Get Nandalaalaa atom feed here!

Saturday, May 28, 2005

எது உண்மை? சதியா? தற்கொலையா?

கடந்த சில தினங்களாக ஊடகங்களில், உத்தரபிதேசத்தை சேர்ந்த ராம்குமாரி என்பவரின் மரணம் குறித்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அனைத்து ஊடகங்களும், ஒரே விதமாக, ராம்குமாரி தானே வலிய சென்று தன் கணவனின் பிணம் எரியும் சிதையில் விழுந்து "தற்கொலை" செய்து கொண்டார் என்றே எழுதிவருகின்றன. உத்தரபிதேச அரசும் அவ்வாறே கூறி வருகிறது.

அவரின் குடும்பத்தாரும், ராம்குமாரியின் கணவர் ஜோகேஷ்வர் திவாரியின் சிதைக்கு தீ வைத்துவிட்டு வந்தபின்பு, அவரை காணாமல் தேடியபோது, அவர் ஏறக்குறைய முழுதாக எரிந்த நிலையில் கணவரின் சிதையில் கிடப்பதை கண்டுள்ளனர்.

இது குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் செய்தி தெரிவிக்க சென்ற ராம்குமாரியின் மகனை, அங்கிருந்த காவலர்கள், புகாரை பதிவு செய்யாமல் விரட்டி விட்டதாகவும், இது பற்றி வெளியே தெரிவிக்க கூடது என மிரட்டியதாகவும், பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது.

இம்மாதம் 7ம் தேதி இச்சம்பவம் நடைபெற்றுள்ள போதும், அதுபற்றிய செய்தி எதுவும் உடனடியாக வெளியே தெரியவில்லை.

இறந்தவர்களின் 13ம் நாள் நினைவை கொண்டாடும் விதமாக, வெளியூர்களில் இருந்து பக்தர்கள் தேங்காய், பூ, ஊதுவத்திகளுடன் சதி நிகழ்ந்ந்த இடத்தில் சதி மதா வழிபாடு செய்யத்துவங்கினர்.

உத்தரபிரதேச ஆளும் கட்சியான சமஜ்வாடி ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகரும், மாநில முன்னாள் அமைச்சரும் ஆன ஜமுனா பிரசாத் போஸ் என்பவர் சதி மாதா ஆலயத்திற்கு சென்று, சிதையை சுற்றி வந்து வழிபட்டு, பின்னர், பிணம் எரித்த சாம்பலை நெற்றியில் இட்டுக்கொண்டு சென்றுள்ளார்.

இப்படியாக பரபரப்பான சம்பவங்கள் நடக்க துவங்க, இச்சம்பவம் ஊடகங்களின் கவனத்தை பெற்று, இந்த வாரம் தான் வெளியுலகிற்கு செய்தியாக வெளியாகியது.

அதை தொடர்ந்து செயலில் இறங்கியுள்ள உத்தரபிரதேச அரசு, சதி நடந்த இடத்தில் பூஜைகள் நடத்துவதை தடை செய்து, அங்கே அதிக எண்ணிக்கையிலான காவலர்களை நிறுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட நீதிபதியின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார், உத்தரபிரதேச முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ்.

மாநில காவல்துறையின் உயர் அதிகாரி வி எஸ் பாண்டே, "இது சட்டப்படி சதி என்ற வரையரைக்குள் வராவிட்டாலும் கூட, மாவட்ட காவல் கண்கானிப்பாளரை நேரடி விசாரணையை மேற்கொள்ளும்படி கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். சதிக்கு தூண்டுதல் மற்றும் சதியை போற்றுதல் இரண்டும் சட்டப்படி தவறு. ஆனால், ராம்குமாரி மற்றவர்களின் தூண்டுதலின் பேரில் உடன்கட்டை ஏறவில்லை, தானாகவே சென்று சிதையில் விழுந்துள்ளார். எனவே இது சட்டப்படி சதி இல்லை. இப்போது இதை சதியாக போற்றி நடத்தப்படும் பூஜைகள் தடுத்து நிறுத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி பற்றி மாவட்ட நீதிபதி தீரஜ் சாகு கூறுகையில், "இது நிச்சயம் சதி தான், ஆனால் ராம்குமாரி யாருடைய பலவந்தம் காரணமாகவோ அல்லது மற்றவர்கள் உடன்பாட்டுடனோ இதில் ஈடுபடவில்லை. இந்நிகழ்விற்கு நேரடி சாட்சியமும் இல்லை எனவே யார் மீதும் குற்றஞ்சாட்ட முடியாது" என்கிறார்.

மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் ஜாக்கி அஹ்மட், "இந்நிகழ்ச்சி சாதாரண தற்கொலை தான். ஊடகங்கள் பரபரப்புக்காக, அளவுக்கு அதிகமாக இதை பெரிது படுத்துகின்றன" என்கிறார்.

ஊடகங்களில் வரும் செய்திகளை வைத்து, ராம்குமாரி, தன் கணவர் இறந்துவிட்ட சோகத்தில், தான்னை மாய்த்துக்கொள்ளும் முடிவுடன், மற்றவர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி, எறிந்து கொண்டிருந்த தன் கணவனின் சிதையில் விழுந்து, தன்னுயிரை போக்கிக்கொண்டுள்ளார். ஆக இது ஒரு தற்கொலை மட்டுமே. சதி என்கிற, அரசின் சட்டத்தால் தடை செய்யப்பட்ட ஒரு மதச்சடங்கல்ல என்று முடிவுக்கு வருமுன், சற்று பொறுங்கள்.
(தொடரும்)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
Get Nandalaalaa atom feed here!

Tuesday, May 24, 2005

புரட்சிப் பெண் பத்திமத் நிஸ்ரின்!

மூன்றாண்டுகள். கடும் சிறையையும், கொடும் அரசு பயங்கரவாதத்தையும் சந்தித்து, போராடி, மக்கள் விரோத மாலத்தீவு அரசியல் அமைப்பை உலகுக்கு அடையாளம் காட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறார், மாலத்தீவு நாட்டை சார்ந்த பத்திமத் நிஸ்ரின் என்ற பெண்.

இவர் எதேனும் அரசியல் கட்சியை அல்லது இயக்கத்தை சார்ந்தவரோ, வேறு ஏதேனும் பாரிய பின்புலம் உள்ளவரோ கிடையாது. மிகச்சாதாரண குடும்ப பின்னணி கொண்ட மாலத்தீவு குடிமகள் என்பதை தவிர இவரைப்பற்றி சொல்ல பெரிதாக எதுவும் கிடையாது, மூண்றாண்டுகளுக்கு முன் வரை.

மாலத்தீவு அரசாங்கத்தை விமர்சிக்கும் 'சந்தனு' என்ற மின்மடல் செய்தி குழுவுக்கு, செய்தியாளாராக செயல்பட்டதாக நிஸ்ரின் மீது குற்றம் சாட்டியது மாலத்தீவு அரசாங்கம்.

அதனடிப்படையில், வன்முறையை தூண்ட முயற்சித்ததாகவும், மாலத்தீவு அரசாங்கத்தை அவதூறு செய்ததாகவும் குற்றஞ்சாட்டி, மூன்றாண்டுகளுக்கு முன் கைது செய்ப்பட்டார் பத்திமத் நிஸ்ரின். இதே குற்றச்சாடுக்களுக்காக, மொகமட் ஜாக்கி, இப்ரகிம் லுத்தஃபி, அகமட் திதி என்ற மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது மாலத்தீவு அரசாங்கம்.

மாலத்தீவு

அரபிக்கடலில், இந்தியாவிற்கு 600 கி.மீ தெற்கே உள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கியது மாலத்தீவு. புத்தமதத்தை பின்பற்றி வந்த மாலத்தீவில், கி.பி 12ம் நூற்றாண்டில் இஸ்லாம் பரவியது. அதை தொடர்ந்து இஸ்லாமிய ஆட்சி முறையில் சுல்தான் மற்றும் சுல்தானா க்களால் ஆளப்பட்டு வந்தது.

16ம் நூற்றாண்டின் நடுவில் சில காலம் போர்த்துகீசியர்களால் ஆளப்பட்டது. பின்னர் 17ம் நூற்றாண்டில் சிறிது காலம் டச்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. இறுதியாக, 1756ல், ஆங்கிலேயர் அதிகாரத்தின் கீழ் வந்து, 1965ல் சுதந்திரம் பெற்றது.

பின்னர் அதுவரை இருந்துவந்த சுல்தானை ஆட்சியாளராக கொண்ட அரசமைப்பு முறை மாற்றப்பட்டு, குடியரசாக மாறியது, முஸ்லீம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட மாலத்தீவு.

நிரந்தர(?) அதிபர் மவ்முன் அப்துல் கய்யூம்

Maumoon Abdul Gayoom1968ல் இக்குடியரசின் முதல் அதிபராக இப்ரகிம் நசீர் பதவியேற்றார். அவரை தொடர்ந்து 1978ல் மவ்முன் அப்துல் கய்யூம் அதிபரானார். ஆறு முறை தேர்தலில் வென்று இன்று வரை அதிபராக தொடர்கிறார்.

