கலாம் என்றும் அதனாலேயே மயக்கம் வந்ததாகவும், அடிபட்ட இடத்தில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை யாதலால் கவலை கொள்ள தேவையில்லை என கூறினார்.

இன்னும் இரண்டு நாட்கள் அசைவின்றி இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

மற்றபடி எனது இடது கணுக்கால் மூட்டு பிசகி உள்ளது. விபத்துக்கு பின் வாகனத்திலிருந்து குதித்தது, நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்தது, நடந்தது எல்லாம் சேர்ந்து கணுக்காலின் நிலை மோசமாகி இருந்திருக்கிறது.

மருத்துவமனை வந்தடைந்ததுமே, எல்லா சோதனகளும் செய்யப்பட்டு அதற்கான சிகிச்சைகள் முடிக்கப்பட்டு இப்போது தான் கண்விழித்துள்ளேன். நினைவற்ற நிலையில் சிகிச்சை முடிவடைந்தது ஒரு வகையில் நல்லதாகவே படுகிறது. இப்போதய மருத்துவ சிகிச்சை கண்கானிப்பில் வைத்திருப்பதே.

படுக்கையின் அருகில் சிறு மேசை மீது ஒரு பூங்கொத்து இருந்தது. அதை காண்பித்து உங்கள் நண்பர் வந்திருந்தார். வெளியே காத்திருக்கிறார். அனுப்புகிறேன் என கூறிவிட்டு ஏதேனும் தேவைப்பட்டால் அழைப்பு மணியை அழுத்தும்படியும், முதல் பெண் எனக்கு சேவை செய்ய காத்திருப்பதாகவும் சொல்லி, கண்ணாடிக்கப்பால் உள்ள கணி திரையில் நான் கண்கானிக்கப்படுகிறேன் என்பதையும் தெரிவித்து விடைபெற்றார்.

சற்று நேரத்தில் எனது பங்குதாரர் உள்ளே வந்தார். அவரின் சம்பிரதாய கேள்விகளுக்கு பின், மற்ற இருவர் குறித்தும் கூறினார். வாகனம் ஓட்டி வந்தவருக்கு முன் தாடையில் பலமான அடியும் தாடை எழும்பில் விரிசலும் ஏற்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சைக்கான தேவை இருக்கலாம்.

பின்னால் அமர்ந்து வந்தவர் முற்றிலும் நினைவிழந்து இருப்பதால் அவரை இன்னும் தீவிர கவனிப்பில் வைத்திருக்கிறார்கள். இன்னும் அவருக்கான தொழிலாளர் காப்பீடு எடுக்கப்படவில்லை. இது குறித்தும் பங்குதாரர் கவலை தெரிவித்தார். ஆனால் இப்பொதய பிரச்சனை அவர் குணமுற்று தேறி வருவதேயன்றி மற்றவை எனக்கு பெரிதாக படவில்லை. அதிக பட்சமாய் அவரின் மருத்துவ செலவுகளை நிர்வாகம் ஏற்க வேண்டியது வரலாம்.

பயணத்தின் போது, தாய்லாந்து தொழிலாளி, பேச்சு அவரை பற்றி சென்றபோது, தனக்கொரு காதலியும் அவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு குழந்தையும் இருப்பதை சொல்லி அவர்களின் படத்தையும் காட்டினார். அச்சமயத்தில் அது சாதரண விடயமே. ஆனால் இப்போது என் மனதில் அவர்களின் நினைவு அழுத்தியது. பங்குதாரரிடம், தொழிலாளரின் உறவினருக்கு இவ்விபத்து குறித்து தகவல் தரும்படி கூறினேன்.

மறுநாள் வெள்ளிக்கிழமை இரவு வாகனம் ஓட்டி வந்தவர் கண் முழித்துவிட்டதாகவும், சுய நினைவுடன் இருப்பதாகவும் கூறினார்கள். இன்னும் இரண்டொரு நாளில் அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்படக்கூடும்.

சனிக்கிழமை காலை இரண்டு காவல் அதிகாரிகள் என்னை சந்தித்து, சில கேள்விகளை கேட்டு அதற்கான என் பதிலை பதிவு செய்து சென்றனர்.

