Get Nandalaalaa atom feed here!

Friday, May 13, 2005

மீண்டும் இந்திய அமைதிப்படை?

மக்கள் விடுதலை போர்ப்படை அமைப்பினர், காவல் நிலையம் ஒன்றின் மீதும், அருகிலிருந்த காவலர் குடியிருப்பின் மீதும் எறிகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் பெரியளவிலான பாதிப்போ, உயிர் சேதமோ எதுவும் இல்லை. இதில் கவணிக்க வேண்டியது, முதல் முறையாக இவர்கள் எறிகணை பயன்படுத்தியதையே.

இத்தாக்குதல், ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், துர்கி காவல் நிலையம் மீது, வெறும் 200 மீட்டர் தொலைவிலிருந்து நடத்தப்பட்டது. 10ம் தேதி நல்லிரவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல், இந்திய பொதுவுடமை கட்சி (மாவோயிஸ்ட்) [Communist Party of India (Maoist)] யின் மக்கள் விடுதலை போர்ப்படையால் [People's Liberation Guerrilla Army (PLGA)] மேற்கொள்ளப் பட்டது. 'விடுவிக்கப்பட்ட பள்ளநாடு' பகுதி கமான்டர் சுரேஷ் தலைமையில், இரண்டு லாரிகளில் வந்த 30 இளைஞர்களால் மட்டுமே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் கையெறி குண்டுகளையும் பயண்படுத்தியுள்ளனர்.

அங்கிருந்த காவலர்கள், பதிலடியாக, இருதரப்பிலும் சம்பந்தப்படாத வாகன ஓட்டி ஒருவரை திருப்பி சுட்டுவிட்டு, கலைப்படைந்ததால், பின்னர் காவல் நிலையத்தின் உள்ளேயே ஓய்வெடுத்துக் கொண்டனர்.

சுமார் 30 நிமிடங்கள் தாக்குதலை நீடித்து அப்பகுதியை போர்க்களம் போல் தோன்ற செய்த மக்கள் விடுதலை போர்ப்படையினர், பின்னர் சம்பவ இடத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ள, அனுமான் ஆலயம் ஒன்றில், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தியுள்ளனர்.

ஓங்கோல், ஐதராபாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்தை தடை செய்த மக்கள் விடுதலை போர் படையினர், சாலையின் குறுக்கே அரசாங்க அட்டூழியங்களை கண்டிக்கும் பதாகைகளை கட்டியும், சிறு பாலங்களில் கண்ணிவெடிகளை புதைத்தும், டயர்களை கொளுத்தியும், அந்த பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இத்தாக்குதலில் பயன்பட்ட 500 மீட்டர் தூரம் வரை தாக்கக்கூடிய எறிகணை மக்கள் விடுதலை போர்ப்படையின் சொந்த தொழில்நுட்ப தயாரிப்பு எனவும், துர்கி காவல் நிலையம் மீது நடத்தப்பட்டது எறிகணைக்கு ஒரு "சோதனை தாக்குதல்" என்றும் கமான்டர் சுரேஷ் பத்திரிக்கையாளர்களிடம் பின்னர் தெரிவித்தார்.

இந்த எறிகணை, மது என்ற கமான்டரால் வடிவமைக்கப்படது என்றும், தற்போது நெல்லூர் காவல் துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் அவரை விடுவிக்கவே இந்த தாக்குதல் என்றும், அவரை விடுவிக்கும் வரை இது போன்ற தாக்குதல்கள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து தடை காரணமாக, 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் சாலையில் நிறுத்தப்பட்டன. அவற்றில் பயணம் செய்த நூற்றுக்கணக்கான மக்கள் முதல் முறையாக, மக்கள் போர்ப்படையினரை வெகு அருகில் கண்ணுற்றதுடன், அவர்கள் வெடிகளை புதைப்பதையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

சுமார் 3.30 மணி நேரத்திற்கு பிறகே இவர்கள் அங்கிருந்து விலகி, தங்கள் மறைவிடத்திற்கு சென்றுள்ளனர். அதுவரை அவர்களுக்கு எவ்வித எதிர்ப்பும் அரசு தரப்பிலிருந்து வரவில்லை.