மாலத்தீவின் அதிபர் தேர்தல் என்பது, பலர் போட்டியிடும் தேர்தல் முறையல்ல. மஜ்லீஸ் எனப்படும் மாலத்தீவின் நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவரை, ஆம் / இல்லை என்ற வாக்கின் மூலம் மக்கள் அங்கீகரிக்கவேண்டும். இவ்வகையில் மக்கள் அங்கீகரித்து விட்டால் அவரே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதிபராக பதவி வகிப்பார்.

மக்களுக்கு, தாங்கள் விரும்பிய தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பற்ற, மக்களை பிரதிநிதிப்படுத்தாத இத்தகைய தேர்தல் முறை மூலம், மாலத்தீவு அரசாங்கம், 1978லிருந்து அதிபர் மவ்முன் அப்துல் கய்யூம்-ன் முழுக் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

ஆயுத புரட்சியும், மாலத்தீவுக்கு இந்தியாவின் உதவியும்

இலங்கையில் தொழில் புரிந்து வந்த மாலத்தீவினை சேர்ந்த அப்துல்லா லுத்தீஃபி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (PLOTE) அமைப்பினர் துணையுடன் 1988ல் மாலத்தீவை கைப்பற்ற முயன்று, ஆயுத புரட்சியை மேற்கொண்டார். அவ்வமயத்தில் மாலத்தீவின் அதிபராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவி ஏற்கவிருந்த கய்யூம் இந்தியாவின் உதவியை நாடினார்.

அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த மறைந்த இராஜீவ் காந்தி, உடனடியாக 1600 படை வீரர்களை அனுப்பி, புரட்சியாளர்களிடமிருந்து நாட்டை மீட்க கய்யூமிற்கு உதவினார்.

அன்றிலிருந்து இந்திய அராசாங்கத்துடன் மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார் கய்யூம். இந்திய அரசும் அவருக்கு ஆதரவான நிலையை கொண்டிருப்பதால், அவரின் அரசியல் அடக்குமுறையை நிறுத்த வேண்டி எந்த அழுத்தத்தையும் அவருக்கு கொடுப்பதில்லை.

அதிகார அடக்குமுறை ஆட்சி

தனக்கு எதிராக எழும் எந்த சலனத்தையும் அடக்கி வெற்றி கொள்ள கய்யூம் அனைத்து வழிகளையும் கையாண்டு வந்துள்ளார். அவற்றில் கொடூரமானது, அரசியல் எதிர்ப்பை சமாளிக்க அவர் உபயோகிக்கும் இராணுவ பலப்பிரயோகம் தான்.

என்.எஸ்.எஸ் என்ற இராணுவ அமைப்பை தனது தனிப்பட்ட கூலிப்படையைப் போலவே பயன்படுத்தி வருகிறார் அதிபர் கய்யூம். தனக்கெதிராக எழும் அரசியல் எதிர்ப்புகளை, நாட்டுக்கெதிரான வன்முறையாக சித்தரித்து, அவர்களின் மேல் என்.எஸ்.எஸ்-ன் வன்முறையை ஏவி விடுகிறார்.

கய்யூமின் அரசியல் எதிர்ப்பாளர்கள் பலர், என்.எஸ்.எஸ்-ஆல் கைது செய்யப்பட்டும், அவர்களின் கொடும் சித்ரவதைக்கு உள்ளாகியும், ஆயுள் முழுக்க சிறை தண்டனை அனுபவித்தும் வருகின்றனர். எதிர்ப்பாளர்கள் பலர் காணாமலே போய் விடுவதும் அந்நாட்டில் சாதாரணமே.

மாலத்தீவில், சரியான சட்ட அறிவு இல்லாதவர்கள் கூட கய்யூம் அரசினால் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலமே அங்கே நீதி பரிபாலனம் செய்யப்படுவது இன்னொரு கேலிக்கூத்து.

என்.எஸ்.எஸ் படையினர், அதிபர் கய்யூமையும், அல்லாவையும் ஒன்றிணைந்த தலைவர் என கொண்டுள்ளனர். இது இஸ்லாமியர் மத்தியில் பலத்த ஆட்சேபத்தை எழுப்ப வல்லது. ஆனாலும், கய்யூமின் சர்வாதிகாரத்தினால், அக்குரல்கள் அமுக்கப்படுவதால், ஆட்சேபம் வெளியே தெரிவதில்லை.

இன்றுவரையில் மாலத்தீவில் அவசரநிலை சட்டங்களே நடைமுறையில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீதி(?) விசாரணையும் தீர்ப்பும்.

நிஸ்ரின் உள்ளிட்ட நால்வர் மீது, சில மாதங்கள் விசாரணைக்கு நடைபெற்றது. இறுதியில், 2002 மே மாதம், பத்திமத் நிஸ்ரினுக்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ஏனையோருக்கு ஆயுள் (முழுமைக்குமான) சிறையும் தண்டணையாக விதிக்கப்பட்டது.

விசாரணை முறையாக நடைபெறவில்லை என்ற குரல் எழத்தொடங்கி, சர்வதேச அரங்கில் கவனம் பெறத் தொடங்கியது. மனித உரிமை அமைப்புகள் மாலத்தீவு அரசாங்கத்தின் சர்வாதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுத்தன. ஆயினும் விசாரணை முறையாக நடைபெற்றதாகவும், விசாரணையில் இவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதாகவும் கூறி வந்தது மாலத்தீவு அரசு.

மனித உரிமை அமைப்புகள், மாலத்தீவு அரசாங்கத்தின் அடக்கு முறையை எதிர்த்து, தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததை அடுத்து, அய்ரோப்பிய ஒன்றியம், மாலத்தீவு அரசு அலுவலர்கள் தங்கள் நாடுகளுக்குள் நுழைவதை தடை செய்ய முடிவெடுத்தது. இவ்வாறாக சர்வதேச அழுத்தம் அதிகரிக்க தொடங்கவும், அதிபரின் பொது மன்னிப்பு என்ற பெயரில் பத்திமத் நிஸ்ரினை இம்மாதம் விடுதலை செய்துள்ளது கய்யூம் அரசு. மற்ற மூவருக்கான தண்டனையில் எந்த மாற்றமும் இதுவரை செய்யப்படவில்லை.

விடுதலையாகியுள்ள நிஸ்ரின் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை விளக்கும்போது, மாலத்தீவில் 'ஜனநாயகம்' என்ற பெயரில் நடைபெற்று வரும் கொடூரக்கூத்தின் கோர முகம் வெளிப்படுகிறது.

உண்மையில், நிஸ்ரின் செய்தது, மாலத்தீவில் தொடர்ந்து நிலவி வரும், கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறையை விமர்சித்து, சந்தனுவுக்கு ஒரு மின்மடல் அனுப்பியது மட்டுமே. மற்றபடி அவர் சந்தனுவின் செய்தியாளராகவோ அல்லது வேறு எந்த சதியிலும் ஈடுபட்டிருக்கவில்லை.

பொய்யான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நிஸ்ரின் அடைக்கப்பட்டது, போதைமருந்து குற்றவாளிகளுக்கான சிறையில். வாதாட வழக்கறிஞரை நியமித்துக்கொள்ளும் அடிப்படை உரிமை கூட இவருக்கு மறுக்கப்பட்டது. கைகளை விலங்குகளால் பிணைத்து, கண்களை கட்டி, தாக்கி கொடுமைப் படுத்தப்பட்டுள்ளார். கைதிகளின் ஆடையை அவிழ்த்து பாலியல் துன்பத்துக்கு உள்ளாக்குவது கூட, மாலத்தீவில் வெகு சாதாரனம். நிஸ்ரினை, அவரது குடும்பத்தினரால் கூட சுலபமாக சந்திக்க அனுமதிக்காமல் தனிமைப்படுத்தியுள்ளனர்.

இவருக்கெதிராக எந்த வலுவான சாட்சியமும் இல்லாத நிலையிலேயே, குற்றச்சாட்டு நிரூபனமாதாக தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இது நாள் வரையில், மாலத்தீவு அரசாங்கத்தின் மீது, மனித உரிமைக்கு எதிரான ஒடுக்குமுறை குற்றச்சாட்டு எழும்போதெல்லாம், இஸ்லாமிய தீவிரவாதம் தங்கள் நாட்டில் தலையெடுப்பதை தவிர்க்கவே இத்தகைய கடும் போக்கினை மேற்கொள்வதாக கய்யூம் கூறி வந்ததை, மேற்கத்திய நாடுகள் அப்படியே ஏற்றுக்கொண்டு வந்துள்ளன.

இப்போது பத்திமத் நிஸ்ரின் அடக்குமுறையை சந்தித்து, அதை துணிவுடன் எதிர்கொண்டு போராடி, இறுதியில் வெற்றி கண்டு, அதிபர் கய்யூமின் சர்வாதிகார போக்கை உலக அரங்கில் தோலுரித்துள்ளார்.

இனி மாலத்தீவின் ஆட்சி அதிகாரம் மக்களை பிரதிநிதிப்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்படுவதற்கான ஒரு நல்ல துவக்கமாக இது அமையக்கூடும். அதிபர் கய்யூமின் சர்வாதிகாரத்துக்கும் ஒரு முடிவு எட்டப்படக்கூடும்.