என் கைபேசியையும், மடிக்கணியையும் பங்குதாரர் என்னிடம் சேர்ப்பித்தார். வாகனத்தை சீர் செய்ய அதிக செலவு பிடிக்குமென்றும், மாற்றாக சிறிது கூடுதல் பணம் செலுத்தி புதிய வாகனம் எடுத்துவிட முடியும் என்பதையும் விவாதித்தோம். மூன்று மாதத்திற்கு முன்பு தான் இந்த வாகனம் வாங்கப்பட்டது.

கைதொலைபேசியில் உள்ளூர் நண்பரை அழைத்தேன். வியாழனன்று எனக்காக காத்திருந்தவர், நான் வராமலிருந்ததை விட தகவல் சொல்லாததை பெரும் குறையாக சொன்னார். பின்னர் நிலமையை விளக்கிய வுடன், அரை மணி நேரத்தில் வந்து விட்டார். இந்த இரண்டு நாட்களாக அவர் பேச்சு துணை மிகுந்த ஆறுதல் அளிக்கிறது. மற்றபடி மருத்துவமனையில் படுக்கையில் அசையாமல், கழுத்தை திருப்ப முடியாமல் இருப்பது நரக வேதனையான ஒன்று.

இதுவரை என்னுடைய அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி வரும் இரண்டு பெண்களும் என்றென்றும் எனது நன்றிக்குறியவர்கள். எனது ஒவ்வொரு அசைவுக்கும் அவர்கள் உதவி இன்றியமையாதது. அவ்வளவையும் இன்முகத்துடன் அவர்கள் செய்வது மிகுந்த பாராட்டுக்குறியது. அழைக்காவிட்டால் கூட அடிக்கடி தேவையை விசாரிப்பதும், புன்னகையுடனே எப்போதும் இருப்பதும் சாதாரண ஒன்றாக எனக்கு படவில்லை.

ஞாயிற்றுக்கிழமை வாகனம் ஓட்டி வந்தவருக்கும், மற்றவருக்கும் அறுவை சிகிச்சை, அளிக்கப்பட்டது. முதலாமவர் (அறுவை சிகிச்சைக்காக தரப்பட்ட) மயக்க நிலையிலும், இரண்டாமவர் சுய நினைவு தப்பிய நிலையிலேயும் இருக்கின்றனர்.

மாலை வாகனம் ஓட்டி வந்தவரின் மயக்கம் தெளிந்துவிட்டது. தாடையில் அடிபட்டிருப்பதால், அவரால் பேசுவதற்கோ, உணவு உட்கொள்வதற்கோ, இன்னும் சில நாட்கள் ஆகக்கூடும்.

தாய்லாந்து தொழிலாளியின் நிலை கவலைக்கிடமாகவே நீடிக்கிறது. தாய்லாந்தில் அவரின் சகோதரரிடம் தொலைபேசி, தகவல் தெரிவிக்கப்பட்டது.

திங்கள் காலை (இன்று) மருத்துவ சோதனைகளுக்கு பின் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டேன்.

இதற்கு முன்னும் சில விபத்துகளில் சிக்கியிருக்கிறேன். ஆனால் அவை அனைத்தும், விபத்து முடிந்த பின் தான், அப்படி ஒன்று நடந்ததே புரியும் வண்ணம் விரைந்து நடந்தவை. நடப்பதை உணரும் முன்னரே முடிந்து விட்டவை. ஆனால் இந்த விபத்தின் நிகழ்வு நேரம் நீண்டதால் மரண தருவாயை உணர வைத்தது.

விபத்து நேரத்தில் உதவிய நல்ல உள்ளங்கள், மீட்பு பணி குழுவினர், மருத்துவமனை பணியாளர்கள், தகவல் அறிந்து தொலைபேசி, நலம் விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் மனம் நெகிழ்ந்த நன்றி.

இதை வாசிக்கும் அன்பர்களுக்கும் நன்றி.

இரண்டு சக பணியர்களும் மருத்துவ மனையிலிருந்து முழுமையாக குணமுற்று திரும்புவதை ஆவலுடன் எதிர்பார்க்கும்

- நந்தலாலா.

16 Comments:

At Mon May 02, 06:09:00 PM 2005, Anonymous Anonymous said...

பழைய நிலமைக்கு மீண்டும் சீக்கிரமே வர எனது பிராத்தனைகள் மற்றும் வாழ்துக்கள்.