ஆந்திராவில், நிலமற்ற ஏழை விவசாய கூலிகளின், உழைப்பை சுரண்டும் நில உடமையாளர்கள் மற்றும் கடன் கொடுத்து அநியாய வட்டிக்கு வாழ்க்கையை சீரழிக்கும் பண முதலைகளுக்கு எதிரான சிறு சிறு போராட்டங்கள் 1970களின் மத்தியில் துவங்கின.

இவற்றை மேற்கொண்ட, கிராம அளவில் இயங்கிய சிறு குழுக்களை ஒருங்கிணைத்து, 1980ல் மக்கள் போர்ப்படை என்ற அமைப்பு, கொண்டபள்ளி சீதராமய்யா என்பவர் உருவாக்கினார். நக்சல்பாரி இயக்க கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவர் ஒரு பள்ளி ஆசிரியராவார்.

பிற்காலத்தில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளான இவ்வமைப்பு, ஆந்திர மாநிலத்துக்கு வெளியே வர்க்க போராட்டத்தில் ஈடுபட்டிருந்த, பல்வேறு இடது சாரி சிந்தனையுடைய அமைப்புக்களுடன் கை கோர்த்தது. இன்று, இவ்வமைப்பு ஆந்திர மாநிலம் தவிர, ஒரிஸா, ஜார்கண்ட், பீகார், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா மாநிலங்களில் வலுவான அமைப்பாக வளர்ந்துள்ளதுடன் கர்நாடகம், ஆந்திர மாநில எல்லையோர தமிழ்நாட்டு மாவட்டங்களிலும் இவர்களின் தொடர்பு பரவியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

நேபாளத்திலுள்ள மாவோயிய ஆயுத போராட்டக் குழுவுடனும், வடகிழக்கில் இயங்கி வரும் ஆயுத குழுக்களுடனும், மற்ற மாநிலங்களில் உள்ள ஆயுதமேந்திய இடது சாரி இனக்குழுக்களுடனும் ஒருங்கிணைந்த தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. வடக்கே நேபாளத்திலிருந்து தெற்கே ஆந்திரா வரையிலும், மேற்கே மஹாராஷ்டிராவிலிருந்து, கிழக்கே வட கிழக்கு மாநிலங்கள் வரையிலும் தங்கள் போராட்ட களமாக, வலுப்பெற செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2003, அக்டோபர் 1ம் தேதியன்று திருப்பதியில், அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாகனத்தை தாக்கிய போது, இவர்களின் செயல்பாடு நாடளவிலான கவனத்தை பெற்றது. இந்த தாக்குதலை முன்வைத்து மக்களின் அனுதாபத்தை பெற்றுவிட நினைத்த சந்திரபாபு நாயுடு, நாடாளுமன்ற தேர்தலுடன், மாநில தேர்தலையும் நடத்தினார். ஆனால் அந்த தேர்தலில், தெலுகு தேசம் படுதோல்வியடைந்தன் மூலம் பெருவாரி ஆந்திர மக்கள், இவ்வியக்கத்திற்கு எதிராக இல்லை என்பதை வெளிப்படுத்தியதாக, பெரும்பாலோர் கருதுகின்றனர்.

கடந்த தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்த காங்கிரஸ், முதல்வர் ராஜசேகர ரெட்டி, மக்கள் விடுதலை போர்ப்படையினருடன், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டு பேச்சு வார்த்தைக்கு உடன்பட்டார்.

