Get Nandalaalaa atom feed here!

Wednesday, April 27, 2005

புட்டபர்த்தி சாய்பாபா கைது?

தலைப்பு செய்தியாக எட்டு காலத்தில் இருந்த சாமியார் கைது மேட்டர், எல்லா அந்தஸ்தையும் இழந்து எட்டாம் பக்கத்தில் துணுக்கு செய்தியாகி போனதால் புலம்புகிறார் பத்திரிக்கையில் தினசரி திருமேனியை தரிசித்து பரவசிக்கும் பரம்பறை பக்தர் ஒருவர்.

கைது செய்த போது வந்த வெளி நாட்டு டீவியில் சிரித்தது தெய்வாம்சமாய் இருந்ததாக சொன்ன அயல் நாட்டு வசி பக்தையை மனதில் இருத்தி, தெய்வீக சிரிப்பை முகத்தில் தேக்கி, டீவி கேமராக்களை தேடியிருக்கிறார், கை நாட்டு போட காவல் நிலையம் சென்ற துறவி. அங்கே இருந்ததோ ஒரே ஒரு நிருபர் மட்டும் தான். அவரும் வந்தது சாராய கேஸ் செய்தி சேகரிக்க என்றறிந்த போது பக்கத்திலிருப்பவரிடம் சொன்னாராம் "ஹும், கலி முத்திடுத்து" என்று தேவபாஷையில். (யாருடையன்னு அவரும் கேக்கலியாம், யாருடையன்னு இவரும் சொல்லலியாம்.)

இப்போதெல்லாம் ஜெயேந்திரர் படத்தை அட்டையில் போட்டாலோ, கவர் ஸ்டோரினாலோ பத்திரிக்கை விற்பனை குறைகிறதாம், புலம்புகிறார் ஒரு முன்னனி புலனாய்வு பத்திரிக்கையின் விற்பனை மேலாளர்.

வேறு ஏதாவது புது விவகாரம் நாட்டில் வெடித்தால் தான் பத்திரிக்கை வியாபாரம் பெருகும் என கூறுகிறார் நாட்டுப்பற்றுடைய மற்றொரு பரபரப்பு பத்திரிக்கை இணை ஆசிரியர்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பதை புலனாய்ந்து பணம் பார்த்த பத்திரிக்கைகளுக்கு வாய்ப்பே தராமல் இன்ன தேதியில் இப்படி வருவேன் என வெளிப்படையாய் சொன்ன விஜய்காந்த் மேலும் இவர்களுக்கு ஒரு வருத்தம் தான்.

எதனால் இப்படி என சிந்தித்து கொண்டிருந்த போது அச்சமயத்தில் அங்கே வந்தார் நண்பர் ஒருவர். அவர் முன்பு சினிமா நிருபராக வடபழனியை சுற்றிக்கொண்டு இருந்தவர். தற்போது தமிழகத்தின் நாடித்துடிக்கும் புலனாய்வு பத்திரிக்கை ஒன்றில் துணை ஆசிரியராக உயர்ந்திருக்கிறார்.

அவரிடம் இது பற்றி கேட்டேன். அவர் (பழைய நினைப்பிலேயே) கூறுகிறார்:

நம்ம தமிழ் சினிமால எப்படி கதை டிரெண்ட் முக்கியமோ அப்படித்தான் பத்திரிக்கைகளின் செய்திக்கும்.

ஒரு படம் நல்லா ஒடினா ஐம்பது படம் அதே கதையோட வரும். அதுல காப்பி ரைட் சண்டையும் கூடவே வரும். சில சண்டை 12 வருஷம் கழிச்சும் வரும். எல்லாம் சுடற நேரத்தை பொறுத்தது.

இப்போ விஷயத்துக்கு வரேன். பத்திரிக்கைய தியேட்டர்னு வெச்சுகிட்டா, இந்த மேட்டர், விவகாரம்லாம் தான் சினிமா.

இந்த சாமியார் டிரெண்டை ஆரம்பிச்சு வச்சது பிரேமானாந்தா தான்னு எல்லாரும் நினைக்கிறாங்க. அது தப்பு. அதுக்கும் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே மெய்வழிச்சாலை வந்தது. அதுதான் டிரெண்ட் செட்டர். இப்போ அது மக்களுக்கு மறந்திடுச்சு.

நீண்ட இடவெளிக்கு பின் பிரேமானந்தா புண்ணியத்தில் மறுபடியும் ஆரம்பித்தது இது டிரெண்டாக அமைய காரணம் அந்த படம் ஒரு சூப்பர் ஹிட்டானதுதான்.

அப்புறமா வந்தது கல்கி பகவானின் சஸ்பென்ஸ் படம், யாகவா முனிவர் காக்கா குருவி கிராபிகஸ் படம், சிவசங்கர் பாபா கவர்ச்சி குத்து டான்ஸ் படம், குட்டி சாமியாரின் மழலை மகாத்மியம், நடு ரோட்டில் மதுர இளைய மடம், கொலை முயற்சியில் இளைய மடம் - கடும் சிறை இப்படி இதெல்லாம் சுமாரா ஓடிச்சு, அதே சமயம் கையையும் கடிக்கல.

அடுத்து வந்த சதுர்வேதி சாமியாரின் காம சதிராட்டம் படம் நல்லா போயிருக்க வேண்டியது, ஆனா அடுத்த படம் உடனே ரிலீஸ் ஆக இதை தியேட்டரை (முதல் பக்கத்தை) விட்டு தூக்கிட்டாங்க.

அந்த அடுத்த படம் தான் எதிர்பாராத அதிரடி ரிலீஸ் சங்கர மட சாமியார்களின் காம லீலை கம் கிரைம் காமெடி. ரொம்ப வருஷமா எல்லாரும் எதிர்பார்த்தது தான். அதனாலெயே நல்ல ஓபனிங். உலகம் முழுக்க (லோக்கல் கேபிள் முதல் BBC,CNN, இணையதளம் வரை ) பரபரப்பு ரிலீஸ்.

"மட சாமியார்களின் காம லீலை கம் கிரைம் காமெடி" படம் எல்லாம் கலந்து கட்டிய சூப்பர் தெலுகு மசாலா போல இருந்திச்சு. இது சூப்பர் டூப்பர் ஹிட். எல்லா பழைய ரெக்கார்டும் பிரேக் பண்ணின படம் இது. இதுக்கப்புறம் இந்த சாமியார் டிரண்ட்ல இன்னொரு படம் மக்களிடம் எடுபடுமான்னு தெரியவில்லை.

காரணம் ஒரு 100 திரைப்படத்தின் அத்தனை அம்சங்களையும் தன்னுள் அடக்கிய படம் தான் மட சாமியார்களின் காம லீலை கம் கிரைம் காமெடி.

இப்போ அந்த படத்தை பத்தி விவரமா சொல்றேன். (ஆகா நம்ம பிளாக்குலேயும் ஒரு திரை விமர்சனம் ;)

படத்துல காமெடிக்கு ஜெயேந்திரரின் பேச்சுக்கள், ஆவேசத்துக்கு இராம கோபாலன், தொகாடியா, சிங்கால், பரிதாபத்துக்கு தமிழக பா.ஜ.க, பிசினுக்கு பந்த் - போராட்ட அறிவிப்புகள், கவர்ச்சிக்கு திருவரங்கம் உஷா, அனுராதா ரமணன், விவாகரத்து புகழ் சொர்ணமால்யா.

அடிதடி ஆக்ஷனுக்கு அப்பு, கதிரவன் கோஷ்டி, பிளாஸ் பேக் என்ட்ரிக்கு ரவி சுப்ரமணியன், குணசித்திர நடிப்புக்கு ரகு, மேம்பட்ட நடிப்புக்கு விஜயேந்திரர் என சூப்பர் காம்பினேசன்.

இதிலேயே, கவர்ச்சியாக அறிமுகமான உஷா, கண்ணாம்பாள் ரேஞ்சுக்கு கண்ணீர் உஷாவாகி பார்வையாளர்களை உருகவைத்தது எதிர்பாரா திருப்பம்.

மேலும் மசாலா கூட்ட ஸயன்ஸ் பிக்ஸன் வேறு. அது "மட அவதாரங்களின் மிஸ்ஸிங் லிங்க்". செல் பேசியிலேயே பேசி கான்சர் டிரீட்மென்ட் கொடுத்து அசத்தினார் ஜெயேந்திரர்.

"ஜெயிலுக்கு அனுப்பாதே, நீதிபதி குடியிருப்பிலேயே வை" என்று உருகும் ஐகோர்ட்டு நீதிபதி, "நாங்களும் மனிதர்கள் தான்" என கண்ணீர் சொரிய பேசிய இன்னொரு ஐகோர்ட்டு, பாஞ்சாலியும் ஜெயேந்திரரும் ஒன்று என்று செப்பிய ஐதராபாத் கோர்ட்டு, என வித்தியாசமான பல கோர்ட்டு சீன்கள்.

கடைசி வரை வந்து கவர்ச்சி விருந்து படைப்பார் என எதிர்பார்த்த சொர்ணமால்யா "சாரி, எனக்கு கல்யாணமாயிடுச்சு" னு திடீர் என மறைந்தது கவர்ச்சி ரசிகர்களுக்கு வருத்தம் தான். இந்த இடத்தில் தான் இயக்குனர் ப்ரேம்குமார் தடுக்கிவிட்டார்.

நாட்டுப்புற கலைக்கு வீரமணி கோஷ்டியின் ஆனந்த கூத்து அமர்க்களம்மாக அமைந்து விட்டது.

கருணாநிதி வேறு வித்தை காட்டி குட்டி கரணம் அடித்தது அனைவராலும் ரசிக்கப்பட்டது.

