புரட்சிப் பெண் பத்திமத் நிஸ்ரின்!
மூன்றாண்டுகள். கடும் சிறையையும், கொடும் அரசு பயங்கரவாதத்தையும் சந்தித்து, போராடி, மக்கள் விரோத மாலத்தீவு அரசியல் அமைப்பை உலகுக்கு அடையாளம் காட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறார், மாலத்தீவு நாட்டை சார்ந்த பத்திமத் நிஸ்ரின் என்ற பெண்.
இவர் எதேனும் அரசியல் கட்சியை அல்லது இயக்கத்தை சார்ந்தவரோ, வேறு ஏதேனும் பாரிய பின்புலம் உள்ளவரோ கிடையாது. மிகச்சாதாரண குடும்ப பின்னணி கொண்ட மாலத்தீவு குடிமகள் என்பதை தவிர இவரைப்பற்றி சொல்ல பெரிதாக எதுவும் கிடையாது, மூண்றாண்டுகளுக்கு முன் வரை.
மாலத்தீவு அரசாங்கத்தை விமர்சிக்கும் 'சந்தனு' என்ற மின்மடல் செய்தி குழுவுக்கு, செய்தியாளாராக செயல்பட்டதாக நிஸ்ரின் மீது குற்றம் சாட்டியது மாலத்தீவு அரசாங்கம்.
அதனடிப்படையில், வன்முறையை தூண்ட முயற்சித்ததாகவும், மாலத்தீவு அரசாங்கத்தை அவதூறு செய்ததாகவும் குற்றஞ்சாட்டி, மூன்றாண்டுகளுக்கு முன் கைது செய்ப்பட்டார் பத்திமத் நிஸ்ரின். இதே குற்றச்சாடுக்களுக்காக, மொகமட் ஜாக்கி, இப்ரகிம் லுத்தஃபி, அகமட் திதி என்ற மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது மாலத்தீவு அரசாங்கம்.
மாலத்தீவு
அரபிக்கடலில், இந்தியாவிற்கு 600 கி.மீ தெற்கே உள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கியது மாலத்தீவு. புத்தமதத்தை பின்பற்றி வந்த மாலத்தீவில், கி.பி 12ம் நூற்றாண்டில் இஸ்லாம் பரவியது. அதை தொடர்ந்து இஸ்லாமிய ஆட்சி முறையில் சுல்தான் மற்றும் சுல்தானா க்களால் ஆளப்பட்டு வந்தது.
16ம் நூற்றாண்டின் நடுவில் சில காலம் போர்த்துகீசியர்களால் ஆளப்பட்டது. பின்னர் 17ம் நூற்றாண்டில் சிறிது காலம் டச்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. இறுதியாக, 1756ல், ஆங்கிலேயர் அதிகாரத்தின் கீழ் வந்து, 1965ல் சுதந்திரம் பெற்றது.
பின்னர் அதுவரை இருந்துவந்த சுல்தானை ஆட்சியாளராக கொண்ட அரசமைப்பு முறை மாற்றப்பட்டு, குடியரசாக மாறியது, முஸ்லீம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட மாலத்தீவு.
நிரந்தர(?) அதிபர் மவ்முன் அப்துல் கய்யூம்
1968ல் இக்குடியரசின் முதல் அதிபராக இப்ரகிம் நசீர் பதவியேற்றார். அவரை தொடர்ந்து 1978ல் மவ்முன் அப்துல் கய்யூம் அதிபரானார். ஆறு முறை தேர்தலில் வென்று இன்று வரை அதிபராக தொடர்கிறார்.
மாலத்தீவின் அதிபர் தேர்தல் என்பது, பலர் போட்டியிடும் தேர்தல் முறையல்ல. மஜ்லீஸ் எனப்படும் மாலத்தீவின் நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவரை, ஆம் / இல்லை என்ற வாக்கின் மூலம் மக்கள் அங்கீகரிக்கவேண்டும். இவ்வகையில் மக்கள் அங்கீகரித்து விட்டால் அவரே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதிபராக பதவி வகிப்பார்.
மக்களுக்கு, தாங்கள் விரும்பிய தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பற்ற, மக்களை பிரதிநிதிப்படுத்தாத இத்தகைய தேர்தல் முறை மூலம், மாலத்தீவு அரசாங்கம், 1978லிருந்து அதிபர் மவ்முன் அப்துல் கய்யூம்-ன் முழுக் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
ஆயுத புரட்சியும், மாலத்தீவுக்கு இந்தியாவின் உதவியும்
இலங்கையில் தொழில் புரிந்து வந்த மாலத்தீவினை சேர்ந்த அப்துல்லா லுத்தீஃபி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (PLOTE) அமைப்பினர் துணையுடன் 1988ல் மாலத்தீவை கைப்பற்ற முயன்று, ஆயுத புரட்சியை மேற்கொண்டார். அவ்வமயத்தில் மாலத்தீவின் அதிபராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவி ஏற்கவிருந்த கய்யூம் இந்தியாவின் உதவியை நாடினார்.
அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த மறைந்த இராஜீவ் காந்தி, உடனடியாக 1600 படை வீரர்களை அனுப்பி, புரட்சியாளர்களிடமிருந்து நாட்டை மீட்க கய்யூமிற்கு உதவினார்.
அன்றிலிருந்து இந்திய அராசாங்கத்துடன் மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார் கய்யூம். இந்திய அரசும் அவருக்கு ஆதரவான நிலையை கொண்டிருப்பதால், அவரின் அரசியல் அடக்குமுறையை நிறுத்த வேண்டி எந்த அழுத்தத்தையும் அவருக்கு கொடுப்பதில்லை.
அதிகார அடக்குமுறை ஆட்சி
தனக்கு எதிராக எழும் எந்த சலனத்தையும் அடக்கி வெற்றி கொள்ள கய்யூம் அனைத்து வழிகளையும் கையாண்டு வந்துள்ளார். அவற்றில் கொடூரமானது, அரசியல் எதிர்ப்பை சமாளிக்க அவர் உபயோகிக்கும் இராணுவ பலப்பிரயோகம் தான்.
என்.எஸ்.எஸ் என்ற இராணுவ அமைப்பை தனது தனிப்பட்ட கூலிப்படையைப் போலவே பயன்படுத்தி வருகிறார் அதிபர் கய்யூம். தனக்கெதிராக எழும் அரசியல் எதிர்ப்புகளை, நாட்டுக்கெதிரான வன்முறையாக சித்தரித்து, அவர்களின் மேல் என்.எஸ்.எஸ்-ன் வன்முறையை ஏவி விடுகிறார்.
கய்யூமின் அரசியல் எதிர்ப்பாளர்கள் பலர், என்.எஸ்.எஸ்-ஆல் கைது செய்யப்பட்டும், அவர்களின் கொடும் சித்ரவதைக்கு உள்ளாகியும், ஆயுள் முழுக்க சிறை தண்டனை அனுபவித்தும் வருகின்றனர். எதிர்ப்பாளர்கள் பலர் காணாமலே போய் விடுவதும் அந்நாட்டில் சாதாரணமே.
மாலத்தீவில், சரியான சட்ட அறிவு இல்லாதவர்கள் கூட கய்யூம் அரசினால் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலமே அங்கே நீதி பரிபாலனம் செய்யப்படுவது இன்னொரு கேலிக்கூத்து.
என்.எஸ்.எஸ் படையினர், அதிபர் கய்யூமையும், அல்லாவையும் ஒன்றிணைந்த தலைவர் என கொண்டுள்ளனர். இது இஸ்லாமியர் மத்தியில் பலத்த ஆட்சேபத்தை எழுப்ப வல்லது. ஆனாலும், கய்யூமின் சர்வாதிகாரத்தினால், அக்குரல்கள் அமுக்கப்படுவதால், ஆட்சேபம் வெளியே தெரிவதில்லை.
இன்றுவரையில் மாலத்தீவில் அவசரநிலை சட்டங்களே நடைமுறையில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீதி(?) விசாரணையும் தீர்ப்பும்.
நிஸ்ரின் உள்ளிட்ட நால்வர் மீது, சில மாதங்கள் விசாரணைக்கு நடைபெற்றது. இறுதியில், 2002 மே மாதம், பத்திமத் நிஸ்ரினுக்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ஏனையோருக்கு ஆயுள் (முழுமைக்குமான) சிறையும் தண்டணையாக விதிக்கப்பட்டது.
விசாரணை முறையாக நடைபெறவில்லை என்ற குரல் எழத்தொடங்கி, சர்வதேச அரங்கில் கவனம் பெறத் தொடங்கியது. மனித உரிமை அமைப்புகள் மாலத்தீவு அரசாங்கத்தின் சர்வாதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுத்தன. ஆயினும் விசாரணை முறையாக நடைபெற்றதாகவும், விசாரணையில் இவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதாகவும் கூறி வந்தது மாலத்தீவு அரசு.
மனித உரிமை அமைப்புகள், மாலத்தீவு அரசாங்கத்தின் அடக்கு முறையை எதிர்த்து, தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததை அடுத்து, அய்ரோப்பிய ஒன்றியம், மாலத்தீவு அரசு அலுவலர்கள் தங்கள் நாடுகளுக்குள் நுழைவதை தடை செய்ய முடிவெடுத்தது. இவ்வாறாக சர்வதேச அழுத்தம் அதிகரிக்க தொடங்கவும், அதிபரின் பொது மன்னிப்பு என்ற பெயரில் பத்திமத் நிஸ்ரினை இம்மாதம் விடுதலை செய்துள்ளது கய்யூம் அரசு. மற்ற மூவருக்கான தண்டனையில் எந்த மாற்றமும் இதுவரை செய்யப்படவில்லை.
விடுதலையாகியுள்ள நிஸ்ரின் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை விளக்கும்போது, மாலத்தீவில் 'ஜனநாயகம்' என்ற பெயரில் நடைபெற்று வரும் கொடூரக்கூத்தின் கோர முகம் வெளிப்படுகிறது.