அவ்வகையில், பத்திமத் நிஸ்ரின் ஒரு புரட்சி பெண்தான்.




ஜெனிபர் லதீஃப்: நடிப்பு கலைஞர், உரிமை போராளி என பன்முகம் கொண்ட ஜெனிபர் லதீஃப், மாலத்தீவில் கய்யூமின் அடக்குமுறையை எதிர்த்து போராடி வரும் பெண்களில் முதன் மையானவர் மற்றும் குறிப்பிடத்தக்கவர்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
Get Nandalaalaa atom feed here!

Tuesday, May 17, 2005

தினமணி: வாலறுந்த நரியின் ஊளை.

வர்ணாசிரமம் என்பது வெறும் புனைவில்லை. ஒரு "பரிணாம மானுடவியலார்" நூறு ஆண்டுகளுக்கு முன்பே "வியப்பூட்டும்" இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

மனித இனம் நான்கு வர்ணங்களாக பிரிந்திருக்கின்றன.
இதற்கு வேத சாஸ்திரமோ, மதமோ காரணமில்லை.

இப்படி சொல்கிறார் ஆஸ்திரிய நாட்டு பரிணாம மானுடவியலார் ஹஸ்கி.

"மனித இனத்தின் பரிணாமப் போக்கின் காரணமாகவும், மரபுக் காரணிகளாலும் அது ஏற்பட்டது" என அறுதியிட்டு கூறி "அந்த பாகுபாட்டை நிலைப்படுத்துவதில் ஜீன்களும் முக்கியமான பங்கு பணியாற்றியுள்ளன" எனவும் உறுதிப்படுத்துகிறார் திரு. கே.என்.ராமச்சந்திரன் என்பவர், தினமணியில் இது பற்றி அவர் எழுதிய ஒரு கட்டுரையில்.

"அந்த நிலை கிட்டத்தட்ட 600 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீடித்தது"

600 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த பிரிவினை இருந்ததற்கு ஆதரம் உள்ளது போல் போகிறது இந்த கட்டுரை.
"மக்கள் பிற நாடுகளுக்குக் குடிபெயர்வது அதிகமான பிறகே ஜீன் கலப்பும் வர்ணக் கலப்பும் ஏற்பட்டு அந்தப் பிரிவினை கண்ணுக்குப் புலப்படாமல் போய்விட்டது."

பரிணாம வளர்ச்சியின் வரலாற்றில் மிகப்பெரிய விந்தை இது. அதை யாருமே இதுவரை கண்ணுறாதது அதைவிட மேலான ஒரு விந்தை.

மரபணுவின், வேறு ஏதேனும் ஒரு பண்பு, இதைப்போல வெறும் 600 வருடங்களில் காணாமல் போனதாக ஏதாவது ஒரு நிரூபணம் இருக்கிறதா?
முக்காடில்லா முழுப் பொய்யை, இப்படி ஒரு திரிப்பை எழுத இவரைத் தவிர வேறு யாரால் முடியும்?

"ஆனாலும் சில சமூகங்களின் ஒட்டுமொத்தமான நடத்தைகளையும் குணாதிசயங்களையும் ஆழ்ந்து பரிசீலிக்கிறபோது அந்த வர்ணாசிரமப் பிரிவுகளின் பிறவிப் பண்புகளின் கூறுகளை அடையாளம் காண முடிகிறது என்று ஹஸ்கி கூறுகிறார்."


எந்தெந்த சமூகம்?
என்னவிதமான நடத்தைகள் பரீசிலிக்கப்பட்டன?
ஆழ்ந்து பரிசீலிக்கிறபோது - எப்படி?
எந்த தகவலும் இல்லை!

"ஆனாலும் டார்வினின் பரிணாமக் கொள்கைகள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முன்னால் லாமார்க் என்ற பிரஞ்சு விஞ்ஞானியும் லைசங்கோ என்ற ரஷிய விஞ்ஞானியும் வெளியிட்ட தவறான மரபியல் கருத்துகள் ஓரளவுக்கு ஹஸ்கியின் கருத்துகளை ஆதரிப்பவையாக இருந்தன. மெண்டல் தாவரங்களில் மரபு மாற்றங்களை ஏற்படுத்தி உயர் ரகத் தாவரங்களை உருவாக்கியதைப் போல மனிதர்களிலும் அதே போன்ற உத்திகளைப் பயன்படுத்தி உயர்தரமான மனிதர்களை உருவாக்க முடியுமென்று லைசங்கோ வாதித்தார்."


புல்லரிக்கவில்லை உங்களுக்கு?
லாமார்க் மற்றும் லைசங்கோவின் தவறான மரபியல் கருத்துக்களை, அதுவும் ஓரளவே ஒத்துப்பொனதை வைத்து ஹஸ்கியால் புனையப்பட்ட ஒரு கற்பனைக்கு, இவர்கள் புது விளக்கம் ஒன்றை இப்போது தருவதேன்?

"ஜெர்மனியில் நாஜி கட்சியினர் மற்ற மனித இனங்களை விட ஜெர்மானியர்கள் உயர்தரமானவர்கள் என்று பிரசாரம் செய்து இனத்துவேஷ நச்சைப் பரப்பியதற்கும் ஹஸ்கியின் கொள்கையும் ஓரளவுக்குக் காரணமாய் அமைந்தது."


600 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்து போன ஒன்று, எப்படி சென்ற நூற்றாண்டில், மறுபடி திடுமென தலைக்காட்டியது? இப்படி கேட்டால் அது பசப்பு பகுத்தறிவாதமாக இவர்களுக்கு தோன்றும்.

இனத்துவேஷ நச்சை பரப்ப உதவிய கொள்கையென்று இதை ஒப்புக்கொள்ளும் ஒன்றை, மீண்டும் இவர் கட்டியெழுப்ப காரணமென்ன? கொஞ்சமாய் புரிகிறதா? பனிக்கட்டி முனை தான் இது.

சரி ஹஸ்கியின் நால் வர்ணம் என்பது என்ன?
அதை அடுத்து விளக்குகிறார்.

[முதல் வர்ணம்:]
"ஹஸ்கியின் கருத்துப்படி கிரீஸ், மெசபடோமியா, கங்கைச் சமவெளி, பாபிலோன் ஆகியவற்றை உள்ளடக்கிய நிலப்பரப்பில் வசித்த மக்கள் கல்வி கேள்விகளிலும் நுண்கலைகளிலும் சிறந்தவர்களாயும் மூளைத் திறனும், சிந்தனைத் திறனும், நுண் மாண் நுழைபுலனும் மிக்கவர்களாயுமிருந்தனர். உலகின் முதன்மையான மதங்களும் சித்தாந்தங்களும் தத்துவ விசாரணைகளும் அறிவியல் கருத்துகளும் அப்பகுதியில் தான் உருவாயின. அப்பகுதி மக்கள் உலகின் ஆசிரியர்களாகவும் நெறியாளர்களாகவும் இலக்கியப் படைப்பாளிகளாகவும் விளங்கினார்கள். அவர்களைப் பேரறிவாளர்கள் என ஹஸ்கி வகைப்படுத்துகிறார்."


[இரண்டாம் வர்ணம்]
"மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வசித்த நார்மன்களும் ஆங்கிலோ சாக்சன்களும் வைக்கிங்குகளும் தென் ஐரோப்பியப் பகுதிகளில் வசித்த மங்கோலியர்களும் போர்க்குணமும் முரட்டுத்தனமும் மிக்கவர்கள். சதாசர்வ காலமும் பிற நாடுகளின் மேல் படையெடுப்பதும் கொள்ளையடிப்பதுமே அவர்களுடைய வாழ்வியல் நெறி. அவர்களை ஹஸ்கி கொள்ளையர்கள் எனக் குறிப்பிடுகிறார்."


[மூன்றாவது வர்ணம்]
"கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சீனா, கொரியா, இந்தோசைனா போன்ற கிழக்காசிய நாடுகளிலும் வசித்த மக்கள் விவசாயம், வர்த்தகம், கைவினைத் தொழில்கள் ஆகியவற்றில் முனைப்புடனிருந்தார்கள். இன்றளவும் கூட அப்பகுதிகள் விவசாய உற்பத்தியிலும் கைவினைப் பொருள் உற்பத்தியிலும் சிறந்து விளங்குகின்றன. அவர்களை ஹஸ்கி உற்பத்தியாளர்கள் என வகைப்படுத்துகிறார்."