"உலக திரைப்பட வரலற்றில் முதல் முறையாக" சூப்பர் கிராபிக்ஸில் சுனாமி வரவழைத்து தனக்கு ஆதரவு தராத மக்களை கொல்லுவதாக வரும் காட்சிதான் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதில் வெளி நாட்டு மக்களுக்கு வேறு பாதிப்பு. (இது வெளிநாட்டில் படம்பிடிக்க வேண்டிய வியாபார நிர்பந்தத்தால் தாய்லாந்து, இந்தோனேசியா, இலங்கை மக்களையும் கொல்லும் படி காட்சி அமைந்திருக்கலாம். அதிக பாதிப்பு தமிழர்களுக்கு என்பதால்) "அவர்கள் பாவிகள்" என்று ரஜினி வாய்ஸ் விட்டதால், தமிழக மக்கள் மரபு படி அதை அப்படியே ஏற்றுக்கொண்டு, ஜெயேந்திரர் கோஷ்டி சொன்னது போல் விளக்கேத்தி கும்பிடறது தான் படத்துல கொஞ்சம் இழுவை.

மொத்தத்துல ஜெயேந்திரர் என்ற ஆளுமையை முழுமையாக புரிந்து, அதற்கேற்ப திரைக்கதை எழுதியுள்ளார் ஜெயலலிதா.

அவரே ஒரு காட்சியில் டெல்லி பத்திரிக்கையாளர் மத்தியில் வருத்தம் தெரிவித்து பேசுவது போல் ஒரு காட்சியையும் சேர்த்து விட்டது திரிக்கதையின் தனி சிறப்பு.

இப்படியாக இது ஒரு மக்களுக்கான படம். தந்திருப்பது ஆன்மீகத்துல அடிய தொட்ட ஜெயேந்திரர்.

இதை ரசிக்கும் தமிழக மக்களை "இப்படி ஒரு இழிவான ரசனையா" ன்னு கீழ்தரமா பேசினாலோ, எழுதினாலோ அதை வரலாறு "எலீட் வயலன்ஸ"னு பதிவு செய்யும். இதுல வெளியிலிருந்து தமிழ் நாட்டு மக்களை குறை சொன்னா அதே வரலாறு இதை அவர்களின் பாசிசமா தான் பார்க்கும். இதுல தமிழ்ன் வேற ஆளுன்னுலாம் பார்க்க முடியாது என ஆவேசப்பட்டார் நண்பர்.

"முடிவா இதுதான் இந்த டிரெண்ட்ல கடைசி படம். இனிமே சாமியார் படம்னாலெ பாபா ரேஞ்சுக்கு படுத்துரும்.

இதே தான் பத்திரிக்கைக்கும்", என்றும் முடித்தார்.

என்னுடன் பேசியதில் இழந்ததை ஈடுகட்ட, நண்பரை அண்ணா சிலை அருகில் உள்ள டாஸ்மாக்கில் இறக்கிவிட்டு, அரசினர் தோட்டத்தில் உள்ள பிரஸ் கிளப்பில் நுழைந்தேன்.

அங்கே, எல்லோராலும் ம/மிதிக்கப்படும் ஒரு மூத்த பத்திரிக்கையாளர், இவர் பல பத்திரிக்கைகளிலும் ஆசிரியராய் பணியாற்றி, பின்னர் அவர்களாலேயே விரட்டியடிக்கப் பட்டவர்.

அவரிடம் இந்த சாமியார்கள் விவகாரம் முக்கியத்துவம் இழந்து வருவது பற்றியும், இப்போது மக்களின் சுவரசியம் குறைந்து விட்டது பற்றியும் கூறி, இனிமேல் இப்படிபட்ட சாமியார்கள் பற்றின செய்திகளின் எதிர்காலம் குறித்து கேட்டேன்.

அவர் சாமியார் விவகாரம் மதிப்பிழந்த மாதிரிதான் தெரியும். ஆனால் புதிசா வேற ஒன்னு, பழசை விட பெரிசா ஒன்னு - சுயம்பா - வந்தா அந்த சமயத்தில், அது தான் பத்திரிக்கையும் மக்களும் சுவாசிக்கும் விஷயமாகும் என்றார். இது ஏதோ நீர்க்குமிழி தத்துவம்னு லேசா புரிஞ்சாலும், புதிசா பெரிசான்னா என்னமாதிரி? என கேட்க அவர் சொன்னது கொட்டை எழுத்துக்களில் கீழே:

"18 வயது அழகிய இளைஞனை கற்பழித்து கொன்ற புட்டபர்த்தி சாய்பாபா கைது!"

Get Nandalaalaa atom feed here!

Tuesday, April 26, 2005

கடவுள் நிராகரித்த பாப்பரசர் பிரார்த்தனை

பெனடிக்ட் பதினாறு, பாப்பரசரானதுமே, ஆளாளுக்கு என்னென்னமோ எழுத ஆரம்பிச்சுட்டாங்க. பிளாக் திண்ணு கொட்ட போட்டவங்கள்ளேருந்து, நேத்து வந்த நந்தலாலா வரை எழுதியாச்சி. இனி என்ன மிச்சம்னு பார்த்தா, புதுசா ஒரு கதை இப்போ. அதக்கேளுங்க;

பாபர்சாருனா கடவுளோட ரெப்ரசன்டேடிவ் , அவ்ங்ககுள்ள ரொம்ப குளொஸ் கான்டீக்ட் அப்டினு நினைச்சுகினுருந்தா, நம்ம பேனட்டு கத வேற மாறி போவுது. புச்சா ஒரு மனுசனை கடவுளாக்க அல்லாரும் கூடசொல்லோ, நம்ம பேனட்டு அய்யா, அப்போ அவரு பேரு இன்னாமோ சிங்கர்பா, சரி அத்த வுடு, கடவுளான்ட ஒரு பெட்டிசன் போட்டுக்கீறாரு. அதுல பாபர்சாரு பதவின்றது கயுத்த வெட்டுற கில்லட்டினு, அத்தொட்டு எனக்கு வானா, என்னய உட்டுறுன்னு. அதுக்கு வேற ஆள, நல்லா எளசா புச்சா பாத்து புடிச்சுக்கோன்னும் சொல்லிப்பார்த்துருக்காரு. நான் எங்கினா போயி அமைதியா சொச்ச காலத்தை போக்கிடறேன், என்ன உட்டுரு உட்டுருன்னு மன்னாடிருக்காரு பாவம் மனுசன்.

அனாக்க கடவுள், இப்போ உலகம் கெட்டு பூடிச்சு, ஆம்பள ஆம்பளய கண்ணாலங்கட்டுறான், பொம்பளயும் பொம்பளயும் கூடி வாயுது, கண்ணாலம் கட்டாமலே குடித்தன நடத்துது, இத தனி மனுச உரிமன்னு வேற குரலுடுதுங்கோ நம்ம கஸின் சாத்தான் பார்ட்டிங்கோ, நம்ம பொலிடீக் ரெபரசன்ட் புஷ்ஷு வார இன்னும் நிறையா இடத்துல அமைதிய நில நாட்ட வேண்டிக்கீது, அத்தொட்டு ராக் மீசிக் கேட்டு குட்டிச்சுவரா போன உலக காப்பத்த நீ தாம்பா நம்ம சாய்ஸ் அப்டீனு அடிச்சு சொல்லிருக்காரு.

சொன்னது கடவுளாக கண்டி, கல்லு முல்லு காலுக்கு மெத்தைனு பாடிகினே, (இல்லேபா, அய்ப்ப சாமிக்கிலாம் மால பொடலபா) பதினாறாம் வார்டா, அடச்சே பதினாறாம் பேனட்டா ஆயிக்கீறாரு நம்ம சிங்கரு.

அதுக்கு இன்னா இப்போன்றியா? நம்ம பாயின்டு இதாம்பா. இந்த பாபர்சாரு வெச்ச மொத கோரிகையே கடவுளு ரிஜெக் பன்ன சொல்லோ, நமக்கு இன்னா வொர்ரினா, இந்த மனுசன், சாரிபா, இப்போ அவரு யாரு, ஆங் பாபாண்டவரு, அவரு கடவுலான்ட வெச்ச அடுத்த ரெக்விஸ்டு இன்னா தெர்மா? உலோகத்துல அமேதி வர்னும்னு. இப்போ கடவுளு இந்த ரெக்விஸ்டயும் ரிஜெக் பன்னுவாரோன்னு ஒரே பேஜாராக்கீதுபா. அம்புட்டுத்தான்.

போகசொல்லோ ஒரு பிளாஸ் மேட்டரு: நம்மோ பாபாண்டவர கண்டுக்க அவ்ரு பேட்டக்கார சனம்லாம் வந்துக்கிதுபா. அப்போ லேட் விசிட் குடுத்துருக்காரு பாபாண்டவ்ரு. பெரீய மனுசன்னா சொம்மாவா? ஒரு இது வானா அதான் அப்டினு பேட்ட சனம் சொம்மா இருக்க சொல்ல இவ்ரா எடுத்து உட்ருக்காரு. இன்னான்னு? நம்ம பேட்ட சனம்னாலே பங்சுவலு. அனாக்க நா இப்போ இட்லி பேட்டக்காரனா மாறிக்கினேன், அத்தொட்டு எனக்கு லேட் விசிட்டு பயக்கமா பூடிச்சுனுருக்காருபா. இதுல யென்னா அவரு பேட்ட சனம்னா உசத்தி இட்லி பேட்டனா இன்சல்டானு அப்டினு கேட்டு நல்லா 'பேட்ட வெறி பாபர்சாரு'ன்னு நாலு பிளாக் உடுங்கப்பா சொல்றென். அஆங்.

நேபாளத்திற்கு ஆயுதம்?

மாவோயிச கிளர்ச்சியை ஒடுக்க, நேபாளத்திற்கு ஆயுதம் வழங்க இந்தியா ஒப்புதல்?
நேபாள மன்னர் கியானேந்திரா, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இடையே 45 நிமிட நேர சந்திப்பு ஒன்று ஜகர்தாவில், சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. நேபாளத்தின் ஆயுத தேவையே இச்சந்திப்பில் முக்கியமாக இடம் பெற்றிருக்கும் என்பது தெளிவு.

கியானேந்திரா கடந்த பிப்ரவரி 1ல், நேபாள பாரளுமன்றத்தை கலைத்து, அவசர நிலையை பிரகடணப்படுத்தி, அரசின் முழு அதிகாரத்தையும் தன் வயப்படுத்தினார். செர் பகதூர் துயுபா பிரதமராக இருந்த நான்கு கட்சி கூட்டணி ஆட்சி, மாவோயிச கிளர்ச்சிக்காரர்களை அடக்க தவறியதாகவும், ஊழலில் ஈடுபட்டதாகவும் மன்னரால் குற்றஞ்சாட்டப்பட்டது. அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு வீட்டுச்சிறையும், பத்திரிக்கைகளுக்கு செய்தித்தணிக்கையும் விதிக்கப்பட்டது.