அதுவரை தலை மறைவு வாழ்கை மெற்கொண்டிருந்த இவ்வமைப்பின் தலைவர்கள், பேச்சு வார்த்தைக்காக காட்டை விட்டு வெளியே வந்தனர். அச்சமயத்தில் அவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்கு திரண்ட மக்களின் எண்ணிக்கை பிரமிப்பூட்டுவதாக இருந்தது. அதுவரையில் ஆந்திராவின் எந்தவொரு அரசியல் கட்சிக்கும், தலைவருக்கும் கூடியிராதபடி, மிகப்பெரிய அளவில் மக்கள் திரண்டனர். மக்களிடையேயான அவர்களின் செல்வாக்கு, மத்திய, மாநில அரசுகள், நிலவுடமையாளர்கள் ஆகியோரை கவலை கொள்ள செய்தது.

இத்தகைய மக்களாதரவு என்பது மிகச்சாதாரணமாக கிட்டக்கூடிய ஒன்றல்ல. இவர்களின் வளர்ச்சியும், இவர்களுக்கான மக்களின் ஒத்துழைப்பும் கிடைக்க காரணம் என்ன என்பதை அறிய முற்படுமுன் ஆந்திர மாநிலத்தின் குமுக பொருளாதார நிலையை புரிந்து கொள்வது முக்கியம்.

அந்திராவில், நிலவுடமை என்பது மேல் சாதிகளுக்கும், கீழ் நிலை சாதிகள் நிலமற்ற ஏழைகள் என்பதும் எல்லா மாநிலங்களிலும் உள்ளது போல்தான் என தோன்றினாலும், இன்னும் ஆழமானது. தமிழகத்தை போலல்லாது ஆந்திராவில், உச்சசாதியினரும், அவர்களுக்கு அடுத்த நிலை சாதியினரும், படி நிலைக்கொப்பிய அளவில் நிலவுடமையாளர்களாக உள்ளனர். கீழ்சாதியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர்கள் எக்காரணம் கொண்டும் - சில மாவட்டங்களில் - விளை நிலங்களை விலைக்கு கூட வாங்க முடியாது என்பது அங்கே எழுதப்படாத நடைமுறை வழக்கம். மீறும் தாழ்த்தப்பட்ட, கீழ்நிலை சாதியினரின் நிலங்களை பறித்துக்கொள்ளும் அல்லது அவர்களை எரித்துக்கொல்லும் உரிமையும், கடமையும் அப்பகுதி நில உடமையாளருக்கு (மேல் சாதியினருக்கு) உரியது.

தமிழகத்தில், தஞ்சை மாவட்டத்தில் நான்கு அல்லது ஐந்து ஏக்கர் நிலம் உள்ளவர்கள் மிராசுதார்கள் என்று அறியப்படுவார்கள். இவர்களை ஆந்திர மாநில மிராசுகளுடன் ஒப்பிட்டால், மலைக்கு முன் தஞ்சாவூர் மிராசு சிறு மடு கூட அல்ல. ஆந்திராவின் ஒரு சில மாவட்டங்களில் ஒரு தாலுகாவின் மொத்த விளை நிலங்களும் நான்கு ஐந்து குடும்பங்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்கும். அக்குடும்பங்களை தவிர ஏனையோர் அவர்களை அண்டி பிழைப்பவர்களே. இந்நிலையில், சாதிய அடிப்படையிலும் தலைமுறை தலைமுறையாக சுரண்டப்பட்ட மக்கள் தங்களுக்காக குரல் கொடுப்பவர்களாக, தங்கள் நலனை முன்னெடுத்து செல்லும் ஒரு இயக்கமாக மக்கள் விடுதலை போர்ப்படையினரை காண்கின்றனர்.

இவ்வமைப்பினர், காவல் நிலயங்கள், காவலர்கள், காவல்துறை உளவாளிகள் ஆகியோர்களை தாக்குவது, என தங்களின் சுய இருப்பின் பாதுகாப்புக்கான செயல்பாட்டுடன் மட்டும் நிற்பதில்லை. மக்களின் வருத்தும் அநியாய வட்டி கடன், நிலமின்மை ஆகிய பிரச்சினைகளுக்கும் அதிரடி தீர்வு காண்கின்றனர்.

