தொலைந்த பதிவின் மீட்பு
19 வயது பெண்ணுக்கு நேர்ந்துள்ள அவலம் இது. அப்பெண்ணை மொட்டையடித்து, நிர்வாணமாக தெருக்களின் வழியே அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் அதிர்ச்சி தருவது, அப்பெண்ணின் குடும்பத்தினரே இதை செய்தது தான்.
பஞ்சாப் மாநிலம், பெரொசாபூர் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் இது நடந்துள்ளது.
இப்பெண்ணை ஒருவருக்கு மணமுடித்து கொடுக்க ஏற்பாடு செய்த நிலையில், இவரது தாயார் மரணமடைந்து விட்டார்.
பின்னர் இவரது தந்தை, அதிக பணம் தருவதற்கு சம்மதித்த வேறொருவரை மணக்க சொல்லி, இப்பெண்ணை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் மறுத்துவிடவே, ஆத்திரமடைந்த தந்தையும், அவர்களின் குடும்பத்தினரும், மேலே சொன்ன அராஜகத்தை அரங்கேற்றியுள்ளனர்.
அப்பெண் காவல் துறையில் புகார் செய்த பின்பு, இரண்டு பெண்கள் உட்பட அக்குடும்பத்தினர் பத்து பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது.
சமீபமாக அறியவந்த, பெண்களுக்கெதிரான உச்சபட்ச கொடுமைகளில் ஒன்று இது.
பெரும்பாலும் பெண்களுக்கு எதிரான கொடுமை, கணவன் / அவனது வீட்டாரால் இழைக்கப்படும். அல்லது வெளியாரால். இதைப் போல், பெற்றோர், அவர் தம் குடும்பத்தினரே ஈடுபடுவதென்பது, விகிதாச்சார அளவில் குறைவே.
எப்படியாயினும், அவை நான்கு சுவற்றுக்குள்ளாகவோ, மற்றவர்களுக்கு தெரியாவண்ணமோ நடத்தப்படும்.
ஆனால் இப்பெண் தன் தந்தை உட்பட, சொந்த குடும்பத்தாலேயே சகிக்க முடியாதவொரு துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மேலும், எந்த ஒளிவு மறைவுமின்றி, ஊர் நடுவிலேயே இந்த கொடூரம் நடந்துள்ளது. இதற்கு ஊர் மக்கள் எவ்வித எதிர்ப்புமின்றி இருந்திருப்பது கவனிக்கத்தக்கது.
அந்த குடும்பத்தினர், பெண்ணின் மீதான, தங்களின் அதிகாரத்தை நிலை நாட்டவே இப்படி ஒரு பெரும் கொடுமையை நிகழ்த்தியுள்ளனர் என்பது தெளிவு.
அக்குடும்பத்தினர், "பெண் என்பவள், தந்தை, மற்றும் குடும்பத்தினருக்கு அடங்கி நடக்க வேண்டியவள், அவளுக்கு என்று தனிப்பட்ட தேர்வு என்பது இருக்கக்கூடாது, யாரை திருமணம் செய்வது என்பதை தாங்கள் தான் நிர்ணயம் செய்ய வேண்டும், குடும்பத்தார் முடிவு செய்து விட்டால், சுய விருப்பு வெறுப்புகளுக்கு இடமின்றி ஏற்பதை தவிர, மாற்றவோ, மறுக்கவோ பெண்ணுக்கு எவ்வித உரிமையும் இல்லை" , என்பதான பாரத கலாச்சார காய்ச்சல் கொண்டவர்கள் என்பதும் புரிபடுகிறது.
அடிபணிதலை பெண்ணுக்கு உணர்த்த விழையும் ஆணாதிக்க குமுகத்தின் வக்கிர வெளிப்பாடு இது.
இவர்களின் அதீத கொடுஞ்செயல் அதிர்ச்சியும் வேதனையும் தந்ததே தவிர ஆச்சரியம் தரவில்லை.
இதில் அதிக வேதனையை கொடுத்தது, அவ்வூர் மக்களின் செயல்பாடு தான்.
என்ன மாதிரியான வக்கிர மனம் அவர்களது?
கண்முன்னே ஒரு பெண்ணை இத்தகைய கொடுமைக்கு உள்ளாக்குவதை, அனுமதிக்கும் / தடுக்க விழையாத மனம் எப்படி சாத்தியமானது அவ்வூர் மக்களுக்கு?
அப்பெண்ணுக்கு நிகழ்த்தப்பட்டது, ஊரில் உள்ள மற்ற (தங்கள் வீட்டு)பெண்களுக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும் என்ற சுயநலமாயிருக்குமா?
ஒருவேளை, பல நூற்றாண்டுகளாக போற்றி வந்த பெண்ணடிமை கலாச்சாரம் மீண்டும் காக்கப்படுகிறது என்ற குதூலகம் கூட அவர்களுக்கு இருந்திருக்கலாம்.
எனக்கு புரியவில்லை.