இது உலக நாடுகளின் கண்டனத்திற்கு உள்ளானது. நேபாளத்தின் மீது பொருளாதார, ஆயுத தடையும் விதிக்கப்பட்டது. இந்நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் அடங்கும்.

இதை தொடர்ந்து பிப்ரவரி 6ல், நேபாள தலைநகர் காத்மாண்டு வில், நடக்கவிருந்த தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவிருந்த மாநாடு(SAARC), இந்தியா பங்கேற்க மறுத்து விட்டதன் பின்னணியில், ரத்து செய்யப்பட்டது.

இப்போதைய சந்திப்பு, பிப்-1 ஆட்சிக்கலைப்புக்கு பின், இந்தியா நேபாளம் இடையேயான, முதல் உச்ச நிலை சந்திப்பு என்ற முக்கியத்துவத்தை பெறுகிறது.

இச்சந்திப்புக்கு பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மன்மோகன், நேபாளத்தில் பாராளுமன்ற ஜனநாயகத்தை மறு நிர்மானம் செய்ய மன்னரிடம் வலியுறுத்தியதாக கூறினார். மன்னர் ஆயுத உதவி கோரியது பற்றிய கேள்விக்கு, அக்கோரிககையை தகுந்த முறையில் பரிசீலிக்க தான் உறுதி அளித்திருப்பதாக மட்டும் சொன்னார். மேல் விவரங்களை அளிக்கவில்லை.

ஆனால் கியானேந்திரா, இந்தியா ஆயுதம் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது என்பது போல் கூறியுள்ளார். இதை ஒப்புக்கொண்டோ மறுத்தோ இந்திய தரப்பு இதுவரை எதுவும் சொல்லவில்லை.

இந்து நாளிதழ், பிப்-1 க்கு பிறகு நிறுத்தப்பட்ட ஆயுத வழங்கள் தொடர்ச்சியிலிருந்து ஒரு தவணை விரைவில் அனுப்பப்படும் என்று, இராணுவ உயரதிகாரி ஒருவர் - அவர் பெயரை குறிப்பிடவில்லை - கூறியதாக ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

தெளிவில்லாத இந்நிலையில், இந்தியாவின் இடது சாரி கட்சிகள், நேபாளத்திற்கு இந்தியா ஆயுதம் வழங்க கூடது என எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மன்மோகன் இடது சாரிகளின் ஆதரவுடன் ஆட்சி நடத்திவரும் நிலையில் அவர்களின் எதிர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

எதிர்கட்சி தரப்பில் பா.ஜ.க விடமிருந்து எந்த கருத்தும் இதுவரை வெளிவரவில்லை. எனினும், உலகின் ஒரே இந்து நாடு என்ற வகையில், அந்நாட்டு அரசுடனும், அரச குடும்பத்துடனும் மிகுந்த ஈடுபாடுடைய சங்க பரிவாரங்கள், இந்தியா ஆயுதம் வழங்குவதை ஆதரிக்கலாம். அல்லது தொடர்ந்து மவுனம் காக்கலாம். இடது சாரி சிந்தனையை அடியோடு வெறுக்கும் அவர்களின் இயல்பின் அடிப்படையிலும் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
[விஷ்வ ஹிந்து பரிஷத் கியானேந்திராவின் செயலுக்கு ஆதரவே தெரிவித்து வருகிறது. ப.ஜ.க வருத்தம் தெரிவித்ததே அல்லாமல் மற்ற கட்சிகளை போல் கண்டனம் எதையும் வெளிப்படுத்தவில்லை.]

இந்தியா நேபாளத்தின் மீது விதித்துள்ள தடை அந்நாட்டை மேலும் சீரழிவை நோக்கியே இட்டுச்செல்லும். இந்தியாவை அதிகம் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் பூலோக ரீதியில் நேபாளத்திற்கு இருக்கிறது. இந்தியாவிற்கும், நேபாளம் வேறு நாட்டுடன், குறிப்பாக சீனாவுடன் ஆயுத ஒப்பந்தத்தில் ஈடுபடுவதை தடுக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.

நேபாளத்தில் மன்னர் ஆட்சியை நீக்க போராடும் மாவோயிச கிளர்ச்சிக்காரர்களுக்கு இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கி வரும் கிளர்ச்சிக்காரர்களுடன் தொடர்புள்ளது. எனவே, நேபாளத்தில் மாவோயிச இயக்கம் பலம் பெறுவது, இந்தியாவுக்குள்ளும் தாக்கம் ஏற்படுத்தும். இந்த கவலையின் அடிப்படையில், நேபாள இராணுவத்திற்கு ஆயுதம் வழங்க இந்தியா நிர்பந்திக்கப்பட்டுள்ளது.

ஆனால், நேபாள மாவோயிச கிளர்ச்சியை இராணுவ பலம் கொண்டு அடக்க முடியாது என்பதும், அப்படி முயல்வது மக்களுக்கும் நேபாள அரசுக்குமான இடைவெளியை மேலும் அதிகரிக்கும் என்பதே எதார்த்தமான உண்மை.

கிளர்ச்சியாளர்களுடன் பேச்சு வார்த்தை தொடங்க, கியானேந்திராவுக்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் தருவதே, ஆயுதம் வழங்குவதை விட முக்கியமானது.

நேபாள பிரச்சினைக்கு, இராணுவ தீர்வு சாத்தியமில்லாத ஒன்று. இந்த உண்மையை நேபாள அரசு உணர வேண்டும்.

தமிழக இடைத் தேர்தல்: ஒரு பார்வை.

2006 ல் நடைபெறவுள்ள சட்டசபை பொது தேர்தலுக்காண முன்னோட்டமாகவே இந்த இடைத் தேர்தலை அரசியல் கட்சிகள் அணுகியுள்ளன.

ஆளுங்கட்சியான அ.தி.மு.க தனது 24 அமைச்சர்களை, தொகுதிக்கு 12 பேர் என, 2 தொகுதிக்கும் பொறுப்பாக நியமித்துள்ளது.

எதிர்கட்சியான தி.மு.க இத்தேர்தல் முடிவுகள் கூட்டணியின் பலத்தை நிரூபிப்பதுடன், கூட்டணி கட்சிகளிடையேயான ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பு என்றும் கூறியுள்ளார். "ஆட்சி மன்றமெனும் பூங்காவிற்கு செல்லும் ஒற்றையடி பாதை" என கூறியுள்ள கருணாநிதி, தி.மு.க வின் 5 மத்திய அமைச்சர்களை இத்தொகுதிகளில் தேர்தல் பணிகளுக்கு நியமித்திருக்கிறார்.

வேட்பாளர் தேர்வு:
சென்ற நாடாளுமன்ற தேர்தலில், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் புது முகங்களை அறிமுகம் செய்து, கட்சிக்காரர்களுக்கு அதிர்ச்சியும், ஏனையோருக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தினார் ஜெயலலிதா. ஆனால் இம்முறை, இடைத்தேர்தலில் இறந்தவர் வாரிசை நிறுத்துவது என்ற அரசியல் மரபை அப்பட்டமாக கடைபிடித்துள்ளார்.

இது அனுதாப வாக்கை பெற்று தருவதுடன், உட்கட்சி அதிருப்தியையும் தவிர்க்கும். இது ஜெயலலிதா இந்த முறை எவ்வித சோதனை முயற்சியிலும் இறங்காமல், தனது வழக்கமான குறுட்டு தன்னம்பிக்கையையும் தவிர்த்து வெற்றி ஒன்றையே குறி வைத்து தேர்தலை எதிர் கொள்வது தெளிவாகிறது.

தி.மு.க தரப்பில் வெளியில் அதிகம் தெரியாத ஆனால் உள்ளூரில் கட்சியினருக்கு அறிமுகமான, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகனான பி.எம்.குமார் என்பவரை காஞ்சிபுரத்தில் வெட்பாளராக நிறுத்தியுள்ளது.

கும்மிடிப்பூண்டியில் நிறுத்தப்பட்டுள்ள பி.வெங்கடாசலபதி என்ற வழ்க்கறிஞர் தேர்வு பற்றி தி.மு.க வினுள் அதிருப்தி நிலவுகிறது. இது ஏற்கனவே இரண்டு அணியாக இருந்த மாவட்ட தி.மு.க வில், இப்போது மூன்றாவதாக முன்னாள் அமைச்சர் க. சுந்தரம் அணியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனாலும், சில லகரங்களின் கை மாற்றலுக்கு பின் மற்ற அணியினர் சமாதானமானதாக தெரிகிறது.

சென்ற ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 100% வெற்றி பெற்ற ஆறு கட்சிகளின் கூட்டணி இப்போதும் தொடர்வதும், கட்சியினரின் உற்சாகமும், தி.மு.க அணியின் பலமெனலாம். ஆனால் சென்ற தேர்தலில் இருந்த அ.தி.மு.க விற்கு எதிரான, தி.மு.க கூட்டணிக்கு சாதகமான பல விடயங்கள் இத்தேர்தலில் இல்லை. உதாரணமாக அரசு ஊழியர்களின் அதிருப்தி கணிசமாக குறைந்திருப்பதாகவே தெரிகிறது.

மதமாற்ற தடை சட்டம், வழிபாட்டிடங்களில் உயிர் பலி தடை போன்றவைகளை ஜெயலலிதா அரசு திரும்ப பெற்றதன் மூலம், சென்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியின் எதிர் பிரச்சாரத்திற்கு இருந்த வாய்ப்புகளில் இரண்டு இப்போது குறைந்துள்ளது.

வீரப்பன் கொல்லப்பட்டது அ.தி.மு.க விற்கு, வன்னியர்கள் அதிகம் வாழும் தொகுதியில் கைகொடுக்குமா என்றும் தெரியவில்லை. அதை ஒரு எதிர் பிரச்சாரமாக தி.மு.க கூட்டணி மேற்கொள்ளவே வாய்ப்புள்ளது.