முன்னறிவிப்பின்றி ஏதேனும் ஒரு கிராமத்தினுள் புகுந்து, அங்கிருக்கும் விளை நிலங்களை ஏழை மக்களுக்கு பகிர்ந்தளித்தல், அவர்களின் கடன்களை செல்லாது என அறிவித்தல் என இவர்கள் நடத்தும் அதிரடிகள் அப்பகுதி மக்களிடம் இவர்களுக்கான ஆதாரவை பெருக்கியுள்ளது.

இவர்களால் பாதுகாக்கப்படுவதும், பலன் பெருவதும் அடிநிலை மற்றும் கீழ் நிலை சாதி, நிலமற்ற ஏழை மக்கள் என்பதால், அவர்களின் மத்தியிலேயே இவர்களின் ஆதரவும் உள்ளது. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களே இவ்வியக்கங்களில் இணைகிறார்கள்.

இவர்களால் பாதிக்கப்படும், மேல்சாதி நிலவுடமையாளர்கள் இவ்வமைப்பினரை அழித்தொழிக்க அரசாங்கம், காவல் துறையினர் மூலம் மெற்கொள்ளும் முயற்சிகள் எவ்வித பலனையும் இதுவரை அளிக்கவில்லை.

மக்கள் விடுதலை போர்ப்படையின் எண்ணிக்கை 600லிருந்து, 1000க்குள்ளாக மட்டுமே இருக்கலாம். இவர்கள் சிறு எண்ணிக்கையிலேயே ஆயுதமேந்தி, காடுகளில் பதுங்கி யிருந்தாலும், நாட்டினுள் இவர்களுக்கு பெருத்த செல்வாக்கு உள்ளது.

இன்றைக்கு அதிகளவில், மாணவர்கள் இவ்வமைப்புகளில் இணைகிறார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் காட்டுக்குள் சென்று தலை மறைவு வாழ்கை வாழ்வதில்லை. மாறாக, ஊர்ப்பகுதியிலேயே மக்களுடனிருந்து, அவர்களின் விழிப்புணர்ச்சிக்கு உழைக்கின்றனர். எனவே, இவர்களுடன் இணைவதை, பெற்றோர்களும் தடுப்பதில்லை.

சென்ற ஆண்டு ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. முக்கிய காரணம், ஆந்திர அரசால், மக்கள் விடுதலை போர்ப்படையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாதது தான்.

மக்கள் விடுதலை போர்ப்படையினரின் முக்கிய கோரிக்கைகள்:


  • நில ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து, விளை நிலங்களை ஏழை விவசாயிகளுக்கு பிரித்து கொடுத்தல்.


  • நில உடமை சீர்திருத்தங்களை முன்னிருத்தி மக்களை திரட்டி போராடுவதற்கு அனுமதி. (ஆந்திர அராசாங்கம், இவ்வகை போராட்டங்களை / ஆர்ப்பாட்டங்களை நடத்த எந்த ஒரு மைப்பையும் இலகுவில் அனுமதிக்காது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.)


  • மாநில திட்டங்களுக்கு உலக வங்கியின் கட்டுப்பாடுகளை நீக்குவது.


  • ஆந்திராவின் ஒரு பகுதியினை தெலுங்கானா மாநிலமாக பிரிப்பது.


  • நக்சலைட் வேட்டை என்ற பெயரில் காவல் துறையால் கொல்லப்பட்டவர்கள் குறித்து நீதி விசாரணை.


இவற்றில் நில சீர்திருத்தம் தொடர்பிலானதை தொடுவதற்கு ஆந்திராவின் எந்த அரசியல்வாதிக்கும் தைரியம் இருக்காது, வராது என்பதே நடைமுறை உண்மை. நிலவுடமை மேல்சாதியினரை பகைத்துக்கொண்டு அரசியலில் நிலைப்பது மட்டுமல்ல, ஆந்திராவில் வாழ்வதே சாத்தியமில்லை.

