Get Nandalaalaa atom feed here!

Tuesday, August 23, 2005

தமிழ்மணம் - 365 : அடுத்த கட்டம்?

தமிழ்மணம் தொடங்கப்பட்டு, தமிழ் வலைபதிவுகளை திரட்டும் பணியினை கடந்த ஓர் ஆண்டாக திறம்பட செய்து வந்துள்ளது பாராட்டுக்குறியது.

ஏறக்குறைய இதே ஒரு வருடங்களாகத்தான் நானும் இணையத்தில் தமிழ் படிக்கிறேன் என்பதும், தமிழ்மணத்தை அதன் ஆரம்ப காலந்தொட்டே உபயோகித்து வருவது குறித்தும் எனக்கு மகிழ்ச்சியே. என்னைப்போலவே பலருக்கும் தமிழ்மணம் சிறந்த வலைகாட்டியாக இருந்து வந்துள்ளது என்பதில் ஐயமில்லை.

இத்தகைய பயனுள்ள ஒரு திரட்டியை உருவாக்கி தொய்வின்றி இயக்கி வருவதற்காக காசி, அவருடன் இணைந்து செயல்பட்டு வரும் செல்வராஜ், மதி கந்தசாமி மற்றும் பரிமேழகர் ஆகியொருக்கும் வலைப்பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சார்பாக நன்றி.

தமிழ் வலைப்பதிவுகளின் வளர்ச்சி என்பது இன்னும் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை எனினும், வரும் காலத்தில் அது வளர்வதற்கு 'தமிழ்மணம்' திரட்டியின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆனால் தமிழ்மணம் கடந்த ஒரு வருடமாக கொண்டிருந்த (க நான் நினைக்கும் அதே) நிலைப்பாட்டுடனே இனியும் தொடருமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

சில நாட்களாக சமயம் சார்ந்த விதயங்களில் ஒருவர் மற்றவரின் கடவுளரைத் தாக்கி எழுதுவது சற்று தரம் தாழ்ந்து வருவதைக் காண நேரிடுகிறது. இத்தகைய பதிவுகள் தொடருமானால் சம்பந்தப்பட்ட பதிவுகள் தமிழ்மணம் சேவையிலிருந்து விலக்கி வைக்கப்படும் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். அத்தகைய நிலைக்கு தள்ளவேண்டாம் என்றும் சக வலைப்பதிவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

என காசி தனது பதிவின் இறுதி வரிகளாக எழுதியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

இது [இந்திய] சுதந்திர தின கொண்டாட்ட சம்பிரதாயங்களில் ஒன்றாக, பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது, அரசின் வளர்ச்சிகளை பட்டியலிட்டு, நாட்டின் சுதந்திரத்திற்கு உழைத்தவர்களை நினைவு கூர்ந்துவிட்டு, இறுதியாக நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு தீங்குவிளைக்க நினைப்பவர்க்கு 'இறுதி' எச்சரிக்கை விட்டு தன் அதிகார நிலை நாட்டலுடன் முடித்துக்கொள்ளுவதை நினைவூட்டுகிறது.

இதுவும் அதே தொணியில் உள்ளது வருந்தத்தக்கது.

காசி குறிப்பிட்டுள்ள கடவுள்களை தாக்குவது சில மாதங்களாகவே, வலைபதிவுகளில் நடந்து வருகிறது. இதுவரை (நானறிந்தவரையில்) எதுவும் செய்யாமல் ஓராண்டு நிறைவை ஒட்டிய தனது செய்தியில் அதை கண்டிப்பது என்பது ஏற்க இயலாததாய் உள்ளது.

இப்படி வரையரைகளை - எதை / எப்படி எழுதலாம் / கூடாது என்பதெல்லாம் எளிதில் தெளியக்கூடிய விதயமல்ல.

கருத்துகளில் தரம் என்பதை எது / யார் தீர்மானிப்பது. தனக்கு ஒவ்வாத கருத்துகள் அனைத்தையுமே தரம் தாழ்ந்ததாக ஒருவர் தீர்மானிக்கலாம். அதை திணிக்க முயற்சிப்பது கருத்து வன்முறையாக உருமாற்றம் பெற்றுவிடாதா?

இங்கே கடவுள்களை காக்க முயறசிக்கையில், கடவுள்கள் என்றால் எதெல்லாம் கடவுள் என்பதையும் காசி விளக்க வேண்டியியிருக்கும்.

ஆபிரகாமிய, புராண கடவுள்களுக்கு மட்டும் தான் இந்த பாதுகாப்பா? தொண்டர்களால் கடவுளாக்கப்பட்ட அரசியல் தலைவர்களுக்கும் இது பொருந்துமா? வாழும் கடவுள்களாக சித்தரிக்கப்படும் சகத்குருக்களை தாக்கி எழுதுபவர்கள் அனுமதிக்கப்படுவார்களா? ரசினி கடவுள், கமலகாச கடவுள், இளையராசா கடவுள்களின் பக்தர்களின் மனமும் குளிர்விக்கப்படுமா?