தமிழக அரசின் சுனாமி நிவாரண செயல்பாடு குறித்த அதிருப்தி, தமிழக கடலோர தொகுதிகளில் பலமாக இருக்கிறது. ஆனால் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் கஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் இல்லை என்பது அ.தி.மு.க வுக்கு சாதகமான விடயம்.

அ.தி.மு.க சட்டசபையை நடத்தும் விதம் குறித்து எதிர்கட்சிகள் அதிக அளவில் பேசுகின்ற போதும் அது வாக்காளர்களை கவனத்தை பெருமா என்பதை பார்க்க வேண்டும்.

காவல் துறையின் அராஜகம், காவல் துறையின் மூலம் ஆட்சி நடத்துகிறார் ஜெயலலிதா என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

கும்மிடிப்பூண்டி யின் அ.தி.மு.க சட்டசபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சுதர்சனம், கொலை செய்யப்பட்டே இறந்து, இடைத்தேர்தலுக்கு வழி வகுத்தது, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என பிரச்சாரம் செய்ய எதிர் கட்சியினர் ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தக்கூடும்.

காஞ்சிபுரத்திலும், சங்கராமன் கொல்லப்பட்டதும், பின்னர் உத்தராஞ்சல் மட நிர்வாகி சிரீநிவாஸ் கொல்லப்பட்டதும் எதிர்க்கட்சியினரின் "ஜெயலலிதா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது"
என்ற வாதத்துக்கு வலு சேர்ப்பவை.

சென்ற நாடாளுமன்ற தேர்தலில், தன் ஆட்சியின் சாதனைகளாக தான் நினைத்ததையே மக்களின் முன் வைத்த ஜெயலலிதாவுக்கு, "12 அமைச்சர்கள் மத்தியிலிருந்தும் தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை" என்ற புதிய குற்றச்சாட்டை வைப்பதற்கு வாய்ப்பேற்பட்டுள்ளது. கூடுதலாக மக்களின் குறைகள் அனைத்திற்கும் மத்திய அரசுதான் காரணம் என்று, தி.மு.க கூட்டணி மேல் பழி சுமத்தவும் ஒரு வாய்ப்புள்ளது.

ஆக, சென்ற நாடாளுமற தேர்தலில் ஈட்டிய வெற்றியை தக்க வைத்து, வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திக்க தி.மு.க அணியும், முந்தய தோல்வியை பழங்கதையாக்கி, இந்த இடைதேர்தலில் வெற்றி பெற்று, புது உத்வேகத்துடன் சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க வும் முழு உத்வேகத்துடன் இடைத் தேர்தலை எதிர் கொள்கின்றன.

இந்த இடைத் தேர்தல், கடந்த நாடளுமன்ற தேர்தல் போல் ஒரு தரப்பிற்கு மட்டும் சாதகமாக இல்லாமல், இரண்டு தரப்பிற்குமே சமமான நிலை உள்ளதாகவே தெரிகிறது.

Get Nandalaalaa atom feed here!

Sunday, April 24, 2005

ஜப்பானின் மன்னிப்பு கோரல் - முரண்பாடு.

Image hosted by TinyPic.comமோசமாகும் அண்டை நாட்டு உறவுகள் - ஜப்பான்.



ஜப்பான் பிரதமர் கொய்ஜுமி ஜப்பானின் போர்க்கால கொடூரங்களுக்காக மறுபடியும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுள்ளார். ஜகர்தா வில் கூடிய 120 நாடுகளின் ஆசிய ஆப்ரிக்க கூட்டமைப்பு மாநாட்டில் நேற்று (வெள்ளி, 22-ஏப்) உரை நிகழ்த்தும் போது இதைக்குறிப்பிட்டார்.

ஆசிய ஆப்ரிக்க கூட்டமைப்பு: ஏப் 18 : ஏப் 24, 1955ல் இந்தோனேசிய பன்டுங் நகரில் கூடியது ஆசிய ஆப்ரிக்க நாடுகளின் கூட்டமைப்பின் முதல் மாநாடு. நேரு ஆசியா ஆப்ரிக்க கூட்டமைப்பின் முதல்மாநாட்டில்
அவ்வகையில் இப்போது நடப்பது பொன் விழா ஆண்டு கூட்டம். அன்று அங்கே கூடியது மூன்றாம் உலக நாடுகள் எனப்படும் அமெரிக்க சோவியத் அணிகளில் இல்லாத நாடுகளின் தலைவர்கள். அப்போதைய மாநாட்டில் வல்லரசுகளுக்கு இணையாக வளரும் நாடுகளின் உரிமை காப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது. (பனிப்போர் கால) சோவியத், மேற்குலக ஆதிக்கத்தை ஒரு சேர நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உலக அமைதி மற்றும் அனைத்து நடுகளுக்கிடையேயான் ஒத்துழைப்பு முன்னிறுத்தப்பட்டது. சீனா குறித்த ஐயம் ஏனைய நாடுகளுக்கு தீர்ந்தும், சீனாவுக்கு பிற நாடுகளுடனான புது உறவு ஏற்பட்டதும் அப்போதிருந்து தான். அன்றைய இந்திய பிரதமர் நேரு இத்தகைய ஒருங்கினைப்புக்கு மிக முக்கிய பங்காற்றினார். அவரின் பஞ்ச சில கொள்கை (உலக அரங்கில்) இம்மாநாட்டில் தான் முதலில் அரங்கேறியது. (இதற்கு முன்பே இக்கொள்கையை சீனா ஏற்றுக்கொண்டு, இந்தியாவுடன் கைச்சாத்திட்டது, ஏப் 1954) முதலில் சீனாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பின்னர் உலகளவில் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளுக்கு அடிப்படை திட்டம் என்ற பெருமையை பெற்றது. இம்மாநாட்டின் தொடர்ச்சியாகவே 1961 ல் அணி சேரா நாடுகளின் கூட்டமைப்பு NAM(Non Align Movement). தொடங்கப்பட்டது. சோவியத் வீழ்ச்சிக்கு பிறகு NAM தேவை அற்றுப்போக, ஆசிய ஆப்ரிக்க நாடுகளுக்கான அமைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஆக NAM உருவான பின் அரசியல் முக்கியத்துவம் இழ்ந்த இவ்வமைப்பு மீண்டும் இப்போதைய காலகட்டத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.


கொய்ஜுமி "ஜப்பான் காலனியாதிக்கத்தின் மூலமாக கடும் கொடுமையினையும், அந்நாடுகளின் மக்களுக்கு மாற்றமுடியா இடர்பாட்டினையும் ஏற்படுத்தியது" என்று வருந்தியுள்ளார். "இதயத்தின் ஆழ்த்திலிருந்து" மன்னிப்பு கேட்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இம்மாநாட்டில் உரையாற்றிய கொய்ஜுமி, "ஜப்பானுக்கு எதிரான எண்ணம் (சீனாவுக்கு) உள்ளபோதும் நட்புறவே முக்கியம்" என்று சீனாவுக்கு தெரிவித்துள்ளார். சீன பிரதமருடன் பேச்சு வார்த்தை நடத்தவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

[கடைசி செய்தி: ஜப்பான் பிரதமர் கொய்ஜுமி, சீன அதிபர் ஹு ஜின்தவ் சந்திப்பு இன்று நடந்துள்ளது. முடிவில் இரு பக்க கோரிக்கைகளும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளன. வேறு தீர்வு எதுவும் ஏட்டப்பட்டதாக தெரியவில்லை. ஜப்பானை பொருத்தமட்டில் அது திறந்த மனத்துடனே இருப்பதாக நிருவ மேலும் ஒரு அத்தாட்சி. அவ்வகையில் ஜப்பானுக்கு இது அரசியல் ரீதியிலான வெற்றி.]

ஐநா பாதுகாப்பு சபை சீர்திருத்தம் மற்றும் விரிவாக்கம், ஆப்ரிக்க நாடுகளுக்கான ஜப்பானின் நிதி உதவியை 1.6 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்த்துதல் ஆகியன அவர் பேச்சின் மற்ற முக்கிய அங்கமாகும்.


இப்படி ஒரு ஜப்பானிய பிரதமர் பேசுவது இது முதன் முறை அல்ல. இதற்கு முன்பே 17 முறை ஜப்பான் மன்னிப்பு கோரியுள்ளது. இது 18 வது முறை, அவ்வளவே. ஆனால் இப்போதய கால சூழல் மிக முக்கியமானது. ஒன்று ஜப்பான் மற்றும் சீன கொரிய நாடுகளுக்கிடையேயான தற்போதய சச்சரவு நிலை. இரண்டு ஜப்பானின் ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர் இருக்கைக்கான உரிமை கோரல். (அதற்கான தடை அகற்றல்)

இத்தகைய அழுத்தமான, நிச்சயம் ஆறுதல் அளிக்கக்கூடிய வார்த்தைகளை அனைத்து பாதிக்கப்பட்ட நாடுகளும் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் மாறாக ஜப்பானின் உள் நோக்கம் குறித்த ஐயப்பாட்டினையே அவை இன்னமும் கொண்டிருக்கின்றன.

சீன வெளி விவகார அமைச்சின் பேச்சாளர் கொங் குவன் "வருத்தம் தெரிவித்திருப்பதை வரவேற்கிறோம். ஆனால் அது செயலில் இருக்க வேண்டும்" என்கிறார். இதையே சீனாவின் மன நிலையாகவும் எடுத்துக்கொள்ளலாம். அவர் சொல்லும் செயல் என்பது பாட புத்தகம், யஸுகுனி ஆலயம் சம்பந்தப்பட்டது என்பதை அனைவரும் யூகிக்கலாம். இது தவிர்த்த இவ்விரு நாட்டுக்கிடையேயான எல்லை பிரச்சனை, தய்வன் ஆகியவை இரு தரப்புமே இணங்கி ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டிய, இதில் சமபந்தப்படாத தனி விஷயம். (எல்லை பிரச்சினை, தய்வன் பற்றி தனியே எழுதவேண்டும்)

முரண்பாடு:
ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தி, கடந்த காலத்திய தவறுகளுக்காக கொய்ஜுமி மன்னிப்பு கேட்ட அதே நாளில், 50 ஜப்பானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், பருவகால விழாவை முன்னிட்டு யஸுகுனி ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளனர். (119 உறுப்பினர்கள் என்றும், ஜப்பானிய உள்துறை அமைச்சரும் அடக்கம் என்று இதுவரை ஊர்ஜிதமாகாத தகவல்)

இப்படியான முரண்பட்ட செயல் மூலம் ஜப்பான் குறிப்புணர்த்துவது என்ன?