உலக வங்கியை எதிர்ப்பது என்பதும், பிரதமர் மன்மோகன், அவரின் சீடரும் உலக வங்கியின் இந்திய இதயமும் ஆன சிதம்பரம், ஆகியோரை எதிர்ப்பதும் ஒன்றாகும். இதுவும் காங்கிரஸ் முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு முடியாமல் போய்விட்டதில் வியப்பில்லை.

தெலுங்கானா பற்றி காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன வென்பது அக்கட்சியின் தலைமைக்கே புரியாத புதிர். எனவே தற்போதைக்கு அதிலும் மவுனம்.

நீதி நிலை நாட்டப்படுவதில் ஆளும் வர்க்க ஆர்வம் பாரறிந்த ஒன்று. ஆந்திர அரசால் இதுவும் இயலாமல் போனது.

இறுதியாக பேச்சுவார்த்தை என்ற பெயரில் காட்டிலிருந்தவர்களை, நாட்டுக்குள் வரவழைத்து, மிகப்பெரிய ஊடக கவனிப்பை இலவசமாக பெற்றுத் தந்தது தவிர வேறு எவ்வித ஆதாயத்தையும் ஆந்திர அரசால் பெற முடியவில்லை.

சமாதான முயற்சியின் தோல்விக்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. நக்சலைட் வேட்டை என்ற பெயரில் நடக்கும், ஆளும் அரசியல் / அதிகார வர்க்கம் மற்றும் காவல் துறை, இவற்றின் கூட்டுக்கொள்ளை. ஆண்டு தோறும் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் தேச பாதுகாப்பு என்ற பெயரில், தணிக்கைக்கு உள்ளாகாமல் செலவு செய்யும் வாய்ப்பை அவர்கள் இழக்க தயாரில்லை. செலவிடும் பணத்திற்கு அவ்வப்போது, நிலவுடமை மேல்சாதியினரை எதிர்க்கும் அப்பாவி ஏழைகளை கொண்று, ஊடகங்களுக்கும், மத்திய அரசுக்கும் கணக்கு காட்டி வருகிறது ஆந்திர ஆளும் வர்க்கம். சமாதானம் ஏற்படின் இவ்வாய்ப்பு போய்விடும். பொன் முட்டையிடும் வாத்தை அறுக்க இவர்களுக்கு மனமில்லை.

மக்கள் விடுதலை போர்ப்படை என்பது ஆயுதம் தாங்கிய, தேச பிரிவினை தீவிரவாதிகள் என்று நினைத்தால், அந்நினைப்புடனே, அவர்களை பலப்பிரயோகத்தினால் அழித்துவிட முனைந்தால், மாநில அரசுக்கு எவ்வித பலனும் கிட்டப்போவதில்லை.

நிலமை மோசமடைந்தால், இந்திய இராணுவத்தை, அமைதிப்படை என்ற நாமகரணமிட்டு ஆந்திராவினுள்ளும் கட்டவிழ்த்துவிட மத்திய அரசும் தயாராய் இருக்கலாம்.

ஆனால் இவ்வமைப்பினரை, ஒரு சில நூறு உறுப்பினர்களை கொண்ட இந்த அமைப்பை ஒழிப்பதன் மூலம் ஏதேனும் நிரந்தர தீர்வு எட்டப்படுமா? என்றால் முடியாது என்றே தோன்றுகிறது.

இவர்களின் போராட்டத்திற்கான வேர் என்னவோ அது களையப்பட வேண்டும்.

நிலமற்ற ஏழை விவசாய கூலிகள், கீழ்சாதியில் பிறந்த ஒரே காரணத்தால், நிலமற்றவனாகவும், சொற்பக்காசை கடனாக பெற்று, தன் வாழ்நாள் உழைப்பை பறிகொடுப்பவனாகவும் வைத்திருக்கும் குமுகாய அமைப்பு மாற்றப்பட வேண்டும்.

இல்லாவிடில், இத்தகைய ஆயுத போராடக்குழுக்கள் மேலும் மேலும் வலுப்பெறுவதை தடுக்க முடியாது.

தலைமுறைகளை ஏழைகளாக வைத்திருக்கும் சதி எப்போதும் வென்றிருக்கலாம், இதுவரை.