[நான்காம் வர்ணம்]
"கறுப்பின மக்களும் ஜிப்சிகளும் நான்காவது வர்க்கம் என ஹஸ்கி வகைப்படுத்துகிறார். அவர்களுக்குக் குறைவான மூளைத்திறனும் செயல்திறனும் அமைந்துள்ளன. அவர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்குவதில் தவறேயில்லை. உண்மையில் அது அவர்களுக்குப் பாதுகாப்பும் நன்மையும் அளிப்பதுதான். ஆப்பிரிக்கர்களைக் கூட்டம் கூட்டமாகப் பிடித்து அமெரிக்காவில் அடிமைகளாக விற்றுக் கொண்டிருந்த அரபுகளுக்கும் ஐரோப்பியர்களுக்கும் அது சாதகமான கருத்து. விலங்கு நிலையில் இருந்த கறுப்பர்களை மேம்படுத்தி மற்றவர்களுக்கு ஊழியம் செய்ய வைப்பது மத சம்மதமுள்ளதே என்று அவர்கள் தம்மைத் தாமே சமாதானப்படுத்திக் கொண்டார்கள். அமெரிக்க ஜனநாயக வாதிகள்கூட கருப்பர்களை அடிமைகளாக வைத்திருப்பதிலும் அவர்களை ஆடு மாடுகளைப்போல விற்பதிலும் வாங்குவதிலும் குற்ற உணர்வு கொள்ளவில்லை. டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த ஷாக்லி கூடக் கறுப்பர்களுக்கு மந்த புத்தி எனவும் அவர்களுக்குப் படிப்போ, தொழில் நுட்பப் பயிற்சியோ அளிப்பது வீண் என்றும் சொன்னார்."


இந்த நான்கு பிரிவுகளிலும், இந்திய துணைக்கண்டம் பற்றி ஒரு இடத்தில் வெளிப்படையாக வருகிறது. அது கங்கை சமவெளியில் வாழ்ந்தவர்கள் பற்றி. அவர்களை முதல் வர்ணம் என்றும், அங்கே "வசித்த மக்கள் கல்வி கேள்விகளிலும் நுண்கலைகளிலும் சிறந்தவர்களாயும் மூளைத் திறனும், சிந்தனைத் திறனும், நுண் மாண் நுழைபுலனும் மிக்கவர்களாயுமிருந்தனர். உலகின் முதன்மையான மதங்களும் சித்தாந்தங்களும் தத்துவ விசாரணைகளும் அறிவியல் கருத்துகளும் அப்பகுதியில் தான் உருவாயின." என்றும் எழுதியாயிற்றா?

இந்தியாவின் மற்ற பகுதிகள்?
அவை அனைத்தையும் நான்காவது வர்ணத்தில் சேர்க்கிறார்.
கறுப்பின மக்களும் ஜிப்சிகளும் நான்காவது வர்க்கம் என ஹஸ்கி வகைப்படுத்துகிறார்
இந்தியாவின் மற்றவர்கள்? கருப்பர்களும், ஆதிவாசிகளும்.
இவர்களின் குணமாக கூறப்படுவது:
அவர்களுக்குக் குறைவான மூளைத்திறனும் செயல்திறனும் அமைந்துள்ளன

இவர்களை என்ன செய்வது என்றும் கூறுகிறார்:
அவர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்குவதில் தவறேயில்லை. உண்மையில் அது அவர்களுக்குப் பாதுகாப்பும் நன்மையும் அளிப்பதுதான்.

இவர்களை அடிமைப்படுத்தி மலம் அள்ள வைப்பதில் என்ன தவறிருக்க முடியும்?
அது தானய்யா அவர்களுக்கு பாதுகாப்பு என்கிறார்.
பனிக்கட்டி பாதி தெரிகிறதா இப்போது?

"ஜனநாயக வாதிகள்கூட கருப்பர்களை அடிமைகளாக வைத்திருப்பதிலும் அவர்களை ஆடு மாடுகளைப்போல விற்பதிலும் வாங்குவதிலும் குற்ற உணர்வு கொள்ளவில்லை"

இப்படி காலங்காலமாய் நடந்தேறிய வன் கொடுமையை, நடத்திய கூட்டத்துக்கு எந்த குற்ற உணர்வும் தேவையில்லை. அப்படி குற்ற உணர்வு இல்லாவிட்டால் தானே, மேலும் மேலும் அடிமைப்படுத்தி மலம் தின்ன வைக்க முடியும்.

அதுவும் மலத்தை தன் கையால் தொடுவதா?
மலத்தை திணிக்க ஒரு சாதி, திண்ண ஒரு சாதி.
இவர்களுக்கு தனித் தனி வீதி.

போதுமா?
பனிக்கட்டி மனுவின் கொள்கைகளாக வெளிப்பட்டு விட்டனவா?
இதை மத வாதி சொன்னால் தானே எதிர்ப்பீர்கள்?

"டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த ஷாக்லி கூடக் கறுப்பர்களுக்கு மந்த புத்தி எனவும் அவர்களுக்குப் படிப்போ, தொழில் நுட்பப் பயிற்சியோ அளிப்பது வீண் என்றும் சொன்னார்."

ஷாக்லி கண்டுபிடித்தது டிரான்சிஸ்டர். அவர் ஒரு மின்னணுவியல் விஞ்ஞானி. நோபெல் பரிசு பெற்றவர் தான். அதனால் அவரின், தன் துறை சம்பந்தப்படாத "பரிணாம மானுடவியல்" குறித்த உளரல்கள் எல்லாம் விஞ்ஞான அந்தஸ்தை பெற்று விடுமா?

நிற்க. இங்கே மேற்படி குலக்கல்வி திட்டமே அதிகப்படிதான் என்பதை இப்போதாவது ஒப்புக்கொள்வீரா?

இது சந்தேகமற நிருவப் பட்ட விஞ்ஞான உண்மைபோல் இவர் கூறும் இந்த கருத்துக்கு ஆதாரம் தான் என்ன?

இந்த ஹஸ்கியின் ஆராய்ச்சிகள் எந்தளவு நிரூபனம் ஆகியுள்ளன?

அதை புரட்டுரையாளர் தன் இறுதி பத்தியில் கூறுகிறார்: "ஹஸ்கிக்கு ஜீன்களை பற்றி முழுமையான அறிவு இல்லை. பிறவிக்குணங்களுக்கு மரபுக்காரணிகள் காரணமாவதை அவரால் உறுதியாக நிரூபிக்க முடியவில்லை."

உறுதி படுத்த முடியாததை தான் இந்த புரட்டுரையாளர் முதலில் "மனித இனத்தின் பரிணாமப் போக்கின் காரணமாகவும், மரபுக் காரணிகளாலும் அது ஏற்பட்டது" என எழுதுகிறார். தினமணியும் அதை அப்படியே பிரசுரிக்கிறது.

"ஆனால் ஹஸ்கியின் கருத்துகள் மற்ற அறிஞர்களின் ஒப்புதலைப் பெறவில்லை. கடுமையான பரிசோதனைகள் மூலம் அவற்றைச் சரிபார்க்க முடியாததே அதற்குக் காரணம்."

ஆகா என்னே ஒரு நேர்மை?
ஆரம்பத்தில் ஒன்றை சொல்லி, இறுதியில் அதையே மறுத்து எழுதி தன் நேர்மையை மறு நிர்மானம் செய்ய முயலுகிறார்.

இடையில் முழுமையான விஷ விதைப்பையும் நடத்தி விடுகிறார். என்ன அந்த விஷ விதைப்பு?
அது தான் பனிக்கட்டியின் முழு வடிவம்.
அதற்கு முன்:

நிரூபனமாகாத, மறுக்கப்பட்ட கருத்துக்களை முன்வைத்து எழுதப்பட்ட ஒரு அவதூற்றை, உளரலை, விஞ்ஞான உண்மை போல எழுத வேண்டிய கட்டாயம், இந்த புரட்டுரையாளருக்கு இருக்கலாம்.

இதை பிரசுரிக்க வேண்டிய அரிப்பு தினமணிக்கும் இருப்பதும் இப்போது மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளது.

இந்த புரட்டுரையின் இறுதி கருத்து என்ன தெரியுமா?
அது தான், இவர்களின் கட்டாயம், அரிப்புக்கான சொறிதல், எல்லாம்.

>2000 ஆண்டுகளுக்கும் மேலாக மற்ற இனத்தவர்களால் அடக்கி ஒடுக்கிக் கொடுமைப்படுத்தப்பட்ட பிறகும் யூதர்கள் தமது பேரறிவுத் திறனை இழந்து விடவில்லை. பெரும் எழுத்தாளர்களும், அறிஞர்களும், விஞ்ஞானிகளும், அரசியல் மற்றும் பொருளாதார மேதைகளும் யூத இனத்தில் அதிகமாகத் தோன்றியிருக்கிறார்கள். அவர்கள் வேறு தொழில்களில் ஈடுபட்டாலும் உடலுழைப்பை விட அதிக அளவில் அறிவுத் திறனையே பயன்படுத்தி மேநிலைக்கு உயர்வார்கள்.


மேலே உள்ளவற்றில் யூதர்கள் என்பதை எடுத்துவிட்டு வேறொன்றை வைத்து பாருங்கள். புரிகிறதா?

"இன்னும் 2000 வருடங்கள் ஆனாலும் நாங்க அடங்க மாட்டொம்டா. யூதனுங்க போலடா நாங்க"ன்னு சொல்ல வர்றது புரியல?
இது தான் பனிக்கட்டியின் முழு வடிவம்.


விஞ்ஞானத்தின் வேரை வேதத்தில் காட்டி முட்டாளடிக்கும், சதியின் அடுத்த கட்டமாக, வேதம் கட்டப்பட்டுள்ள, அதன் அடித்தளமான விஷத்துக்கு விஞ்ஞான விளக்கம் தர முற்பட்டுள்ளன, இந்த வாலறுந்த நரிகள்.