உண்மையில், நிஸ்ரின் செய்தது, மாலத்தீவில் தொடர்ந்து நிலவி வரும், கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறையை விமர்சித்து, சந்தனுவுக்கு ஒரு மின்மடல் அனுப்பியது மட்டுமே. மற்றபடி அவர் சந்தனுவின் செய்தியாளராகவோ அல்லது வேறு எந்த சதியிலும் ஈடுபட்டிருக்கவில்லை.
பொய்யான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நிஸ்ரின் அடைக்கப்பட்டது, போதைமருந்து குற்றவாளிகளுக்கான சிறையில். வாதாட வழக்கறிஞரை நியமித்துக்கொள்ளும் அடிப்படை உரிமை கூட இவருக்கு மறுக்கப்பட்டது. கைகளை விலங்குகளால் பிணைத்து, கண்களை கட்டி, தாக்கி கொடுமைப் படுத்தப்பட்டுள்ளார். கைதிகளின் ஆடையை அவிழ்த்து பாலியல் துன்பத்துக்கு உள்ளாக்குவது கூட, மாலத்தீவில் வெகு சாதாரனம். நிஸ்ரினை, அவரது குடும்பத்தினரால் கூட சுலபமாக சந்திக்க அனுமதிக்காமல் தனிமைப்படுத்தியுள்ளனர்.
இவருக்கெதிராக எந்த வலுவான சாட்சியமும் இல்லாத நிலையிலேயே, குற்றச்சாட்டு நிரூபனமாதாக தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இது நாள் வரையில், மாலத்தீவு அரசாங்கத்தின் மீது, மனித உரிமைக்கு எதிரான ஒடுக்குமுறை குற்றச்சாட்டு எழும்போதெல்லாம், இஸ்லாமிய தீவிரவாதம் தங்கள் நாட்டில் தலையெடுப்பதை தவிர்க்கவே இத்தகைய கடும் போக்கினை மேற்கொள்வதாக கய்யூம் கூறி வந்ததை, மேற்கத்திய நாடுகள் அப்படியே ஏற்றுக்கொண்டு வந்துள்ளன.
இப்போது பத்திமத் நிஸ்ரின் அடக்குமுறையை சந்தித்து, அதை துணிவுடன் எதிர்கொண்டு போராடி, இறுதியில் வெற்றி கண்டு, அதிபர் கய்யூமின் சர்வாதிகார போக்கை உலக அரங்கில் தோலுரித்துள்ளார்.
இனி மாலத்தீவின் ஆட்சி அதிகாரம் மக்களை பிரதிநிதிப்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்படுவதற்கான ஒரு நல்ல துவக்கமாக இது அமையக்கூடும். அதிபர் கய்யூமின் சர்வாதிகாரத்துக்கும் ஒரு முடிவு எட்டப்படக்கூடும்.
அவ்வகையில், பத்திமத் நிஸ்ரின் ஒரு புரட்சி பெண்தான்.
ஜெனிபர் லதீஃப்: நடிப்பு கலைஞர், உரிமை போராளி என பன்முகம் கொண்ட ஜெனிபர் லதீஃப், மாலத்தீவில் கய்யூமின் அடக்குமுறையை எதிர்த்து போராடி வரும் பெண்களில் முதன் மையானவர் மற்றும் குறிப்பிடத்தக்கவர்.
9 Comments:
Test
நேச குமார்,
வாசித்து கருத்திட்டமைக்கு நன்றி.
நீங்கள் கேட்டது குறித்து விளக்குமுன், மாலத்தீவின் பண்டைய கலாச்சாரம், இஸ்லாமிய மதம் பின்னர் பரவியது, இஸ்லாத்திலும் பண்டைய கலாச்சாரத்தின் / பழக்கவழக்கத்தின் பாதிப்பு முதலியவற்றை குறிப்பிட வேண்டும்.
அதை தனிப்பதிவாகத் தான் செய்ய வேண்டும். நேரம் கிடைக்கும் போது நிச்சயம் முயலுகிறேன்.
காஷ்மீரில் ஒரு சூஃபி புணிததலத்தை தீக்கு இறையாக்கிவிட்டனர் அடையளம் தெரியாத சிலர்.
Hi, your articles are interesting and informative. Most of the subjects written by you were not touched by mainline media. Good job & keep it up.
Bharati.
நல்ல விபரங்கள் கொண்ட கட்டுரை. நிஸ்ரின் போன்றவர்கள் வெளியுலகுக்கு தெரிய வேண்டும்.
மேலும் கயூம் பற்றிய தெளிவான விவரணை.
இக்கட்டுரை இவ்வகையில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.
மிக்க நன்றிகள் நந்தலாலா.
நல்ல கட்டுரை... சுட சுட தில்லி குண்டு வெடிப்பு பற்றியும் எதிர் பார்க்கிறோம்..
சாரி.. அதில் முஸ்லிம் சம்பந்தப்பட்டதாகத் தெரியவில்லை.. அதனால் எழுதமாட்டீர்கல்..
பாலாஜி-பாரி,
வாசித்து கருத்திட்டமைக்கு நன்றிகள்
பல தகவல்கள் கொண்ட நல்ல பதிவு
நன்றி சந்திரவதனா.
நந்தலாலா.
Post a Comment
<< Home