 
At Mon May 02, 06:28:00 PM 2005, Blogger Voice on Wings said...

Gripping and informative first person account of a tragic occurrance. உடல் வசதியில்லாத நிலையிலும், இங்கு பதிவிட்டு உங்கள் நிலையை இணைய அன்பர்களுக்குத் தெரியப் படுத்தியதற்கு நன்றி. உடன் வந்த இருவரும் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள். நீங்களும் விரைவில் உடல் நலம் பெற்று உங்கள் கலக்கல் பதிவுகளை தொடர்வீர்களாக.

 
At Mon May 02, 07:58:00 PM 2005, Anonymous Anonymous said...

Let us all prey for your and friends health especially for the THAI friend. Have confidence and faith too with your medicines.

 
At Mon May 02, 08:49:00 PM 2005, Anonymous Anonymous said...

பழைய நிலமைக்கு மீண்டும் சீக்கிரமே வர எனது பிராத்தனைகள்.

 
At Tue May 03, 04:09:00 AM 2005, Blogger -/பெயரிலி. said...

nalam peRuka

 
At Tue May 03, 09:49:00 AM 2005, Blogger துளசி கோபால் said...

நீங்கள் மூவரும் பூரண குணம் பெற இறைவனை வேண்டுகின்றேன்.

உங்கள் 'தாய்லாந்து நண்பர்' குணம்அடைந்துவிடுவார். கவலையை
விடுங்கள். எல்லாம் நல்லபடி நடக்கும்.

என்றும் அன்புடன்,
துளசி.

 
At Tue May 03, 11:54:00 AM 2005, Blogger Vijayakumar said...

நீங்கள் மூவரும் நலன் பெறவேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். படிக்கவே கஷ்டமாக இருக்கிறது.

 
At Wed May 04, 02:45:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

nono, voice on wings, anonymous, பாலகணேசன், புதியவன், -/பெயரிலி, துளசி கோபால், செல்வநாயகி, அல்வாசிட்டி.விஜய், உங்கள் அன்புக்கு என் மனம் நெகிழ்ந்த நன்றிகள்.
-நந்தலாலா

 
At Wed May 04, 03:05:00 PM 2005, Blogger Thangamani said...

நந்தலாலா, இன்றுதான் இதைப்படித்தேன். விரைவில் குணமடைய வேண்டுகிறேன். உங்கள் நண்பர்களும் நலமடைய வேண்டும். உடம்பை கவனித்துக்கொள்ளுங்கள்.

 
At Wed May 04, 04:52:00 PM 2005, Anonymous Anonymous said...

All of you will be Alright very soon!
All of us are praying!
- Ibnu Hamdun

 
At Wed May 04, 05:31:00 PM 2005, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

My prayers are with you and your friends Nandalala.

God Bless!

-Mathy

 
At Thu May 05, 01:07:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

ntmani, Ibnu Hamdun, மதி கந்தசாமி,
அனைவருக்கும் மிக்க நன்றி.
நந்தலாலா

 
At Fri May 06, 12:15:00 PM 2005, Blogger enRenRum-anbudan.BALA said...

நந்தலாலா,

இன்று தான் தங்கள் பதிவைப் பார்த்தேன்.

நீங்களும் மற்ற இருவரும் பூரண குணமடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். இந்த விபத்திலிருந்து
பெரிய சேதமில்லாமல் தப்பியதற்கு கடவுளுக்கும், நல்ல உள்ளங்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

உங்கள் நண்பர்கள் இருவரும் நிச்சயம் பழைய நிலைக்கு திரும்பி விடுவார்கள். கவலைப்படாதீர்கள்.

என்றென்றும் அன்புடன்
பாலா

 
At Fri May 06, 09:41:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

பாலா,
உங்கள் அன்புக்கும், ஆறுதலுக்கும் நன்றி.
நந்தலாலா

 
At Sat May 07, 02:58:00 AM 2005, Blogger SnackDragon said...

உங்கள் நண்பர்களும் நலமடைய வேண்டும். உடம்பை கவனித்துக்கொள்ளுங்கள்.

 
At Sat May 07, 09:09:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

கார்த்திக்ரமாஸ்,
உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி.
நந்தலாலா

 

Post a Comment

<< Home