ஜப்பான், தனது முன்னாள் பிரதமரை,(ஹிடொகி டொஜொ) போர்க்கொடுமைகள் புரிந்து, பின்னாளில் போர்க்குற்றவாளியாக மரண தண்டனை பெற்ற ஒருவரை, நாட்டை காக்கும் வீரன் என தொடர்ந்து வழிபடும்.

தானே கற்பித்துக்கொண்ட இனப்பெருமையினால், தான் மனித இனத்திற்கு இழைத்த கொடுமைகளை, ஜப்பானிய வருங்கால சந்ததியினர் அறிந்து, அவர்கள் குற்ற உணர்வு கொள்வதை தவிர்க்க, அந்நிகழ்வுகள் குறித்த உண்மைகளை படிப்படியாக அவர்களிடமிருந்து மறைக்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளும்.

அதன் பின்னர் ஜப்பானிய சந்ததியினர் ஹிடொகி டொஜொ வை கடவுளாகவும், அவர் மற்ற இனங்களின் மேல் நடத்திய வன் கொடுமைகளை தேச நன்மைக்கானது என்றும் ஏற்றுக்கொள்ள வைக்கவேண்டும்.

[அந்த சூழலில் உருவாகும் வருங்கால ஜப்பானிய சமூகம் எப்படிப்பட்ட பாதிப்பை உலகின் மற்றவர்களுக்கு ஏற்படுத்தும் எனபது யூகத்திற்குறியதே]

ஆனல் மற்ற நாடுகளின் எதிர்ப்பை சந்திக்க வரும் போதுமட்டும், ஜப்பான் 18 முறை உருக்கமாக மன்னிப்பு கோரும். (கொய்ஜுமி யே இதுவரை இரண்டு முறை மன்னிப்பு கேட்டுள்ளார்! ஆனால் அவரின் யஸுகுனி ஆலய வழிபாட்டை தவறென்றோ, இனி அங்கே போகாதிருப்பது குறித்தோ இதுவரை அவர் எதுவும் சொல்லவில்லை. எனவே அவர் தொடர்ந்து யஸுகுனி ஆலயத்தில் - ஹிடொகி டொஜொ விடம் - உலக அமைதிக்காக பிரார்த்திக்க செல்வது தொடரக்கூடும்)


கொய்ஜுமியின் இப்போதைய பேச்சின் உண்மை நோக்கம், ஜப்பான் ஐநா பாதுகாப்பு சபை உறுப்பினர் ஆவது மட்டுமே. அதற்கான தடைகள் ஏற்படாமல் இருக்க வேண்டியது மிக முக்கியம். எனவே, சீனாவையும் கொரியாவையும் சமாதானப்படுத்திவிட்டு, தன் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளவே இந்த பேச்சளவிலான முயற்சிகள்.


ஜப்பானின் இச்செயல்களை ஒப்பு நோக்க வேண்டுமானால் அது ஒரு கற்பனையின் மூலம் சாத்தியப்படலாம். உதாரணமாக ஜெர்மன் ஹிட்லர் கால தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டது அனைவரும் அறிந்த விடயம். ஒரு வேலை ஜெர்மன் ஹிட்லரை தனது தேசத்தின் நிர்மான கர்த்தாவாக அல்லது தன் நாட்டுக்குழைத்த ராணுவ வீரர்கள் வரிசையி கவுரப்படுத்தினால் அல்லது யஸுகுனி போல ஓர் ஆலயத்தை நிர்மானித்து அதில் ஹிட்லரை சேர்த்தால், இவற்றில் ஏதாவது ஒன்று நடந்தால் எதிர்வினையாக என்னவெல்லாம் நடந்திருக்கும்?

ஆனால் இப்போது சம்பந்த பட்ட நாடுகளை தவிர மற்றவர்கள் வாளாதிருப்பது எதனால்?

இதுவரை எந்த கண்டனமும் வெளியிலிருந்து வராதது எப்படி?

ஜப்பான் மன்னிப்பு கேட்டதை ஜப்பானின் தயாள குணமாக பார்த்து அதை பாராட்டவும் முடிவதின் பின்னணி என்ன?

இதையே சீனா ஏற்று அமைதியாகிவிட வேண்டும் என சிலர் எப்படி நினைக்கிறார்கள்?

இப்போதும் ஜப்பான் சீனாவில் நடக்கும் கலவரங்களுக்கு சீனாவிடமிருந்தே மன்னிப்பை கேட்பதும், அதற்கும் ஆதரவு கிடைப்பதும் எப்படி?

[ஐநா செயலர் அனன் தெரிவித்த கருத்து கூட பொருளாதாரத்தை முன் வைத்து, ஜப்பானிய உணர்வுகளையே பிரதிபளிப்பதாக உள்ளது]

இப்படி யாருக்குமே எந்த கருத்தும் இல்லாமல் போனது விந்தை தான்.
(தொடரும்)

Get Nandalaalaa atom feed here!

Saturday, April 23, 2005

மோசமாகும் அண்டை நாட்டு உறவுகள் - ஜப்பான்.

ஜப்பானிய எதிர்ப்பு - சீன தெருக்களில்


இரண்டாம் உலக போருக்கு பின், இரு நாடுகளுக்குமிடையே முதன்முதலாக 1972ல் தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டன. அதற்கு பின் இன்று வரை 17 முறை ஜப்பான் தன் தவறுகளுக்காக மன்னிப்பு கேட்டுள்ளது.

கடைசியாக 2001ல் சீனா சென்ற கொய்ஜுமியும் ஜப்பானின் கடந்த கால தறுகளுக்காக சீன மக்களிடம் மன்னிப்பு கேட்டார். 2001க்கு பிறகு, ஜப்பானிய பிரதமர் சீனாவுக்கு வருகை தருவதற்கு ஒப்புதல் சீன அரசு அளிக்கவில்லை. (1998ல் சீன அதிபர் ஜியங் ஜமின் சென்றது தான் ஒரு உயர்மட்ட சீன தலவரின் கடைசி ஜப்பான் பயணம்) இதற்கு காரணம் கொய்ஜுமியின் யஸுகுனி ஆலய பிரவேசம் தான்.

யஸுகுனி-போரில் இறந்த ஜப்பானிய வீரர்களின் & போர்க்குற்றவாளிகளின் நினைவிடம்யஸுகுனி ஆலயம், போரில் இறந்த ஜப்பானிய போர் வீரர்களின் ஆன்மா உறையும் இடமாக ஜப்பானியர்களால் வணங்கப்பட்டு வருகிறது. போரில் மரணம் அடைந்தவர்களின் பெயர்கள் (சுமார் 2.5 மில்லியன்) அங்குள்ள ஆன்மாக்களின் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது. போரிட்டு இறந்தவர்களுடன், இரண்டாம் உலக போரில் ஜப்பான் தோல்வி அடைந்ததை அவமானமாக கருதி தற்கொலை செய்துகொண்டவர்களின் பெயர்களும் இதில் அடக்கம்.

விசாரணையில் முன்னாள் ஜப்பான் பிரதமர் ஹிடொகி டொஜொஆனால் இதில் சர்ச்சைக்குறியது, முன்னாள் ஜப்பான் பிரதமர் ஹிடோகி டொஜொ உள்ளிட்ட 14 பெயர்கள் அங்குள்ள ஆன்மாவின் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதுதான். இந்த 14 பேரும் நேச நாடுகளால் டோக்யோ போர்க்குற்ற விசாரணை முடிவில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டவர்கள். இதில் ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஹிடோகி டொஜொ மரண தண்டனை விதிக்கப்பட்டவர். இவர் பெயரை 1978ம் ஆண்டு ஆன்மாவின் புத்தகத்தில் சேர்த்தது இதை நிர்வகித்து வரும் அமைப்பு. (இந்த ஆலயம் ஜப்பானிய அரசின் நேரடி நிர்வாகத்தில் இல்லை) இது ஜப்பானின் போர்க்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட நாடுகளின் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. (இந்த பெயர்களை நீக்குவதற்கு ஜப்பானிய பாரளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டும், தீவிர ஜப்பானிய தேசிய வாதிகளால் எதிர்க்கப்பட்டு, முயற்சி தோல்வியடைந்தது)

இத்தகைய பின்னணி கொண்ட யஸுகுனி ஆலயத்திற்கு ஜப்பான் பிரதமர் கொய்ஜுமி நான்கு முறை (2001ல் கொய்ஜுமி பதவியேற்றதிலிருந்து ஒவ்வொரு வருடமும், இதுவரை 4 வருடங்களில் 4 முறை) சென்றது, (உலக அமைதிக்காக பிரார்த்திக்கவே அங்கு சென்றதாக கொய்ஜுமி விளக்கம் கூறினாலும்) சீனா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளின் எதிர்ப்பை பெற்றது.

(இதற்கிடையே, கடந்த பிப்ரவரி 20ல் ஜப்பான் அமெரிக்காவுடன் சேர்ந்து, தய்வன் ஒரு பொது பாதுகாப்பு பிரச்சினை என்றும், அதை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கவேண்டும் எனவும் கூறியது. சீனா - தய்வன்இது சீனாவுக்கு உச்சகட்ட கோபத்தை ஏற்படுத்தியதில் ஆச்சர்யமில்லை. 1949ல் சீனாவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சி ஏற்பட்டதும், தய்வன் (தீவு) தன்னை பெரு நில சீனாவிலிருந்து துண்டித்துக்கொண்டு, தான் ஒரு சுதந்திர நாடு என பிரகனடப்படுத்தியது. ஆனால் தய்வனின் சுதந்திர பிரகடனத்தை ஏற்க சீனா மறுத்துவிட்டது. மறுபடி சீனாவுடன் இணைத்துக்கொள்வது என்றும் முடிவெடுத்தது. தற்போதைய நிலையில் தய்வன் சுயாட்சியுடன் கூடிய சீனாவின் ஒரு பகுதி. ஆனாலும் அமெரிக்கா ஆதரவுடன் தய்வான் அவ்வப்போது சீனாவை சீண்டுவதும் வழமைதான். இம்முறை ஜப்பானும் சேர்ந்துகொள்ள, சீனா கடும் எதிர்வினையாற்றியது. அது தயவன் தன்னை தனி நாடு என அறிவித்துக்கொள்ளுமானால் அதன் மீது ஆயுதப் பிரயோகம் -போர்- செய்ய வகை செய்யும் ஒரு சட்டத்தை சீன பாராளுமன்றம் பிப்ரவரி 2005ல் இயற்றியது.)