வேதம் தந்த அதி அற்புத வர்ணாசிரம தத்துவ விஷம், விஞ்ஞான நிரூபனம் என்றாகி விட்டால் இதுகளுக்கு வேறு என்ன வேண்டும்?

சங்கர மட அதிபர்களை கைது செய்தும், குமுகாயத்திலிருந்து விரட்டியடிக்கப் பட வேண்டிய ஒரு அடிப்படைவாதியை, களையெடுக்கப்பட வேண்டிய பழமை தீவிரவாதியை "தூக்கில் போடு" என்ற குரல் மக்கள் மத்தியில் ஒலித்ததே தவிர அனுதாபமோ, கோபமோ மக்களிடம் எழவில்லை. மக்களிடம் கோபத்தை எதிர்பார்த்து ஏமந்த கோமாளி கூட்டம் இப்போது அவர்களின் மீது கண்டபடி மலம் அள்ளி வீசுகிறது.

ஐம்பதாண்டு மௌனம் காத்திருந்து, தங்களை யூதர்களாக கற்பனை செய்து, தமிழர்களை இனப்படுகொலை செய்த நாசி-களுடன் ஒப்பிட்டது ஒரு வஞ்சக நரி.

"பீடத்தில் ஞானத்தை அடகு வைத்து, விலையாக விருது பெற்ற" (நன்றி:நெல்லை கண்ணன்) நன்றி கொண்ற அவர்களின் அடிமை கழுதைப்புலி ஒன்று, சோறு போட்ட மக்களையே நாய்கள் என்பதாக சொல்லி, பிணம் தின்னும் தன் புத்தியை காட்டியது.

இப்போது ஊளையிட்டிருப்பது வாலறுந்த நரியா, அல்லது அதன் மற்றொரு அடிமை கழுதைப்புலியா என்பது தெரியவில்லை.

ஆனால் இதை வெளியிட்டு, வாலறுந்த புண்ணை நக்கிக் கொண்டுள்ளது தினமணி.

இடைத்தேர்தல் முடிவு புண்ணுக்கு மருந்தாகும் என எதிர்பார்த்தது நரிகளின் கூட்டம். ஆனால் மக்கள் மிளகாய் பொடியை தூவிவிட, இந்த புரட்டுரையை பிரசுரித்து ஆறுதல் தேடுகின்றன.


பின் குறிப்பு: இது ஒரு அவசர எதிர்வினை. இடைத்தேர்தல் முடிவுகளின் முழு விவரம் அறிய இன்று காலை இணையத்தை மேய்ந்த போது இந்த புரட்டுரை கண்ணில் பட்டு தொலைத்தது.

விபத்தின் பாதிப்பிலிருந்து முழுதும் மீளாத நிலையில், நேற்றிலிருந்து அலுவலகம் செல்ல தொடங்கிவிட்டேன். ஓய்வு எடுத்த காலத்துக்கும் சேர்த்து வேலை செய்ய வேண்டியுள்ளது. ஆறு மாதமாக எதிர்பாத்து காத்திருந்த ஒப்பந்தம் ஒன்று வேறு இன்று இறுதி செய்யப்பட்டது. எல்லாம் சேர்ந்து, எனக்கான தனிப்பட்ட நேரத்தையும் எடுத்துக்கொண்டுள்ளன. உணவு இடைவேளையை பயன் படுத்தி இப்பதிவை எழுதினேன்.(மாலை வலையேற்றிவிடுவேன்)

முன்பை போல அதிக நேரம் தமிழ்மணத்தில் செலவு செய்ய இயலாது என நினைக்கிறேன். முடிந்தளவு வாசிக்கவாவது தினம் ஒரு மணி நேரம் ஒதுக்க முடியுமா தெரியவில்லை.

தலாக் குறித்த பதிவிற்கு வந்த கருத்துக்களுக்கும், தனி பதிவுக்கும் பதிலளிக்க சிறிது காலமாகலாம். அதற்காக நண்பர்கள் மன்னிக்கவும்.
திண்ணை தலாக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. http://www.thinnai.com/pl0513057.html. அதில் வாசித்தவர்களும் கருத்துக்களை மின்னஞ்சலில் அனுப்பி வருகின்றனர். அனைத்துக்குமாக சேர்த்து என் கருத்தை பிறகு தெரிவிக்கிறேன்.


இந்தப்பதிவில் நான் சாடியுள்ளது வர்ணாசிரமத்தை, வர்க்க பேதத்தை, அதை நிரந்திரமாக்கிட துடிக்கும் கயவர்களையே அல்லாது எந்த ஒரு வர்ணமாகவும்/வர்க்கமாகவும் பிறரால், பிறப்பினால் அடையாளம் காட்டப்படுபவர்களை அல்ல. அப்படி பிறப்பை மட்டும் வைத்து, அவர்களின் தனி நபர் நிலைப்பாட்டை கருத்திலெடுக்காமல் ஒருவரை/இனத்தை முழுவதும் சுட்டினால், அதுவும் ஒரு வர்க்கபேதம் பாராட்டுதலே/ வர்ணசிரம அடியொற்றுதலே என்ற புரிதல் எனக்கு உண்டு. எனவே நண்பர்கள் அந்த தெளிவுடன் இதை வாசிக்கவும். நன்றி.



நன்றி http://www.suratha.com எழுத்துரு மாற்றி.
தினமணியில் கே.என்.ராமச்சந்திரன் கட்டுரை:

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

தொலைந்த பதிவின் மீட்பு

19 வயது பெண்ணுக்கு நேர்ந்துள்ள அவலம் இது. அப்பெண்ணை மொட்டையடித்து, நிர்வாணமாக தெருக்களின் வழியே அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் அதிர்ச்சி தருவது, அப்பெண்ணின் குடும்பத்தினரே இதை செய்தது தான்.

பஞ்சாப் மாநிலம், பெரொசாபூர் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் இது நடந்துள்ளது.

இப்பெண்ணை ஒருவருக்கு மணமுடித்து கொடுக்க ஏற்பாடு செய்த நிலையில், இவரது தாயார் மரணமடைந்து விட்டார்.

பின்னர் இவரது தந்தை, அதிக பணம் தருவதற்கு சம்மதித்த வேறொருவரை மணக்க சொல்லி, இப்பெண்ணை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் மறுத்துவிடவே, ஆத்திரமடைந்த தந்தையும், அவர்களின் குடும்பத்தினரும், மேலே சொன்ன அராஜகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

அப்பெண் காவல் துறையில் புகார் செய்த பின்பு, இரண்டு பெண்கள் உட்பட அக்குடும்பத்தினர் பத்து பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது.

சமீபமாக அறியவந்த, பெண்களுக்கெதிரான உச்சபட்ச கொடுமைகளில் ஒன்று இது.

பெரும்பாலும் பெண்களுக்கு எதிரான கொடுமை, கணவன் / அவனது வீட்டாரால் இழைக்கப்படும். அல்லது வெளியாரால். இதைப் போல், பெற்றோர், அவர் தம் குடும்பத்தினரே ஈடுபடுவதென்பது, விகிதாச்சார அளவில் குறைவே.

எப்படியாயினும், அவை நான்கு சுவற்றுக்குள்ளாகவோ, மற்றவர்களுக்கு தெரியாவண்ணமோ நடத்தப்படும்.

ஆனால் இப்பெண் தன் தந்தை உட்பட, சொந்த குடும்பத்தாலேயே சகிக்க முடியாதவொரு துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மேலும், எந்த ஒளிவு மறைவுமின்றி, ஊர் நடுவிலேயே இந்த கொடூரம் நடந்துள்ளது. இதற்கு ஊர் மக்கள் எவ்வித எதிர்ப்புமின்றி இருந்திருப்பது கவனிக்கத்தக்கது.

அந்த குடும்பத்தினர், பெண்ணின் மீதான, தங்களின் அதிகாரத்தை நிலை நாட்டவே இப்படி ஒரு பெரும் கொடுமையை நிகழ்த்தியுள்ளனர் என்பது தெளிவு.

அக்குடும்பத்தினர், "பெண் என்பவள், தந்தை, மற்றும் குடும்பத்தினருக்கு அடங்கி நடக்க வேண்டியவள், அவளுக்கு என்று தனிப்பட்ட தேர்வு என்பது இருக்கக்கூடாது, யாரை திருமணம் செய்வது என்பதை தாங்கள் தான் நிர்ணயம் செய்ய வேண்டும், குடும்பத்தார் முடிவு செய்து விட்டால், சுய விருப்பு வெறுப்புகளுக்கு இடமின்றி ஏற்பதை தவிர, மாற்றவோ, மறுக்கவோ பெண்ணுக்கு எவ்வித உரிமையும் இல்லை" , என்பதான பாரத கலாச்சார காய்ச்சல் கொண்டவர்கள் என்பதும் புரிபடுகிறது.

அடிபணிதலை பெண்ணுக்கு உணர்த்த விழையும் ஆணாதிக்க குமுகத்தின் வக்கிர வெளிப்பாடு இது.

இவர்களின் அதீத கொடுஞ்செயல் அதிர்ச்சியும் வேதனையும் தந்ததே தவிர ஆச்சரியம் தரவில்லை.