நடப்பது கொடுமைதான், ஆனால் நிகழ்த்துவது அவளின் குடும்பத்தினர், எனவே தலையிட வழியில்லை என்ற எண்ணமா?
ஒரு பெண்ணுக்கு, அவளின் கணவன், தந்தை, சகோதரன், மற்ற குடும்ப உறவினர்களுக்கு உள்ள அதீத உரிமையில், அவர்களாலேயே அவள் எத்தகைய கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாலும், மற்றவர் தலையிடக்கூடாது எனும் நீதியா?
இதுவாக இருந்தால், எனக்கு அதிர்ச்சி கூடுகிறது.
காரணம், இத்தகைய நீதி சமீபத்தில் எனக்கும் போதிக்கப்பட்டது.
இந்த வாரம் தலாக் தலாக் தலாக் என்ற தலைப்பில் ஒரு பதிவை இட்டிருந்தேன். அதற்கு சிலர், பின்னூட்டங்களில் இப்படிப்பட்ட கருத்தை வெளிப்படுத்தி இருந்தனர். [பின்னூட்டங்களைவிட அதிக எண்ணிக்கையில் மின்னஞ்சல்கள் வந்துள்ளது.]
அவர்களில் பெரும்பாலோர் சொன்னது, "உரிமையை அவர்களாக கேட்கட்டும், மற்றவர்கள் தலையிட வேண்டாம்" என்பது. இவர்களில் சிலர் தாங்கள் இஸ்லாமியர்கள் அல்ல என்றும் தெரிவித்திருந்தனர். அது கூடுதல் வியப்பே.
இவர்கள் இடையேயான மன ஒற்றுமை, என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது
இத்தகைய வக்கிர மனோபாவம், கயமை, மதங்களை, மொழி எல்லைகளை கடந்து விரவியுள்ளது அச்சம் தருகிறது. [பாதிக்கப்பட்ட பெண் சீக்கிய அல்லது இராஜ்புத் இனத்தவராக இருக்கக்கூடும்]
இது மனித மனத்தின் வக்கிரங்களின் எல்லைகளை கடந்த, மனிதம் என்ற குணங்களில் அடங்கா ஒன்றாகவே எனக்கு தெரிகிறது.
இங்கே கொடூரங்களை நிகழ்த்துபவர்கள், ஏதோ ஒரு மடத்தனமான உணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு செயல்படுகின்றனர். இதை ஒத்துழைக்க மறுத்த அடிமைக்கான ஒரு எதிர் வினையாகவும் அவர்கள் நியாயப்படுத்திக் கொள்ளக்கூடும்.
ஆனால் வெளியிலிருந்து நோக்குபவர்கள், அந்நிகழ்வின் கொடூரத்தை உணர முடியாதது, அல்லது அதை நியாயமானதாக காண்பது எப்படி சாத்தியமாகிறது?
அவ்வூர் மக்களில் ஒருவர் கூடவா அப்பெண்ணுக்கு உதவ நினைத்திருக்க மாட்டார்? ஆனால் அவரை "இதில் தலையிட உனக்கென்ன உரிமை?" என அக்குடும்பத்தினரோ, மற்றவர்களோ தடுத்திருக்கலாம்? இப்படியான நீதியை உபதேசிப்பவர்கள் அங்கேயும் இருந்திருக்கலாம் தான்.
ஒரு தலைவர் கொல்லப்பட்டால், கொண்றவரின் மதத்திற்கெதிராய் நாடு முழுவதும் வன்செயல்கள் நடக்கிறது.
ஒரிடத்தில் இடிக்கப்படுவதற்க்கு, வேறொரு நகரில் குண்டு வெடிக்கப்படுகிறது.
ஒரு ஊரில் குண்டு வெடித்தால், நாடெங்கிலும் அதற்கு பின்னுள்ளதாக கருதப்பட்ட மதத்தினர்களை கருவறுக்கும் செயல் நடத்தப்படுகிறது.
ஒரு இரயில் பெட்டி எரிந்தால், மாநிலம் முழுக்க ஒரு மதத்தினர் மீது கொடும் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது.
இப்படி ஒருபுறம் அதி தீவிரமாக, மோசமாக எதிர்வினையாற்றும் நாட்டில், மறுபுறம் கண்முன்னே நடக்கும் ஒரு கொடூரத்தை, தடுக்காமல் செயலற்று இருப்பதன் மூலம், அதற்கு ஒரு அங்கீகாரத்தையும் தர இவர்களால் முடிகிறது.
கல்லால் அடித்து கொல்வதையும், தலை மழித்து ஆடை அவிழ்ப்பதையும், மற்றய வன்செயலகளையும், இவர்களால், விதி மீறலுக்கான ஒரு தண்டனையாக நிறைவேற்ற / ஏற்றுக்கொள்ள முடிகிறது.