நகஸகி-குண்டு பையனின் நாய் குடை1948, ஆகஸ்ட் 6 மற்றும் ஆகஸ்ட் 9. இந்த இரு நாட்களில் தான் ஹிரோஸிமாவிலும், நகஸகியிலும் அமெரிக்காவின் வான் படை, உலகின் முதல் மற்றும் கடைசி (இன்று வரை) அணு ஆயுத தாக்குதலை நடத்தியது. அது ஹிரோஸிமாவில் 140,000 பேர்களையும், நகஸகியில் 70,000 பேர்களையும் பலி கொண்ட, உலகின் மிக கொடூரமான பேரழிவினுள் ஒன்றாக ஆனது. அதுவே உலகப்போரை முடிவுக்கு கொண்டுவந்தது. அணு ஆயுதத்தின் பயங்கரத்தையும் உலகுக்கும், போரின் கொடுமையை ஜப்பானியர்களுக்கும் உணர்த்தியது. அத்துடன் ஜப்பானியர்களின் ஆதிக்க வெறிக்கும், போரின் பெயரால் அவர்கள் நடத்தி வந்த மனித இனப்பண்பிற்கு ஒவ்வாத அட்டூழியங்களுக்கும் ஒரு முடிவு கட்டியது.


அன்று முதல் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தன்னை ஓர் போரை வெறுக்கும் ஒரு தேசமாக, அமைதி நேசனாக வெளிக்காட்டி வந்துள்ளது ஜப்பான். (இந்தியாவும், அதனை தொடர்ந்து பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக அறிவித்தபின், இரு நாடுகளுக்கும் எதிர் நடவடிக்கையில் இறங்கியதில் முதன்மையானது ஜப்பான். அந்த அளவிற்கு மற்ற நாடுகளின் ஆயுத குறைப்பை அந்நாடு வலியுறுத்தி வருகிறது) இதனடிப்படையிலேயே, உலக வங்கி, ஐநா வின் வளர்ச்சி பணிகள் பலவற்றுக்கும் பல பில்லியன் டாலர்களை வாரி வழங்கி வருகிறது ஜப்பான். ஐநாவின் மொத்த வரும்படியில் 20% ஜப்பானின் பங்களிப்பாகும் (இது அமெரிக்காவிற்கு அடுத்த நிலை). உலகமெங்கும் பல வளரும் நாடுகளுக்கும் பண உதவி செய்து வருவதும், கொடையளிப்பதுமாக தன்னை உலக வளர்ச்சியை விரும்பும் ஒரு தேசமாக மற்ற நாடுகளுக்கு உணர்த்த முயல்கிறது. (பயணாளர்கள் பட்டியலில் இந்தியாவும், இலங்கையும் உண்டு)


யஸுகுனி- கொய்ஜுமி வழிபாடுஆனால், இத்தகைய செயல்களுக்கு முரண்பாடாக, ஜப்பானிய பிரதமர்கள் யஸுகுனி ஆலயம் செல்வது பார்க்கப்படுகிறது. இவை ஜப்பானியர்கள் போர் குற்றங்களையும் அத்துமீறல்களயும் ஓர் வீரச்செயலாகவும், போர்க்குற்றவாளிகளை புனிதர்களாகவும் போற்றுவதாகவே ஜப்பானியர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிகிறது. அவர்களின் மேல் சந்தேகம் கொள்ளவைக்கும் இச்செயல்கள் அண்டை நாடுகளுடனான உறவை மேலும் சீர்குலைக்கவே செய்கிறது. இது ஜப்பானியர்களின் நம்பகத்தன்மையை சந்தேகிக்க ஏதுவாகிறது.

இப்படி தன் அண்டை நாடுகளுடனான உறவை, தொடர்ந்து மோசமாக்குவதன் மூலம் ஜப்பான் சாதிக்க விரும்புவது என்ன?

(தொடரும்)
ஜப்பானின் மன்னிப்பு கோரல் - முரண்பாடு.

Get Nandalaalaa atom feed here!

Friday, April 22, 2005

ஜப்பானிய எதிர்ப்பு - சீன தெருக்களில்.

சீன தெருக்களில் மக்கள் ஆர்ப்பாட்டம். வார கடைசி நாட்களில், சீன நகர தெருக்களில் மக்கள் கூடுகிறார்கள். அது சில நூறுகளிலிருந்து 20,000 மக்கள் வரை கொண்ட கூட்டமாக உள்ளது. ஜப்பானிய வர்த்தக நிறுவனங்கள் மீது கல்லெறிகிறார்கள். ஜப்பானிய பொருட்களை வாங்காதிருக்கும் படி கோஷமிடுகிறார்கள். பேரணியாக சென்று தூதரக கட்டிடத்தின் முன் ஜப்பான் அரசை எதிர்த்து கோப கோஷமிடுகிறார்கள். ஜப்பானுக்கு ஐநா பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பினர் கோரிக்கையை எதிர்த்தும் கோஷமிடுகிறார்கள். உச்சகட்டமாக தக்காளி, முட்டை, கல் ஆகியவை எறியப்படுகின்றது.


இதில் ஆச்சரியப்படவைப்பது, இவை அனைத்தும் சீனாவில் நடப்பது தான். டியனன்மென் சதுக்கம்-நசுக்கப்பட்ட எதிர்ப்புக்குரல்சீனாவில் தெருவில் இறங்கி கோஷமிடுவதோ, பேரணி நடத்துவதோ சாதாரண விடயமில்லை. இதற்கான அரசு அனுமதி மறுக்கப்படுவதுடன், அனுமதி கேட்டவர்களை சிறையிலடைப்பதும் அங்கே சாதாரண நிகழ்வு. மீறி ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களை சீன அரசு கையாளும் விதத்திற்கு ஜூன் 6 1989ம் ஆண்டில் டியனன்மென் சதுக்கத்தில் கூடிய மாணவர்களை சீன அரசு கையாண்ட விதமே சாட்சி. ஆனால் இப்போது அரசு அனுமதியுடனும், (பெரும் அசம்பாவாதங்களை தவிர்க்க வேண்டி) அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு துறையினரின் கட்டுப்பாட்டிலும் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. இதன் காரணமாகவே இது சீன அரசே ஏற்பாடு செய்த நிகழ்வுகள் என ஜப்பானிய ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.

இந்த குற்றச்சாட்டில் முழு உண்மை இல்லை. மக்களை தெருவில் இறங்க அனுமதித்ததின் மூலம் ஜப்பானிய அரசுக்கு தன் எதிர்ப்பை சீன அரசு வெளிப்படுத்தியுள்ளது என்றே கொள்ளவேண்டும்.

சீனாவின் இந்த கோபத்திற்கு காரணம், சமீபத்தில் ஜப்பானிய அரசாங்கம் ஹிடோகி டொஜோ படத்துடன் சீன ஆர்ப்பாட்டக்காரர்கள்அனுமதித்த நடுநிலை பள்ளி பாட புத்தகம் ஒன்று. இதில் ஜப்பானிய ராணுவம் சீனாவை ஆக்கிரமித்தபோது விரும்பத்தகாத 'சில சம்பவங்கள்' நடைபெற்றதாக எழுதப்பட்டுள்ளது. இப்படி 'சில சம்பவங்கள்' என குறிப்பது ஜப்பான் செய்த போர்க்கால அக்கிரமங்களை மறைக்கும் ஒரு முயற்சி என சீன தரப்பு சொல்கிறது. இது சீனாவை மட்டுமின்றி இரண்டாம் உலக போர் முடிவதற்கு முன் ஜப்பானால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மற்ற ஆசிய நாடுகளையும் அதிருப்திக்குள்ளாக்கி உள்ளது.

ஜப்பான் எதை மறைப்பதாக சீனா குற்றம் சாட்டுகிறது? ஜப்பானிய ராணுவம் 1930ல் மஞ்சுரியாவை கைப்பற்றியபின் 1937ம் ஆண்டு சீனாவின் நாஞ்சிங் பகுதிக்குள் நுழைந்தது. அங்கே ஜப்பானிய ராணுவம் மூன்றே வாரங்களில் கொன்று குவித்த சீனர்களின் எண்ணிக்கை 3 லட்சம் (1.5 லட்சம் என்பது ஜப்பானிய தரப்பு). (இது 'நாஞ்சிங் படுகொலை' என்று வரலாற்றில் குறிக்கப்படுகிறது.) பல்லாயிரக்கணக்கில் பெண்கள் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியது ஜப்பானிய ராணுவம். மேலும் ஆயிரக்கணக்கில் பெண்களை சிறைபிடித்து ஜப்பானிய ராணுவத்தினருக்கு பாலியல் கொத்தடிமைகளாக ஆக்கியது. இப்படிப்பட்ட கோர தாண்டவத்தை 'சில சம்பவங்கள்' என மறைப்பதாக சீனா நினைக்கிறது.