இதில் அதிக வேதனையை கொடுத்தது, அவ்வூர் மக்களின் செயல்பாடு தான்.

என்ன மாதிரியான வக்கிர மனம் அவர்களது?

கண்முன்னே ஒரு பெண்ணை இத்தகைய கொடுமைக்கு உள்ளாக்குவதை, அனுமதிக்கும் / தடுக்க விழையாத மனம் எப்படி சாத்தியமானது அவ்வூர் மக்களுக்கு?

அப்பெண்ணுக்கு நிகழ்த்தப்பட்டது, ஊரில் உள்ள மற்ற (தங்கள் வீட்டு)பெண்களுக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும் என்ற சுயநலமாயிருக்குமா?

ஒருவேளை, பல நூற்றாண்டுகளாக போற்றி வந்த பெண்ணடிமை கலாச்சாரம் மீண்டும் காக்கப்படுகிறது என்ற குதூலகம் கூட அவர்களுக்கு இருந்திருக்கலாம்.

எனக்கு புரியவில்லை.

நடப்பது கொடுமைதான், ஆனால் நிகழ்த்துவது அவளின் குடும்பத்தினர், எனவே தலையிட வழியில்லை என்ற எண்ணமா?

ஒரு பெண்ணுக்கு, அவளின் கணவன், தந்தை, சகோதரன், மற்ற குடும்ப உறவினர்களுக்கு உள்ள அதீத உரிமையில், அவர்களாலேயே அவள் எத்தகைய கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாலும், மற்றவர் தலையிடக்கூடாது எனும் நீதியா?

இதுவாக இருந்தால், எனக்கு அதிர்ச்சி கூடுகிறது.

காரணம், இத்தகைய நீதி சமீபத்தில் எனக்கும் போதிக்கப்பட்டது.

இந்த வாரம் தலாக் தலாக் தலாக் என்ற தலைப்பில் ஒரு பதிவை இட்டிருந்தேன். அதற்கு சிலர், பின்னூட்டங்களில் இப்படிப்பட்ட கருத்தை வெளிப்படுத்தி இருந்தனர். [பின்னூட்டங்களைவிட அதிக எண்ணிக்கையில் மின்னஞ்சல்கள் வந்துள்ளது.]

அவர்களில் பெரும்பாலோர் சொன்னது, "உரிமையை அவர்களாக கேட்கட்டும், மற்றவர்கள் தலையிட வேண்டாம்" என்பது. இவர்களில் சிலர் தாங்கள் இஸ்லாமியர்கள் அல்ல என்றும் தெரிவித்திருந்தனர். அது கூடுதல் வியப்பே.

இவர்கள் இடையேயான மன ஒற்றுமை, என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது

இத்தகைய வக்கிர மனோபாவம், கயமை, மதங்களை, மொழி எல்லைகளை கடந்து விரவியுள்ளது அச்சம் தருகிறது. [பாதிக்கப்பட்ட பெண் சீக்கிய அல்லது இராஜ்புத் இனத்தவராக இருக்கக்கூடும்]

இது மனித மனத்தின் வக்கிரங்களின் எல்லைகளை கடந்த, மனிதம் என்ற குணங்களில் அடங்கா ஒன்றாகவே எனக்கு தெரிகிறது.

இங்கே கொடூரங்களை நிகழ்த்துபவர்கள், ஏதோ ஒரு மடத்தனமான உணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு செயல்படுகின்றனர். இதை ஒத்துழைக்க மறுத்த அடிமைக்கான ஒரு எதிர் வினையாகவும் அவர்கள் நியாயப்படுத்திக் கொள்ளக்கூடும்.

ஆனால் வெளியிலிருந்து நோக்குபவர்கள், அந்நிகழ்வின் கொடூரத்தை உணர முடியாதது, அல்லது அதை நியாயமானதாக காண்பது எப்படி சாத்தியமாகிறது?

அவ்வூர் மக்களில் ஒருவர் கூடவா அப்பெண்ணுக்கு உதவ நினைத்திருக்க மாட்டார்? ஆனால் அவரை "இதில் தலையிட உனக்கென்ன உரிமை?" என அக்குடும்பத்தினரோ, மற்றவர்களோ தடுத்திருக்கலாம்? இப்படியான நீதியை உபதேசிப்பவர்கள் அங்கேயும் இருந்திருக்கலாம் தான்.

ஒரு தலைவர் கொல்லப்பட்டால், கொண்றவரின் மதத்திற்கெதிராய் நாடு முழுவதும் வன்செயல்கள் நடக்கிறது.

ஒரிடத்தில் இடிக்கப்படுவதற்க்கு, வேறொரு நகரில் குண்டு வெடிக்கப்படுகிறது.

ஒரு ஊரில் குண்டு வெடித்தால், நாடெங்கிலும் அதற்கு பின்னுள்ளதாக கருதப்பட்ட மதத்தினர்களை கருவறுக்கும் செயல் நடத்தப்படுகிறது.

ஒரு இரயில் பெட்டி எரிந்தால், மாநிலம் முழுக்க ஒரு மதத்தினர் மீது கொடும் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது.

இப்படி ஒருபுறம் அதி தீவிரமாக, மோசமாக எதிர்வினையாற்றும் நாட்டில், மறுபுறம் கண்முன்னே நடக்கும் ஒரு கொடூரத்தை, தடுக்காமல் செயலற்று இருப்பதன் மூலம், அதற்கு ஒரு அங்கீகாரத்தையும் தர இவர்களால் முடிகிறது.

கல்லால் அடித்து கொல்வதையும், தலை மழித்து ஆடை அவிழ்ப்பதையும், மற்றய வன்செயலகளையும், இவர்களால், விதி மீறலுக்கான ஒரு தண்டனையாக நிறைவேற்ற / ஏற்றுக்கொள்ள முடிகிறது.

எங்கோ ஒரு இடத்தில், கொடுமைக்கு உள்ளாகுபவரை - சக மனிதராக அல்ல - சக மதத்தினராக பார்த்து கண்ணீர் விடவும், ஆவேசப்படவும் முடியும் இவர்களால், தங்கள் குடும்பத்தில், அருகில் உள்ளவர்களின் துயரை உணர முடியாதது விந்தைதான்.

என்ன மாதிரியான வக்கிர மனம் இவர்களது?

இது என்ன மாதிரியான கலாச்சாரம்?

இதை போதிக்கப்பட்ட உணர்ச்சிகளுக்கு கட்டுப்படும் ஒரு குமுகாயத்தின் செயல் என எடுத்துக்கொள்ள முடியுமா?

கலாச்சார பரிணாம வளர்ச்சி தடைபட்டு, பாதியில் நசிந்து போன ஒரு நாகரீகத்தின் வெளிப்பாடாகவே எனக்கு படுகிறது.

பழமையை, தான் புனிதமானதாக போற்றும் ஒன்றை, காலம் வென்று நிலைக்கச் செய்ய வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாக எண்ணி, வெறி கொண்டு இவர்கள் நிகழ்த்துவதின் கொடூரத்தை புரிந்து கொள்வார்களா?

அப்படியான புரிதல் வருவதற்கு தடையாய் இருக்கும், அறிவை மழுக்கும், மனிதத்தை மறுக்கும், பழமையை மறு பரிசீலித்து, தவறென புரிவதை கைவிட இவர்கள் துணிவார்களா?

தங்களில் மனிதம் மறுபடி துளிர்க்க இடம் தருவார்களா?

தொலைந்த பதிவின் மறு பதிவேற்றம் இது:
முந்தய தலைப்பு:::மொட்டையடித்து, நிர்வாணப்படுத்தி, ஊரை வலம் வரச்செய்து::தலாக்:: மன நிலையின் ஒற்றுமை

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
Get Nandalaalaa atom feed here!

Friday, May 13, 2005

மீண்டும் இந்திய அமைதிப்படை?

மக்கள் விடுதலை போர்ப்படை அமைப்பினர், காவல் நிலையம் ஒன்றின் மீதும், அருகிலிருந்த காவலர் குடியிருப்பின் மீதும் எறிகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் பெரியளவிலான பாதிப்போ, உயிர் சேதமோ எதுவும் இல்லை. இதில் கவணிக்க வேண்டியது, முதல் முறையாக இவர்கள் எறிகணை பயன்படுத்தியதையே.

இத்தாக்குதல், ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், துர்கி காவல் நிலையம் மீது, வெறும் 200 மீட்டர் தொலைவிலிருந்து நடத்தப்பட்டது. 10ம் தேதி நல்லிரவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல், இந்திய பொதுவுடமை கட்சி (மாவோயிஸ்ட்) [Communist Party of India (Maoist)] யின் மக்கள் விடுதலை போர்ப்படையால் [People's Liberation Guerrilla Army (PLGA)] மேற்கொள்ளப் பட்டது. 'விடுவிக்கப்பட்ட பள்ளநாடு' பகுதி கமான்டர் சுரேஷ் தலைமையில், இரண்டு லாரிகளில் வந்த 30 இளைஞர்களால் மட்டுமே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் கையெறி குண்டுகளையும் பயண்படுத்தியுள்ளனர்.