எங்கோ ஒரு இடத்தில், கொடுமைக்கு உள்ளாகுபவரை - சக மனிதராக அல்ல - சக மதத்தினராக பார்த்து கண்ணீர் விடவும், ஆவேசப்படவும் முடியும் இவர்களால், தங்கள் குடும்பத்தில், அருகில் உள்ளவர்களின் துயரை உணர முடியாதது விந்தைதான்.
என்ன மாதிரியான வக்கிர மனம் இவர்களது?
இது என்ன மாதிரியான கலாச்சாரம்?
இதை போதிக்கப்பட்ட உணர்ச்சிகளுக்கு கட்டுப்படும் ஒரு குமுகாயத்தின் செயல் என எடுத்துக்கொள்ள முடியுமா?
கலாச்சார பரிணாம வளர்ச்சி தடைபட்டு, பாதியில் நசிந்து போன ஒரு நாகரீகத்தின் வெளிப்பாடாகவே எனக்கு படுகிறது.
பழமையை, தான் புனிதமானதாக போற்றும் ஒன்றை, காலம் வென்று நிலைக்கச் செய்ய வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாக எண்ணி, வெறி கொண்டு இவர்கள் நிகழ்த்துவதின் கொடூரத்தை புரிந்து கொள்வார்களா?
அப்படியான புரிதல் வருவதற்கு தடையாய் இருக்கும், அறிவை மழுக்கும், மனிதத்தை மறுக்கும், பழமையை மறு பரிசீலித்து, தவறென புரிவதை கைவிட இவர்கள் துணிவார்களா?
தங்களில் மனிதம் மறுபடி துளிர்க்க இடம் தருவார்களா?
தொலைந்த பதிவின் மறு பதிவேற்றம் இது:
முந்தய தலைப்பு:::மொட்டையடித்து, நிர்வாணப்படுத்தி, ஊரை வலம் வரச்செய்து::தலாக்:: மன நிலையின் ஒற்றுமை
3 Comments:
This comment has been removed by a blog administrator.
அன்புள்ள நந்தலாலா,
வேலை மற்றும் குடும்ப அழுந்தங்கள் காரணமாய் வலைப்பதிவு விவாதங்களில் இருந்து விலகியிருக்கிறேன். ஆனாலும் உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். உங்களின் இந்த குறிப்பிட்ட மற்றும் இதை தொடர்ந்த பதிவுகளுக்கும் என் ஆதரவை தர மட்டுமே இதை எழுதுகிறேன். இதை முக்கியமாய் நினைத்து செய்ய காரணம் பொதுவாய் முற்போக்கு என்று சொல்லி கொள்பவர்கள் பலரும் இஸ்லாம் குறித்த வெளிப்படையான விமர்சனத்தை செய்ய தயங்குவதும், அந்த வேலையை இந்துத்வ சார்புடையவர்கள் மட்டுமே செய்யும் அவலம் காரணமாகவும், உங்களுக்கு என் ஆதரவை தெரிவிப்பதை முக்கியமானதாய் நினைக்கிறேன்.
நேசக்குமாருடன் எனக்கு பெரிய அளவில் உடன்பாடுகள் கிடையாது என்றாலும் அவர் இஸ்லாம் குறித்து ஒரு விவாதத்தை தொடக்கியபோது என் ஆதரவை தெரிவித்தேன். அவரை விட உங்களுடன் பெருமளவில் உடன்படுகிறேன். நான் சொல்லும் முறையும் வார்த்தைகளும் வேறுபடுமே தவிர கிட்டதட்ட நீங்கள் உங்களுடன் முற்றிலுமே உடன்படுகிறேன். இஸ்லாம் மீதான விமர்சனபூர்வமான பார்வையின்மை இந்துத்வத்திற்கு உதவுமே தவிர எந்தவிதத்திலும் எதிர்க்க உதவாது. அதற்கான தார்மீகத்தையும் சந்தேகத்திற்குள்ளாக்கும். அந்த வகையில் ஒரு இந்துத்வவாதியில்லாத உங்கள் பார்வைக்கான ஆதரவை தர மட்டுமே இந்த பின்னூட்டம். சில மாதங்களில் என் கருத்துகளை விரிவாய் எழுத உத்தேசமுள்ளது. நன்றி.
(உங்கள் அடுத்த பதிவு காணாமல் போய்விட்டது. நீண்ட தலைப்பு வைக்காதீர்கள்.)
ரோசாவசந்த்,
வந்து வாசித்து கருத்திட்டமைக்கு நன்றி.
நீங்கள் சொல்லியிருப்பதுடன் உடன் படுகிறேன்.
இரண்டு விளிம்புக்கும் இடைப்பட்டவர்கள் தங்கள் கருத்துக்களை பதிப்பது முக்கியம் என்றே நானும் நினைக்கிறேன்.
பெரும்பாலோனோர் ஏதோ தயக்கத்துடன் விலகியிருக்கும் சூழலில் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
விரைவில் உங்கள் கருத்தை பதியுங்கள்.
Post a Comment
<< Home