எதிர்வினையாக ஜப்பானில், சீன அரசை எதிர்த்தும் ஆர்ப்பட்டமும், சீன தூதருக்கு பார்சலில் பிளேடு, சிவப்பு சாயமும் அனுப்புவதும் நடந்துள்ளது. சீன வர்த்தக நிறுவனங்களின் மேல் தாக்குதலும் நடைபெற்றுள்ளன. ஆனால் இதற்கு ஜப்பானிய அரசு வருத்தம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானிய அரசு, சீனாவில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு சீன அரசின் தூண்டுதலே காரணம் என்றும், ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர அங்கத்தினராகும் ஜப்பானின் கோரிக்கையை தடுக்கவே சீன அரசு இவ்வாறு செய்வதாகவும் குற்றம் சாட்டுகிறது. (ஜப்பான் ஐநா பா.சபையில் நிரந்தர உறுப்பினராவதற்கு சீன அரசு வெளிப்படையாகவே தன் எதிர்ப்பை தெரிவித்து வந்துள்ளது.) மேலும் சீன அரசு சீனாவில் வாழும் ஜப்பானியர்களையும், வர்த்தக நிறுவனங்களையும் காக்க வேண்டும், அத்துடன் ஜப்பானிய தூதரகம், தூதர் இல்லம், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றின் மேல் நடைபெற்ற வன்முறைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரியது.

இந்த கோரிக்கைகளுடன் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் நொபுடக மச்சிமுரா கடந்த 17ம் தேதி சீனா விரைந்தார். சீன வெளியுறவு அமைச்சர் லீ ஜவோக்சிங்-ஐ சந்தித்து ஜப்பானிய அரசின் கோரிக்கையை வைத்தார். ஆனால் சீன அரசு அதை முற்றாக நிராகரித்ததுடன், ஜப்பானின் போர் கால அக்கிரம வரலாற்றை ஜப்பான் நேராக எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறிவிட்டது. (இக்கருத்தை இந்தியா வந்திருந்த சீன பிரதமர் வென் ஜியாபவ் புது டெல்லியில், பத்திரிக்கையாளர்களுடன் பேசும் போது தெரிவித்துள்ளார்) இரு நாட்டு உறவுகளும் சீரடைய ஜப்பான் இதை செய்தே ஆகவேண்டுமென சீனா வலியுறுத்துகிறது. 19ம் தேதி, தோல்வியுடன் சீன பயணத்தை முடித்தார் மச்சிமுரா.

ஐநா பொது செயலாளர் கோஃபி அனன் இரு நாடுகளும் தங்களுக்கிடையேயான கடுமையை குறைத்து, பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையே (ஏப் 15) ஜப்பானிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கைவிடும்படி சீனர்களை சீன அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆனாலும், 16,17 தேதிகளில் சீனாவில் பல நகரங்களில் ஆர்பாட்டங்கள் நடந்தது. இது வரை நடந்தவற்றில் மிகப்பெரியதாக, 20,000 பேர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் ஒன்று ஷாங்ஹை நகரில் நடைபெற்றது. இத்துடன் தொடர்ந்து மூன்றாவது வாரமாக (வார கடைசி நாட்களில் மட்டும்) ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது.

இப்பொதைக்கு ஜப்பானிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் சீனாவில் உடனடியாக முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. ஒருவேலை ஆர்ப்பாட்டங்கள் முடிவுற்றாலும், ஜப்பான் மேலான வெறுப்புணர்வு சீன மக்களின் மனதில் தொடருவதற்கான காரணங்கள் அழிக்கப்படாமல் அப்படியே உள்ளன என்பதே வருத்தத்திற்குறியது.

தற்போதய சூழலில் இரு நாட்டு உறவுகளும் மேலும் மோசமடையும் சாத்தியக்கூறுகளே தென் படுகின்றன.
(தொடரும்)
தொடர்ச்சி: மோசமாகும் அண்டை நாட்டு உறவுகள் - ஜப்பான்.

Get Nandalaalaa atom feed here!

Thursday, April 21, 2005

இந்தியா, பாகிஸ்தான்: நிகழ்வு - இரண்டு!

நான்காண்டுகளுக்கு முன்பும் முஷாரப் இந்தியா வந்திருந்தார். அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாய், முஷாரப் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால், முஷாரப்பின் அப்போதைய இந்திய பயணம், தாஜ்மஹால், அவர் பிறந்த வீடு, இவைகளை பார்த்ததுடன் வேறு பலனின்றி தோல்வியில் முடிவடைந்தது. பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால், வழக்கமான கூட்டறிக்கையும் வெளியிடப்படவில்லை.

அதனுடன் ஒப்பிடும் போது இப்போதைய பேச்சு வார்த்தை வெற்றிகரமானது என்றே கொள்ளலாம். ஆனால் இது இரு நாடுகளுக்கு இடையேயான நீண்ட கால பிரச்சினைகளுக்கு இறுதி தீர்வாக கொள்ளமுடியாது. மாறாக இது ஒரு நல்ல துவக்கம் மட்டுமே.

கடந்த காலங்களில் இருந்த பாக்கிஸ்தானின் தலைவர்களுடன் ஒப்பிடும் போது, முஷாரப் அதிக பலம் வாய்ந்தவராகவே தென்படுகின்றார். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்களுக்கு உள்ள பல பலவீனங்கள் இவருக்கு இல்லை. குறிப்பாக பாக்கிஸ்தானில் உள்ள மத அடிப்படைவாத வலதுசாரிகளின் குரலுக்கு செவிமடுக்க வேண்டிய கட்டாயம் இவருக்கு மிகக்குறைவே.

இதன் காரணமாகவே முஷாரப்பினால் துணிந்து இந்தியாவுடனான உறவை மேம்படுத்த முயற்சி மேற்கொள்ள முடிகின்றது. இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்வது இந்திய அரசின் கைகளில் உள்ளது.

அவ்வகையில் மன்மோகன் தலைமையிலான அரசும் சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவே கொள்ளலாம்.

இரு நாடுகளுமே கஷ்மீர் பிரச்சினையை தற்போதைக்கு பின் தள்ளி, ஏனையவற்றில் கவனத்தை செலுத்துவது வரவேற்புக்குறியது. இதன் மூலமே கூட கஷ்மீர் பிரச்சினையின் தீவிரம் குறையவும் வாய்ப்புண்டாகலாம்.

ஆனாலும் கஷ்மீர் முற்றாக புறந்தள்ளக்கூடிய ஓர் விஷயமல்ல. அது என்றைக்குமே புகைந்துகொண்டிருக்கும் எரிமலை. வெடிக்கும் ஆபத்து எந்நேரமும் காத்திருக்கிறது. விரைவில் கஷ்மீர் பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக எடுத்துகொள்ளப்பட வேண்டும். அப்படி கஷ்மீர் பிரச்சினையை கையாலும் நேரத்தில் இரு நாடுகளின் உறவு இப்போதைய நிலையிலிருந்து மிகவும் பண்பட்டிருக்க வேண்டும். அந்நிலையை அடைவதற்கு இப்போதிலிருந்து இரு நாட்டு செயல்பாடுகளும் வழி செய்ய வேண்டும்.

இப்போதைக்கு கட்டுப்பாட்டு எல்லை ஊடாக பயணிகள் பேருந்து, சரக்கு லாரிகள் இயக்க ஒப்புக்கொண்டிருப்பது, இரண்டு பகுதி மக்களும் சந்தித்துகொள்ள எல்லையில் வசதி செய்து தருதல், இரு நாட்டு சிறைகளிலும் உள்ள கைதிகளை விடுதலை செய்தல் எல்லாம் இரு நாட்டு மக்களுக்கிடையே ஒரு புரிந்துணர்வு ஏற்படுத்த உதவும்.

போரின் மூலமாக அடையக்கூடிய பலன் எதுவும் இல்லை என்பதை இரு நாட்டு மக்களும் உணரச்செய்வதாக இக்காலக்கட்டத்தில் செயலாற்றவேண்டியது, இரு நாட்டு அரசுகளுக்கும் முக்கியமானது. ஆனால் இவ்விரு நாடுகளிலுமே, கஷ்மீர் பிரச்சினையை ஊதி பெரிதாக்கும் சக்திகள் உள்ளன. அச்சக்திகளுக்கு கஷ்மீர் என்றென்றைக்கும் புகைந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் அவர்களின் அரசியல் எதிர்பார்ப்புகள் கைகூடும்.

இப்போது கூட பாக்கிஸ்தானிய எதிர்கட்சிகள் கஷ்மீர் விடுத்து மற்றவைகளை பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தியாவிலும் ஹுரியத் (இது இந்திய உளவு அமைப்பால் உருவாக்கப்பட்ட ஒன்று) அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆயுதமேந்திய குழுக்களும் எதிர்விணையாற்றலாம். மேலும் கஷ்மீருக்கு வெளியேயுள்ள வேறு சில அடிப்படைவாத அமைப்புகளும் கஷ்மீர் பிரச்சனையை எழுப்பலாம். இதற்கு இந்திய அரசு தரப்பு பணிந்துவிடக்கூடாது.

இப்போதய நிலயில் இரு நாடுகளுக்கிடையேயான இறுக்கம் தளர்ந்தால், இவைகளின் ராணுவத்திற்கான செலவு குறைந்து, மக்கள் நலன் சார்ந்த கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு திட்டங்களை அதிகரிக்கலாம். இது இரு நாடுகளையுமே பொருளாதார மேம்பாட்டிற்கு இட்டுச்செல்லும்.

ஏற்கனவே பொருளாதார சுழலில் சிக்கியுள்ள பாக்கிஸ்தான், ஐ.நா பாதுகாப்பு சபை ஆசையில் உள்ள இந்தியா ஆகிய இரு நாடுகளுமே இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.

Get Nandalaalaa atom feed here!

Wednesday, April 20, 2005

புதிய பாப்பரசர் - தொடரும் ஏமாற்றம்!

265வது பாப்பரசராக, 78 வயதான ஜோஸப் ரட்சிங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புதிய பாப்பரசரை தெரிவு செய்ய கூடிய 117 கர்தினல்களுள், ஜெர்மானியரான இவரே மூத்தவர். மற்ற அனைவரும் மறைந்த பாப் இரண்டாம் ஜான் பால் அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள். மறைந்த இரண்டாம் ஜான் பால் அவர்கள் கர்தினலாக இருந்த காலத்திலேயே இவரும் கர்தினாலாக இருந்தவர்.

இவர் மறைந்த பாப் ஜான் பாலுக்கு நெருக்கமானவர். அவரின் பல்வேறு பழமைவாத முடிவுகளுக்கு பின்னணியில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாற்றங்கள் குறித்து எவ்விதமான சமாதானத்திற்கும் இடங்கொடுக்காமல் எதிர்த்து வந்தவர். கத்தோலிக்க திருச்சபைக்குள் மாற்றத்தை எதிர்ப்பவர்களுள் முதன்மையானவர்.
பழமையை போற்றுபவராகவும், கட்டிக்காப்பவராகவும் அறியப்படுபவர்.