அங்கிருந்த காவலர்கள், பதிலடியாக, இருதரப்பிலும் சம்பந்தப்படாத வாகன ஓட்டி ஒருவரை திருப்பி சுட்டுவிட்டு, கலைப்படைந்ததால், பின்னர் காவல் நிலையத்தின் உள்ளேயே ஓய்வெடுத்துக் கொண்டனர்.

சுமார் 30 நிமிடங்கள் தாக்குதலை நீடித்து அப்பகுதியை போர்க்களம் போல் தோன்ற செய்த மக்கள் விடுதலை போர்ப்படையினர், பின்னர் சம்பவ இடத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ள, அனுமான் ஆலயம் ஒன்றில், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தியுள்ளனர்.

ஓங்கோல், ஐதராபாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்தை தடை செய்த மக்கள் விடுதலை போர் படையினர், சாலையின் குறுக்கே அரசாங்க அட்டூழியங்களை கண்டிக்கும் பதாகைகளை கட்டியும், சிறு பாலங்களில் கண்ணிவெடிகளை புதைத்தும், டயர்களை கொளுத்தியும், அந்த பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இத்தாக்குதலில் பயன்பட்ட 500 மீட்டர் தூரம் வரை தாக்கக்கூடிய எறிகணை மக்கள் விடுதலை போர்ப்படையின் சொந்த தொழில்நுட்ப தயாரிப்பு எனவும், துர்கி காவல் நிலையம் மீது நடத்தப்பட்டது எறிகணைக்கு ஒரு "சோதனை தாக்குதல்" என்றும் கமான்டர் சுரேஷ் பத்திரிக்கையாளர்களிடம் பின்னர் தெரிவித்தார்.

இந்த எறிகணை, மது என்ற கமான்டரால் வடிவமைக்கப்படது என்றும், தற்போது நெல்லூர் காவல் துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் அவரை விடுவிக்கவே இந்த தாக்குதல் என்றும், அவரை விடுவிக்கும் வரை இது போன்ற தாக்குதல்கள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து தடை காரணமாக, 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் சாலையில் நிறுத்தப்பட்டன. அவற்றில் பயணம் செய்த நூற்றுக்கணக்கான மக்கள் முதல் முறையாக, மக்கள் போர்ப்படையினரை வெகு அருகில் கண்ணுற்றதுடன், அவர்கள் வெடிகளை புதைப்பதையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

சுமார் 3.30 மணி நேரத்திற்கு பிறகே இவர்கள் அங்கிருந்து விலகி, தங்கள் மறைவிடத்திற்கு சென்றுள்ளனர். அதுவரை அவர்களுக்கு எவ்வித எதிர்ப்பும் அரசு தரப்பிலிருந்து வரவில்லை.




ஆந்திராவில், நிலமற்ற ஏழை விவசாய கூலிகளின், உழைப்பை சுரண்டும் நில உடமையாளர்கள் மற்றும் கடன் கொடுத்து அநியாய வட்டிக்கு வாழ்க்கையை சீரழிக்கும் பண முதலைகளுக்கு எதிரான சிறு சிறு போராட்டங்கள் 1970களின் மத்தியில் துவங்கின.

இவற்றை மேற்கொண்ட, கிராம அளவில் இயங்கிய சிறு குழுக்களை ஒருங்கிணைத்து, 1980ல் மக்கள் போர்ப்படை என்ற அமைப்பு, கொண்டபள்ளி சீதராமய்யா என்பவர் உருவாக்கினார். நக்சல்பாரி இயக்க கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவர் ஒரு பள்ளி ஆசிரியராவார்.

பிற்காலத்தில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளான இவ்வமைப்பு, ஆந்திர மாநிலத்துக்கு வெளியே வர்க்க போராட்டத்தில் ஈடுபட்டிருந்த, பல்வேறு இடது சாரி சிந்தனையுடைய அமைப்புக்களுடன் கை கோர்த்தது. இன்று, இவ்வமைப்பு ஆந்திர மாநிலம் தவிர, ஒரிஸா, ஜார்கண்ட், பீகார், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா மாநிலங்களில் வலுவான அமைப்பாக வளர்ந்துள்ளதுடன் கர்நாடகம், ஆந்திர மாநில எல்லையோர தமிழ்நாட்டு மாவட்டங்களிலும் இவர்களின் தொடர்பு பரவியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

நேபாளத்திலுள்ள மாவோயிய ஆயுத போராட்டக் குழுவுடனும், வடகிழக்கில் இயங்கி வரும் ஆயுத குழுக்களுடனும், மற்ற மாநிலங்களில் உள்ள ஆயுதமேந்திய இடது சாரி இனக்குழுக்களுடனும் ஒருங்கிணைந்த தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. வடக்கே நேபாளத்திலிருந்து தெற்கே ஆந்திரா வரையிலும், மேற்கே மஹாராஷ்டிராவிலிருந்து, கிழக்கே வட கிழக்கு மாநிலங்கள் வரையிலும் தங்கள் போராட்ட களமாக, வலுப்பெற செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2003, அக்டோபர் 1ம் தேதியன்று திருப்பதியில், அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாகனத்தை தாக்கிய போது, இவர்களின் செயல்பாடு நாடளவிலான கவனத்தை பெற்றது. இந்த தாக்குதலை முன்வைத்து மக்களின் அனுதாபத்தை பெற்றுவிட நினைத்த சந்திரபாபு நாயுடு, நாடாளுமன்ற தேர்தலுடன், மாநில தேர்தலையும் நடத்தினார். ஆனால் அந்த தேர்தலில், தெலுகு தேசம் படுதோல்வியடைந்தன் மூலம் பெருவாரி ஆந்திர மக்கள், இவ்வியக்கத்திற்கு எதிராக இல்லை என்பதை வெளிப்படுத்தியதாக, பெரும்பாலோர் கருதுகின்றனர்.

கடந்த தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்த காங்கிரஸ், முதல்வர் ராஜசேகர ரெட்டி, மக்கள் விடுதலை போர்ப்படையினருடன், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டு பேச்சு வார்த்தைக்கு உடன்பட்டார்.

அதுவரை தலை மறைவு வாழ்கை மெற்கொண்டிருந்த இவ்வமைப்பின் தலைவர்கள், பேச்சு வார்த்தைக்காக காட்டை விட்டு வெளியே வந்தனர். அச்சமயத்தில் அவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்கு திரண்ட மக்களின் எண்ணிக்கை பிரமிப்பூட்டுவதாக இருந்தது. அதுவரையில் ஆந்திராவின் எந்தவொரு அரசியல் கட்சிக்கும், தலைவருக்கும் கூடியிராதபடி, மிகப்பெரிய அளவில் மக்கள் திரண்டனர். மக்களிடையேயான அவர்களின் செல்வாக்கு, மத்திய, மாநில அரசுகள், நிலவுடமையாளர்கள் ஆகியோரை கவலை கொள்ள செய்தது.

இத்தகைய மக்களாதரவு என்பது மிகச்சாதாரணமாக கிட்டக்கூடிய ஒன்றல்ல. இவர்களின் வளர்ச்சியும், இவர்களுக்கான மக்களின் ஒத்துழைப்பும் கிடைக்க காரணம் என்ன என்பதை அறிய முற்படுமுன் ஆந்திர மாநிலத்தின் குமுக பொருளாதார நிலையை புரிந்து கொள்வது முக்கியம்.

அந்திராவில், நிலவுடமை என்பது மேல் சாதிகளுக்கும், கீழ் நிலை சாதிகள் நிலமற்ற ஏழைகள் என்பதும் எல்லா மாநிலங்களிலும் உள்ளது போல்தான் என தோன்றினாலும், இன்னும் ஆழமானது. தமிழகத்தை போலல்லாது ஆந்திராவில், உச்சசாதியினரும், அவர்களுக்கு அடுத்த நிலை சாதியினரும், படி நிலைக்கொப்பிய அளவில் நிலவுடமையாளர்களாக உள்ளனர். கீழ்சாதியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர்கள் எக்காரணம் கொண்டும் - சில மாவட்டங்களில் - விளை நிலங்களை விலைக்கு கூட வாங்க முடியாது என்பது அங்கே எழுதப்படாத நடைமுறை வழக்கம். மீறும் தாழ்த்தப்பட்ட, கீழ்நிலை சாதியினரின் நிலங்களை பறித்துக்கொள்ளும் அல்லது அவர்களை எரித்துக்கொல்லும் உரிமையும், கடமையும் அப்பகுதி நில உடமையாளருக்கு (மேல் சாதியினருக்கு) உரியது.

தமிழகத்தில், தஞ்சை மாவட்டத்தில் நான்கு அல்லது ஐந்து ஏக்கர் நிலம் உள்ளவர்கள் மிராசுதார்கள் என்று அறியப்படுவார்கள். இவர்களை ஆந்திர மாநில மிராசுகளுடன் ஒப்பிட்டால், மலைக்கு முன் தஞ்சாவூர் மிராசு சிறு மடு கூட அல்ல. ஆந்திராவின் ஒரு சில மாவட்டங்களில் ஒரு தாலுகாவின் மொத்த விளை நிலங்களும் நான்கு ஐந்து குடும்பங்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்கும். அக்குடும்பங்களை தவிர ஏனையோர் அவர்களை அண்டி பிழைப்பவர்களே. இந்நிலையில், சாதிய அடிப்படையிலும் தலைமுறை தலைமுறையாக சுரண்டப்பட்ட மக்கள் தங்களுக்காக குரல் கொடுப்பவர்களாக, தங்கள் நலனை முன்னெடுத்து செல்லும் ஒரு இயக்கமாக மக்கள் விடுதலை போர்ப்படையினரை காண்கின்றனர்.