ஒரு தலை முறையாவது, கோழையாயில்லாமல், நிமிர்ந்து நின்று போராடுவதும் விதியாகும்.

8 Comments:

At Fri May 13, 03:17:00 AM 2005, Blogger -/பெயரிலி. said...

மிக அருமையான பதிவு. சில ஆண்டுகளுக்கு முன்னாலே, இணையத்திலே ஒரு நண்பர் (தற்போது, தமிழ்ப்பதிவும் வைத்திருக்கின்றார்), இதுபோல தர்மபுரி நக்ஸலைட்டுகள் பற்றி எழுதும்போது, அப்படியான நக்ஸலைட்டுகளோடு இணைகின்ற இளைஞர்களின் எண்ணிக்கை, காவற்றுறை அதிகாரி கைப்பந்தாட வசதி செய்துகொடுத்ததுடன் குறைந்துவிட்டது என்று எழுதினார். (மாலைநேரங்களிலேதான் நக்ஸலைட்டு கூட்டங்கள் நடைபெறுமென்பதால்). இதை வாசித்து எங்கே தலையை இடித்துக்கொள்வதென்றுதான் தோன்றியது. ஆக, வெறும் கைப்பந்துதானா பிரச்சனை? இப்படியான "புரிதல்கள்" நக்ஸலைட்டுகள் மற்றும் அவர்களைப் போன்ற போராளிகளினைப் பற்றி 'படித்த, அஹிம்சையைப் போற்றும்' வர்க்கத்திலே இருக்கும்வரை இப்படியான நக்ஸலைட்டுகள் தொடரவே செய்வார்கள். நேபாளத்தினைப் பாருங்கள். இதேநிலை; இப்போது, அங்கும் இந்திய இராணுவ உதவி செல்லவிருக்கின்றது. பாக்கிஸ்தானுடனும் சீனாவுடனும் நேபாளம் இன்னும் நெருங்காமலிருக்க இத்தகைய அரசியலுபாயங்கள் அவசியமென்றாலுங்கூட, அங்கே இவ்வுதவி காரணமாக, நசுக்கப்படுவது மக்கள் விடுதலைப்படையும் அதைச் சார்ந்த அடித்தட்டு "கொத்தடிமை"மக்களுமேயென்றால், அஃது இந்திய நலனுக்குத்தான் நெடுங்காலப்போக்கிலே கெடுதலாகும்.

பி.கு.: பின்னாளிலே, சிறை சென்று மீண்ட கொண்டபள்ளி சீதாராமையா "திருந்தி"விட்டதாகவும் (reeducation by the government ;-)) இனி வன்முறையிலே ஈடுபடுவதில்லை என்றும் ஒரு செவ்வி கொடுத்தார்.

 
At Fri May 13, 04:16:00 AM 2005, Blogger ~Nandalala~ said...

நன்றி -/பெயரிலி,

இத்தகைய போராட்டங்கள், அவற்றில் ஈடுபடும் இளைஞர்கள், தலைமுறை தலைமுறையாக ஒடுக்கப்பட்ட ஒரு வித்தின் வெடிக்கிளம்பல் என்பதை பலரும் புரிந்து கொள்ளாதது விந்தைதான்.

இவர்களை அழிப்பதும், 'திருத்துவதும்' தீர்வாகுமா?
அல்லது,
ஒடுக்குதலை ஒழிப்பதும், அடக்கியாளப்பட்ட மக்களின் விடுதலையும் தீர்வாகுமா என்பதை சிந்திக்காமலே, ஆளும் வர்க்கம் இப்பிரச்சினையை அனுகி வந்திருக்கிறது, இன்று வரையில்.

தர்மபுரியில், அரசு தேவாரம் பாடி பல வருடங்கள் ஆகிவிட்ட போதும், இன்றும் நாளையும் கனண்று கொண்டிருக்க காரணமென்ன?