இவர் கடுமையாக எதிர்ப்பவைகள்:

1.கன்னியாஸ்திரிகளுக்கு குருமார் அந்தஸ்து.
2.பாதிரியார்களை திருமண பந்தந்திற்கு அணுமதிப்பது.
3.மீளமுடியாத கடும் நோயுற்றோரை இறக்க அனுமதிப்பது. (கருணை கொலை)
4.கருத்தடை.
5.கருக்கலைப்பு.
6.ஓரினச் சேர்க்கை.
7.திருமண பந்தமின்றி ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்தல்.
8.ராக் இசை.
9.க்ளோனிங்.
10.உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை.

இந்த முறை கத்தோலிக்கர்கள் அதிகம் வாழும் தென் அமெரிக்கா அல்லது ஆப்ரிக்க, ஆசிய நாட்டவர் பாப்பரசராக ஆக தேர்ந்தெடுக்க படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அது பொய்யாக்கப்பட்டு மீண்டும் ஒரு ஐரோப்பியர் ஒருவரே வாடிகன் தலைமையை ஏற்கிறார்.

பல்வேறு மாற்றங்களுக்கான கோரிக்கைகள் கத்தோலிக்கர்களால் எழுப்பப்பட்டு வரும் இவ்வேலையில், ஒரு பழமைவாதியை பாப் ஆக தெரிவு செய்ததிலிருந்து, எவ்வித மாற்றங்களுக்கும் திருச்சபை தயாரில்லை என்பது உணர்த்தப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு ஏமாற்றமே என்ற போதும், பழமைவாதிகளுடன் சமாதானம் ஏற்பட்டுள்ளதாகவே கூறப்பட்டுகிறது.

இப்போதைய கால கட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையை எவ்வித மாற்றமும் இன்றி வழி நடத்தி செல்லக்கூடிய ஒருவர் தேவை என்பதால், 78 வயதான இவர் தெரிந்த்டுக்கப்பட்டுள்ளார். மிக அதிகமாக ஓர் 10 ஆண்டுகள் வரை பதவி வகிக்கும் சாத்தியக்கூறுகள் மட்டுமே (வயது காரணமாக) இருக்குமென்பதால், மாற்றங்களை பற்றி இவர் காலத்துக்கு பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்ற சமாதானம் பழமைவாதிகளுக்கும், மாற்றம் வேன்டுவோருக்கும் இடையே ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இவரது தேர்வுக்கு பிற்போக்கு கிருத்துவரான அமெரிக்க அதிபரின் ஆதரவும் இருந்ததாக தெரிகிறது. கிருத்துவ நாடுகளுக்கும், இஸ்லாமிய நாட்டு மக்களுக்கும் இடையே ஓர் சரியான புரிந்துணர்வு தேவைப்படும் இக்கால கட்டத்தில், ஒரு பழமைவாதி வாதிகனுக்கு தலைமை ஏற்பது எத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்தும் எனபது போகப்போக தெரியும்.

Get Nandalaalaa atom feed here!

Tuesday, April 19, 2005

இந்தியா, பாகிஸ்தான்: நிகழ்வு - ஒன்று!

நிகழ்வு - ஒன்று: கிரிக்கெட் தொடர்!
வழமையான இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்களைப்போலவே இந்த முறையும் பலத்த எதிர்பார்ப்புடன் தொடங்கியது.

பலமான அணி என்ற தோற்றத்துடன் இந்தியாவும், குறைந்த அனுபவத்துடனான இளம் அணியாக பாகிஸ்தானும் களமிறங்கின. அனுமானித்தபடியே டெஸ்ட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் ஒன்றை வென்று இந்திய அணி தன் மேன்மையை நிரூபித்தது.

தொடரையே வென்றுவிட்ட பாங்கில் மூன்றாவது மற்றும் இறுதி போட்டியை எதிர்கொண்டது இந்திய அணி. இக்காரணத்தாலெயே வெல்வதற்கு வேண்டிய அழுத்தத்தை கொடுக்காமல், டிரா செய்யும் முனைப்புடனே ஆடியது (குறிப்பாக இறுதி இன்னிங்ஸில்).

தொடரை இழக்கக்கூடிய ஆபத்திலிருந்த பாகிஸ்தான் அணியோ டாஸில் வென்ற அனுகூலத்தை கையகப்படுத்தும் விதமாக, அதிக ஓட்டங்களை (முதல் இன்னிங்ஸில்) எடுத்து இந்திய அணிக்கு அழுத்தம் கொடுத்தது. 90% சந்தர்ப்பங்களில் போராடாமல் அழுத்தத்திற்கு சரணடையும் தன்மைகொண்ட இந்திய அணி, இம்முறையும் யாரையும் ஏமாற்றாமல், பாகிஸ்தான் அணியை வெல்ல வைப்பதற்கு வேண்டிய வழியிலேயே விளையாடியது.

இறுதி போட்டியில் வென்றதின் மூலம் பாகிஸ்தான் அணி தொடரை சமன் செய்தது. தொடரை வெல்லவில்லையானாலும், இறுதி போட்டியில் வென்று தொடரை சமன் செய்ததால் அனைவரின் பாராட்டுக்கும் உரியதானது பாகிஸ்தான் அணி. தொடரை இழக்கும் தருவாயிலிருது இவ்வெற்றியின் மூலம் மீண்டு வந்தது, பாகிஸ்தான் அணிக்கு புதிய நம்பிக்கையை அளித்தது.

டெஸ்ட் தொடர் தொடங்கும் போது சமனற்ற நிலையில் இருந்த இரு அணிகளும், ஒரு நாள் போட்டிகள் தொடங்கும் போது சம பலத்துடன் காட்சியளித்தன. இருந்தபோதும் முதலிரண்டு போட்டிகளிலும் வென்றதன் மூலம் இந்திய அணியே பலமான அணி என்ற தோற்றம் மீண்டும் உருவானது.

மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றபோதும், வெற்றிக்கு பேட்டிங் + பவுளிங் + பீல்டிங்கை விட டாஸை வெல்வதே பிரதானம் என்ற தோற்றம் ஏற்பட்டது. இதுவரையில் டாஸ் வென்ற அணியே போட்டியை கைப்பற்றியது. ஆனால், நான்காவது போட்டியில் டாஸில் வென்ற இந்திய அணி தோற்றது.

இரண்டு தொடர் வெற்றியின் மூலம் முன்னணியில் இருந்த இந்திய அணி, இரண்டு தொடர் தோல்வி மூலம் மீதமிருந்த ஆட்டங்களுக்கு சுவை கூட்டியது. இந்த நான்காவது ஆட்டத்தில் தோல்விகண்டிருந்த இந்திய அணிக்கு ஒரே ஆறுதல், ஐசிசி கங்குலியை ஆறு ஆட்டங்களுக்கு விளையாட தடைவிதித்தது மட்டும் தான்.

தன்க்கு எப்போதுமே 'தோல்வி ஒரு தொடர்கதை' என்பதை, ஐந்தாம் ஆட்டத்தைலும் தோற்று நிறுவிய இந்திய அணி, 2-3 என்ற கணக்கில் ஆறாவது மற்றும் இறுதி ஆட்டத்தை எதிர்கொண்டது.(நல்ல வேலையாக டெஸ்ட் தொடர் 3 ஆட்டங்களுடன் முடிந்துவிட்டது).
இப்போட்டியில் வெல்வதின் மூலம் தொடரை சமன் செய்யும் வாய்ப்பு இந்திய அணிக்கும், தொடரை கைப்பற்றும் வாய்ப்பு பாகிஸ்தான் அணிக்கும் இருந்தன.

இத்தகைய முக்கியத்துவத்தை பெற்றுவிட்ட இறுதிப்போட்டிக்கு, கூடுதல் முக்கியத்துவம்-இப்போட்டியை காண பாகிஸ்தான் அதிபர் முஷரப் இந்தியா வந்தது. அவரை கவுரவிக்கும் விதமாக, ஓர் அணியாக விளையாடும் வித்தையை கைவரப்பெறாத இந்திய அணியினர், வெற்றியை பாகிஸ்தானுக்கு அளித்தனர். இதன் மூலம் பாகிஸ்தான் அணியினர் டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தும், ஒரு நாள் தொடரை 4-2 என்ற கணக்கில் வென்றும் தாயகம் திரும்பினர்.

இதற்கிடையில், கிரிக்கெட் போட்டியை சாக்கிட்டு இந்தியா வந்த முஷரப், இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடன் இரு நாட்டு பிரச்சினைகள் குறித்த பேச்சு வார்த்தையை மேற்கொண்டார்.

இதற்கு முன்னரும் இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு காலகட்டங்களில் பல முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவையெல்லாம் பலனளித்ததா இல்லையா என்ற கேள்விக்கு - இரு நாட்டு உறவுகளின் இன்றைய நிலையே பதில் கூறும்.

இருந்தபோதும், இம்முறை நடந்த பேச்சுவார்த்தை, முன்னெப்போதையும் விட, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று - இரு நாடுகளுக்குமே.
எப்படி?
அடுத்த பதிவில்....

இந்தியா, பாகிஸ்தான் - இரு நிகழ்வுகள்!

சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே இரண்டு முக்கிய நிகழ்வுகள்.
1. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடந்துள்ளது.
2. அதை தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் நீண்ட இடைவெளிக்கு பின் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இவை குறித்த செய்திகளை அடுத்த பதிவுகளில் எழுதுகிறேன்.

வணக்கம்!

அனைவருக்கும் முதல் வணக்கம்!
உங்களுடன் இப்பதிவின் மூலம் உரையாடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.
இப்பதிவில், அறிந்ததை எழுத ஆவலாய் உள்ளேன்.
உங்கள் கருத்தை அறிய அதைவிட ஆர்வம்.
இப்பதிவிற்கு வருகை தந்து வாசித்து கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!
அன்புடன்,
நந்தலாலா.