இறந்தவர்களை கடவுள்களாக பாவிக்கும் இந்திய பாரம்பரிய தரிசனத்தில் இப்போது உயிர் வாழும் வருங்கால கடவுள்கள் தாக்கப்படுவதும் இனி தடுக்கப்படுமா?

கடவுள்களை அடுத்து இசங்கள் காக்கப்படுமா?

வலதுச்சாரி, இடதுச்சாரி, நடுச்சாரி, தாத்தாச்சாரிகளுக்கு என்ன பாதுகாப்பை காசி வழங்கவிருக்கிறார்?

தமிழ்மணத்தின் உரிமையாளர் என்ற வகையில், இதுபோன்ற எச்சரிக்கைகளை தனது வலைப்பதிவில் வைப்பதும், தமிழ்மணத்தில் திரட்டப்பட எது சரி எது தவறு என்பதை தீர்மானிப்பதும் அவராகவே இருக்க முடியும். அதில் எனக்கு தெளிவுள்ளது.

//சக வலைப்பதிவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்// தன்னையும் சக வலைப்பதிவராகவே இன்னமும் காசி உணர்வது உண்மையாயின் இது பொன்ற முடிவுகளை எட்ட, ஒரு விவாதத்தை ஏற்படுத்தி முடிவு காண முயற்சிப்பதே சிறந்ததாக இருக்க முடியும்.

மாறாக இப்படி எச்சரிக்கைகள் விடுப்பது மணத்தையல்ல கனத்தை வெளிப்படுத்துகிறது.

Get Nandalaalaa atom feed here!

Saturday, August 13, 2005

சாதி ஒழிப்பில் உச்ச நீதிமன்றம்!

அரசு உதவி பெறாத தனியார் சுயநிதி கல்லூரிகளில் இனி மாநில அரசுகளின் இட ஒதுக்கீடு முறை ரத்து - உச்ச நீதி மன்றம் தீர்ப்பு.

நானாவதி அறிக்கை அமளிக்கும், கதிர்காமர் கொலைக்கு புலிகளை காரணமாக்க துடிக்கும் நிகழ்வுகளினூடே, இந்திய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட பெஞ்ச் வழங்கிய இத்தீர்ப்பு குறைவான கவனத்தையே பெற்றுள்ளது.

இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது - அரசின் உதவிபெறாதவை என்பதால் இவற்றில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவோ, அரசு கோட்டா என இடங்களை ஒதுக்கிக்கொள்ளவோ அரசுக்கு உரிமையில்லை - என்பதாக.

இத்தீர்ப்பின் மூலம் வரும் கல்வியாண்டில் தமிழ்நாட்டு அரசுக்கு, பொறியியல் கல்லூரிகளின் மொத்த இடங்களான 70,000-ல், 7000 இடங்களில் மட்டுமே இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியும். 7000த்தில் 69% இட ஒதுக்கீட்டின் கீழ் 4,830 இடங்கள் மட்டுமே கிடைக்கும். [69% இடஒதுக்கீடு உச்சவரம்பும் இதே சாதிமன்றத்தால் முன்னர் தீர்ப்பாக வழங்கப்பட்டது.] இனி தமிழக மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டின் கீழ் கிடைக்க இருப்பது வெறும் 6.9% இடங்களே!

உச்ச நீதிமன்ற சாதியரசர்களின் மனப்பாங்கு பல கேள்விகளை எழுப்புகின்றது.

ஏற்கனவே 69% என்ற வரையரையை திணித்தது இந்தியாவின் மேன்மையை காத்தது. பின்னர் சமீபத்தில், ஜெயின் மதத்தினர் தங்களை சிறுபான்மையினராக அறிவிக்க கோரிய வழக்கின் தீர்ப்பில், "சிறுபான்மையினராக புதிய பிரிவினரை அறிவிப்பதில் 'தேசிய ஒருமைப்பாடு' பாதிக்கப்படும் எனவும், மாநில சிறுபான்மை கமிஷன்கள் புதிய பிரிவினர்களை சிறுபான்மையினராக அறிவிப்பதை தவிர்க்கவும்" கூறியுள்ளது. மேலும் இதே தீர்ப்பில், சாதிய பாகுபாடுகள் கொண்ட இந்தியாவில் யாருமே பெரும்பான்மையினர் இல்லை என்றும் கூறி இருந்தது. [ஜெயின் சமூகத்தினரும் - இராமகிருஷ்னா மிஷனரிகளும் சிறுபான்மை அந்தஸ்து கோரியது வேறு காரணங்களுக்காக]

சாதீய பாகுபாட்டை தீண்டத்தகாததாக இவர்கள் பார்ப்பதெல்லாம் - ஒடுக்கப்பட்டவர்கள் உரிமை கோரும்போது மட்டுமே!

சாதிய கொடுமை இல்லை - இல்லவே இல்லை என வாதிடும் சமத்துவபுர ஜென்டில்மேன்களின்[நன்றி: சுவ? / த.மணி?] மேலான 'பார்வைக்கு'

இப்படிப்பட்ட நிகழ்வுகளும், நீதி(?)மன்ற நிலைப்பாடுகளுமே இனிவரும் காலங்களில் 'இத்தகைய' நிகழ்வுகளை அதிகரிக்க செய்யும்!

ஜெய் ஹிந்த்!