இவ்வமைப்பினர், காவல் நிலயங்கள், காவலர்கள், காவல்துறை உளவாளிகள் ஆகியோர்களை தாக்குவது, என தங்களின் சுய இருப்பின் பாதுகாப்புக்கான செயல்பாட்டுடன் மட்டும் நிற்பதில்லை. மக்களின் வருத்தும் அநியாய வட்டி கடன், நிலமின்மை ஆகிய பிரச்சினைகளுக்கும் அதிரடி தீர்வு காண்கின்றனர்.

முன்னறிவிப்பின்றி ஏதேனும் ஒரு கிராமத்தினுள் புகுந்து, அங்கிருக்கும் விளை நிலங்களை ஏழை மக்களுக்கு பகிர்ந்தளித்தல், அவர்களின் கடன்களை செல்லாது என அறிவித்தல் என இவர்கள் நடத்தும் அதிரடிகள் அப்பகுதி மக்களிடம் இவர்களுக்கான ஆதாரவை பெருக்கியுள்ளது.

இவர்களால் பாதுகாக்கப்படுவதும், பலன் பெருவதும் அடிநிலை மற்றும் கீழ் நிலை சாதி, நிலமற்ற ஏழை மக்கள் என்பதால், அவர்களின் மத்தியிலேயே இவர்களின் ஆதரவும் உள்ளது. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களே இவ்வியக்கங்களில் இணைகிறார்கள்.

இவர்களால் பாதிக்கப்படும், மேல்சாதி நிலவுடமையாளர்கள் இவ்வமைப்பினரை அழித்தொழிக்க அரசாங்கம், காவல் துறையினர் மூலம் மெற்கொள்ளும் முயற்சிகள் எவ்வித பலனையும் இதுவரை அளிக்கவில்லை.

மக்கள் விடுதலை போர்ப்படையின் எண்ணிக்கை 600லிருந்து, 1000க்குள்ளாக மட்டுமே இருக்கலாம். இவர்கள் சிறு எண்ணிக்கையிலேயே ஆயுதமேந்தி, காடுகளில் பதுங்கி யிருந்தாலும், நாட்டினுள் இவர்களுக்கு பெருத்த செல்வாக்கு உள்ளது.

இன்றைக்கு அதிகளவில், மாணவர்கள் இவ்வமைப்புகளில் இணைகிறார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் காட்டுக்குள் சென்று தலை மறைவு வாழ்கை வாழ்வதில்லை. மாறாக, ஊர்ப்பகுதியிலேயே மக்களுடனிருந்து, அவர்களின் விழிப்புணர்ச்சிக்கு உழைக்கின்றனர். எனவே, இவர்களுடன் இணைவதை, பெற்றோர்களும் தடுப்பதில்லை.

சென்ற ஆண்டு ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. முக்கிய காரணம், ஆந்திர அரசால், மக்கள் விடுதலை போர்ப்படையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாதது தான்.

மக்கள் விடுதலை போர்ப்படையினரின் முக்கிய கோரிக்கைகள்:


  • நில ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து, விளை நிலங்களை ஏழை விவசாயிகளுக்கு பிரித்து கொடுத்தல்.


  • நில உடமை சீர்திருத்தங்களை முன்னிருத்தி மக்களை திரட்டி போராடுவதற்கு அனுமதி. (ஆந்திர அராசாங்கம், இவ்வகை போராட்டங்களை / ஆர்ப்பாட்டங்களை நடத்த எந்த ஒரு மைப்பையும் இலகுவில் அனுமதிக்காது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.)


  • மாநில திட்டங்களுக்கு உலக வங்கியின் கட்டுப்பாடுகளை நீக்குவது.


  • ஆந்திராவின் ஒரு பகுதியினை தெலுங்கானா மாநிலமாக பிரிப்பது.


  • நக்சலைட் வேட்டை என்ற பெயரில் காவல் துறையால் கொல்லப்பட்டவர்கள் குறித்து நீதி விசாரணை.


இவற்றில் நில சீர்திருத்தம் தொடர்பிலானதை தொடுவதற்கு ஆந்திராவின் எந்த அரசியல்வாதிக்கும் தைரியம் இருக்காது, வராது என்பதே நடைமுறை உண்மை. நிலவுடமை மேல்சாதியினரை பகைத்துக்கொண்டு அரசியலில் நிலைப்பது மட்டுமல்ல, ஆந்திராவில் வாழ்வதே சாத்தியமில்லை.

உலக வங்கியை எதிர்ப்பது என்பதும், பிரதமர் மன்மோகன், அவரின் சீடரும் உலக வங்கியின் இந்திய இதயமும் ஆன சிதம்பரம், ஆகியோரை எதிர்ப்பதும் ஒன்றாகும். இதுவும் காங்கிரஸ் முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு முடியாமல் போய்விட்டதில் வியப்பில்லை.

தெலுங்கானா பற்றி காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன வென்பது அக்கட்சியின் தலைமைக்கே புரியாத புதிர். எனவே தற்போதைக்கு அதிலும் மவுனம்.

நீதி நிலை நாட்டப்படுவதில் ஆளும் வர்க்க ஆர்வம் பாரறிந்த ஒன்று. ஆந்திர அரசால் இதுவும் இயலாமல் போனது.

இறுதியாக பேச்சுவார்த்தை என்ற பெயரில் காட்டிலிருந்தவர்களை, நாட்டுக்குள் வரவழைத்து, மிகப்பெரிய ஊடக கவனிப்பை இலவசமாக பெற்றுத் தந்தது தவிர வேறு எவ்வித ஆதாயத்தையும் ஆந்திர அரசால் பெற முடியவில்லை.

சமாதான முயற்சியின் தோல்விக்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. நக்சலைட் வேட்டை என்ற பெயரில் நடக்கும், ஆளும் அரசியல் / அதிகார வர்க்கம் மற்றும் காவல் துறை, இவற்றின் கூட்டுக்கொள்ளை. ஆண்டு தோறும் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் தேச பாதுகாப்பு என்ற பெயரில், தணிக்கைக்கு உள்ளாகாமல் செலவு செய்யும் வாய்ப்பை அவர்கள் இழக்க தயாரில்லை. செலவிடும் பணத்திற்கு அவ்வப்போது, நிலவுடமை மேல்சாதியினரை எதிர்க்கும் அப்பாவி ஏழைகளை கொண்று, ஊடகங்களுக்கும், மத்திய அரசுக்கும் கணக்கு காட்டி வருகிறது ஆந்திர ஆளும் வர்க்கம். சமாதானம் ஏற்படின் இவ்வாய்ப்பு போய்விடும். பொன் முட்டையிடும் வாத்தை அறுக்க இவர்களுக்கு மனமில்லை.

மக்கள் விடுதலை போர்ப்படை என்பது ஆயுதம் தாங்கிய, தேச பிரிவினை தீவிரவாதிகள் என்று நினைத்தால், அந்நினைப்புடனே, அவர்களை பலப்பிரயோகத்தினால் அழித்துவிட முனைந்தால், மாநில அரசுக்கு எவ்வித பலனும் கிட்டப்போவதில்லை.

நிலமை மோசமடைந்தால், இந்திய இராணுவத்தை, அமைதிப்படை என்ற நாமகரணமிட்டு ஆந்திராவினுள்ளும் கட்டவிழ்த்துவிட மத்திய அரசும் தயாராய் இருக்கலாம்.

ஆனால் இவ்வமைப்பினரை, ஒரு சில நூறு உறுப்பினர்களை கொண்ட இந்த அமைப்பை ஒழிப்பதன் மூலம் ஏதேனும் நிரந்தர தீர்வு எட்டப்படுமா? என்றால் முடியாது என்றே தோன்றுகிறது.

இவர்களின் போராட்டத்திற்கான வேர் என்னவோ அது களையப்பட வேண்டும்.

நிலமற்ற ஏழை விவசாய கூலிகள், கீழ்சாதியில் பிறந்த ஒரே காரணத்தால், நிலமற்றவனாகவும், சொற்பக்காசை கடனாக பெற்று, தன் வாழ்நாள் உழைப்பை பறிகொடுப்பவனாகவும் வைத்திருக்கும் குமுகாய அமைப்பு மாற்றப்பட வேண்டும்.

இல்லாவிடில், இத்தகைய ஆயுத போராடக்குழுக்கள் மேலும் மேலும் வலுப்பெறுவதை தடுக்க முடியாது.

தலைமுறைகளை ஏழைகளாக வைத்திருக்கும் சதி எப்போதும் வென்றிருக்கலாம், இதுவரை.

ஒரு தலை முறையாவது, கோழையாயில்லாமல், நிமிர்ந்து நின்று போராடுவதும் விதியாகும்.

Rate this post at