//பாக்கிஸ்தானுடனும் சீனாவுடனும் நேபாளம் இன்னும் நெருங்காமலிருக்க இத்தகைய அரசியலுபாயங்கள் அவசியமென்றாலுங்கூட//
இதையும் தாண்டிய சில திரைமறைவு காரணங்கள் இந்தியாவுக்கு இருக்கிறது. இந்திய வெளியுறவு கொள்கை என்ற பெயரில் இந்திய அரசியல் வர்க்கத்தின் கோமாளிக் கூத்தும், இந்திய உளவு அமைப்பின் எல்லை தாண்டிய பயங்கரவாதமும் இதன் பின்னணி.
நேரம் கிடைத்தால் இதுபற்றி விரிவாக எழுதவேண்டும்.

கொண்டபள்ளி சீதராமய்யா மீது சில குற்றச்சாட்டுக்கள் பின்னாளில் இயக்கத்தினராலேயே வைக்கப்பட்டது. மீண்டும் இயக்கத்துடன் இணைய முடியாத அவர், அரசுக்கு எதிர் நிலைப்பாட்டையும் எடுக்க முடியாமல் இணங்கிப்போனதை புரிந்துகொள்ளலாம்.

 
At Fri May 13, 05:24:00 AM 2005, Blogger Muthu said...

நந்தலாலா,
நல்ல கட்டுரை. நோயின் அடிப்படைக்கு மருந்துகொடுக்க முனையாமல் அறிகுறிகளைக் குணமாக்க முயலும் பைத்தியக்காரத்தனம் நிறுத்தப்பட வேண்டும்.

 
At Fri May 13, 05:38:00 AM 2005, Anonymous Anonymous said...

எந்தவொரு போராட்டத்துக்கும் மக்கள்
ஆதரவு இருக்கும் என்றால் அந்தப் போராட்டத்தினை ஒடுக்குவது கடினம்.
அடுத்தது அப்படி ஆதரவளிக்கும் மக்கள்
மேல் எடுக்கும் நடவடிக்கை கூட அவர்களை இன்னும் இன்னும் போராட்டத்தின் பால் சாயவைக்கும், போராட்டத்தின் நியாயத்தினை அவர்கள்
சரியாக புரிந்துவைத்திருந்தால்.
இதை
சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.
நல்லதொரு பதிவு .நன்றி.........

 
At Fri May 13, 06:29:00 AM 2005, Blogger ~Nandalala~ said...

முத்து, கரிகாலன், அவதாரம்,
வாசித்து, கருத்து தெரிவித்தமைக்கு நன்றி.

 
At Fri May 13, 09:27:00 AM 2005, Anonymous Anonymous said...

நந்தலாலா
சிறப்பானதொரு பதிவுக்கு என் நன்றிகள்.
தாழ்த்தப்பட்ட மக்களின் மக்களின் குரலை வலுவுடன் ஒலிக்கும் 'மக்கள் விடுதலை போர்ப்படையை', 'பயங்கரவாதிகள்' என சுட்டுபவர்கள், தங்களையே 'பயங்கரவாதியாக' வெளிப்படுத்துகிறார்கள் என்றுதான் பொருள்.

 
At Fri May 13, 05:54:00 PM 2005, Anonymous Anonymous said...

அருமை.
வர்க்கபேதத்தை எதிர்த்து போராடும் இவர்களின் தியாகம் அதிகம் பேசப்படாத ஒன்று.
இப்பதிவுக்கு நன்றி.
த.அரசு.

 
At Fri May 13, 11:51:00 PM 2005, Anonymous Anonymous said...

அரசு பயங்கர வாதத்தை, தோலுரித்துள்ளிர்கள். நல்ல பதிவு நன்றி.

//இந்திய உளவு அமைப்பின் எல்லை தாண்டிய பயங்கரவாதமும் இதன் பின்னணி.
நேரம் கிடைத்தால் இதுபற்றி விரிவாக எழுதவேண்டும்.//
நிச்சயம் எழுதுங்கள்.
ராமலிங்கம்,
கடலாடி.

 

Post a Comment

<< Home